கோவிலில் சிலையை படம் பிடிக்கக் கூடாது என்பது ஒரு முழு மூடநம்பிக்கை. இதை ஆதரிக்க சரியான காரணத்தை எவராலும் கூறமுடியாது. இந்த மூடநம்பிக்கையை வலுவாக நடைமுறைப்படுத்தவே கோவிலில் உள்ள பிற கல்வெட்டுகளை புடைய்ப்புத்தூண் சிற்பங்களைக் கூட படம் பிடிக்கக் கூடாது என்று சட்டத்திற்கும் மக்கள் உரிமைக்கு புறம்பாக தடை போடுகிறார்கள். அதேநேரம் சில கோயில் நிர்வாகத்தார் விரும்பினால் உரூ.50/- அல்லது 100/- பெற்றுக் கொண்டு படம் பிடிக்க அனுமதிக்கிறார்கள். இதுவே இந்த நம்பிக்கையில் விழுந்த ஓட்டை தான். கோவிலில் படம்பிடிக்கக் கூடாது என்பதற்கு அரசியல் யாப்பின் அடிப்படையில் எந்த சட்ட பிணிப்பும் இருப்பதாகத் தோன்றவில்லை. உன் வீட்டில் எவரேனும் படம்பிடிக்க அனுமதிப்பாயா? அப்படித் தான் கோவிலும் என்கின்றனர். இதை ஆழ்ந்து சிந்திக்கும் கால் கோவில் என்பது வீடு போல அகம் (personal) சார்ந்த முறையல்ல. அது ஒரு பொது முறை. மேலும், உற்பத்தி ரகசியம் சார்ந்த தொழிற்சாலையில் படம்பிடித்தால் உற்பத்தி இரகசியம் வெளியாகிவிடும் என்ற நிலையும் இல்லாதது கோவிலென்பது. மாறாக மக்களின் பக்தி உணர்வு, பண்பாட்டு உணர்வு, வரலாற்று உணர்வு ஆகியவற்றால் பின்னிப்பிணைந்து தான கோவில் என்ற அமைப்பு. ஆகவே மக்கள் தம்மை அதனோடு அடையாளப்படுத்திக் கொள்ள அங்கு படம் பிடித்துக்கொள்ளவே விரும்புவர்.
இப்படி எல்லாம் சொன்னாலும் கோவில் பூசகர்கள் கோவில் கல்வெட்டுகளில் எங்கெங்கே அரசர்கள் தங்கம், வைரம் போன்ற விலைமதிக்க முடியாத பொருளை எங்கே சேமித்து வைத்திருக்கின்றனர் என்று கல்வெட்டாக வடித்துள்ளனர். அதை படித்து சிலர் அவற்றை கவரக்கூடும். நாம் நமது பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும். எனவே கல்வெட்டுகளை படம்பிடிக்க அனுமதிக்க முடியாது எனற பொய்க் கருத்தை பரப்புகின்றனர். இந்திய தொல்லியல் துறை மாநில தொல்லியல்;துறை ஆகியன ஏற்கனவே கல்வெட்டுகள் பற்றி பல நூல்களை வெளியிட்டுள்ளனர் பொக்கிஷம் திருடுவோர் அவற்றை படிக்காமலா இருப்பார்கள். எனவே கல்வெட்டுகளால் நாட்டின் பழங்கால பொக்கிஷங்களுக்கு ஆபத்து என்பது ஒரு முழு கற்பனை.