தென்னிந்திய வரலாற்றில் பல்லவர்களின் காலம் புகழ்மிக்கதாகும். களப்பிரர்களின் இருண்ட காலத்திற்குப் பின் பல்லவர்களின் ஆட்சி தோற்றுவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது. பல்லவர்களின் வரலாற்றை அறிய இலக்கியங்கள், பட்டயங்கள், கல்வெட்டுகள், நினைவுச்சின்னங்கள் ஆகியவை சான்றுகளாகப் பெரிதும் உதவுகின்றன. சர்வநந்தியின் ‘லோக விபாகம்’, தண்டியின் ‘அவந்தி சுந்தரி கதை’, மகேந்திரவர்மனின் ‘மத்த விலாச பிரகாசனம்’ போன்ற நூல்களும் திருமுறைகள் எனப்பட்ட தேவாரம், நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம், நந்திக்கலம்பகம், பாரதவெண்பா, பெரியபுராணம் போன்ற சமய நூல்களும் பல்லவர்களின் சமய, சமுதாய, அரசியல் நிலைமைகளை விளக்கும் ஆதாரங்களாகும். இவைகள் தவிர ஏறக்குறைய 300 பட்டயங்களும் 200 கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சிவகந்தவர்மனின் ‘மயிதவோலு’, ‘இரசுடகள்ளி’ பட்டயமும் பரமேச்சுவர வர்மனின் கூரம்பட்டயமும் இரண்டாம் நந்திவர்மனின் காசக்குடி, உதயேந்திரச் செப்பேடுகளும் மிகவும் முக்கியமானவை ஆகும். சமுத்திரகுப்தனின் அலகாபாத் கல்வெட்டும் இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டும் பல்லவர் வரலாற்றை ஒப்பிட்டறிய உதவும் சமகாலச் சான்றுகளாகும்.
அயல்நாட்டுக் குறிப்புகள்
இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யுவான்சுவாங் விட்டுச் சென்ற பயணக்குறிப்புகள் காஞ்சிப் பல்லவர்களைப் பற்றி அறிய உதவும் அயல்நாட்டுச் சான்றுகளாகும். ‘மகாவம்சம்’ எனும் ஈழ வம்சாவளி நூலும் பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மன், ஈழமன்னர் மானவர்மன் ஆகியோரிடையே நிலவிய உறவினைக் குறிப்பிடுகிறது.
பூர்வீகம்
பல்லவர்கள் ‘தொண்டைமண்டலம்’ எனப்பட்ட நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். வடக்கே நெல்லூருக்கும் தெற்கே காவிரி நதிக்கும் மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட பகுதியே தொண்டைமண்டலம் ஆகும். இப்போதுள்ள ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களும் தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் புதுச்சேரியும் சேர்ந்த பகுதியே தொண்டைமண்டலம் ஆகும். பல்லவர்களின் பூர்வீகம் குறித்து இரண்டு முக்கியக் கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, அவர்கள் அயல்நாட்டார் என்பதாகும். பிறிதொன்று அவர்கள் இந்நாட்டுப் பூர்வீகக் குடிகளே என்பதாகும். பல்லவர்கள் தமிழகத்தில் கி.பி.250 முதல் கி.பி.912 வரையில் ஆட்சி செலுத்தினர். பல்லவ அரசர்களைப்பொதுவாக மூன்று வகையினராகக் கூறலாம்.
1. முற்காலப் பல்லவர்கள்: இவர்கள் கி.பி.250 முதல் கி.பி.340 வரையில் பல்லவர் அரசை நிறுவி ஆட்சி செலுத்தியவர்கள்.
2. இடைக்காலப் பல்லவர்கள்: இவர்கள் கி.பி.346 முதல் கி.பி.575 வரையில் ஆட்சி செலுத்தியவர்கள்.
3. பிற்காலப் பல்லவர்கள்: இவர்கள் கி.பி.575 முதல் கி.பி.912 வரையில் பல்லவப் பேரரசை வலிமையுடனும் பெருஞ்சிறப்புடனும் ஆட்சி செலுத்தியவர்கள்.
சரியான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காததால் முற்காலப் பல்லவர்கள் குறித்துத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. ‘பப்பதேவன்’ என்பவன்தான் பல்லவர் ஆட்சியைத் தொடங்கியனவாகக் கருதப்படுகிறான். முற்காலப் பல்லவர்களில் சிவசுகந்தவர்மன் (300 – 325) முதல் சிறந்த மன்னர் ஆவார். இவர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு கிருட்டிணாநதி முதல் தென்பெண்ணை ஆறுவரையுள்ள பகுதிகளை ஆண்டாரெனத் தெரிகிறது. இடைக்காலப் பல்லவர்களில் விஷ்ணுகோபன் (கி.பி.350 – 375) என்பவர் குறிப்பிடத்தக்கவர். சிம்மவிஷ்ணு அரியணை ஏறிய காலம் முதல் பல்லவர் வரலாறு தெளிவாகிறது. சிம்மவிஷ்ணு (கி.பி.570 – 615), முதலாம் மகேந்திரவர்மன் (615 – 630), முதலாம் நரசிம்மவர்மன் (630 – 668), முதலாம் பரமேசுவரவர்மன் (670 – 690), இரண்டாம் நரசிம்மவர்மன் அல்லது இராசசிம்மன் (690 – 728), இரண்டாம் நந்திவர்மன் (731 – 795), தந்திவர்மன் (756 – 846), மூன்றாம் நந்திவர்மன் (847 – 869) ஆகியோர் பிற்காலப் பல்லவ மன்னர்கள் வரிசையில் அடங்குவர். இவர்களின் காலத்தில் கலையும் இலக்கிய வளர்ச்சியும் மிகுந்து காணப்பட்டன. மூன்றாம் நந்திவர்மனுக்கு நிருபதுங்கன், அபராஜிதன், கம்பவர்மன் என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர். இவர்களில் நிருபதுங்கனுக்கும் அபராஜிதனுக்கும் அரசியல் காரணங்களினால் மனவேற்றுமை ஏற்பட்டது. அதனால் அவ்விருவரும் வேற்றரசர்களின் உதவியை நாடினர். இவ்விரு தரப்பினரும் ‘திருப்புறம்பியம்’ என்ற இடத்தில் போரிட்டனர். இப்போருக்குப் பின் நிருபதுங்கனைப் பற்றிய செய்தி ஏதுமில்லை. அபராஜிதன் வெற்றி பெற்றாலும் ஆதித்தன் என்னும் சோழக் குறுநில மன்னரால் கொல்லப்பட்டான். இப்போருக்குப் பின்னர்ப் பல்லவர் ஆட்சி முடிவு பெற்றது. பல்லவர்களின் காலத்தில் மக்களின் ஆதரவு பெற்ற சமய மறுமலர்ச்சி இயக்கம் தோன்றியது. இதனால் சைவ சமய இயக்கங்கள், புத்த, சமண சமயங்களின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி வளரலாயின. பல்லவர்கள் கோயில் வளர்ச்சிக்கும் சிற்பக்கலை வளர்ச்சிக்கும் பெருந்தொண்டாற்றினர். பல்லவர் தலைநகரத்தில் விளங்கிய ‘காஞ்சிக்கடிகை’ புகழ்பெற்ற கல்வி மையமாக விளங்கியது. தமிழக வரலாற்றில் பல்லவர்கள் தனிச்சிறப்புப் பெற்று விளங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Continue Reading →