கோவிலில் சிலையை படம் பிடிக்கக் கூடாதாம்! கூடாதா?

கோவிலில் சிலையை படம் பிடிக்கக் கூடாதாம்! கூடாதா?கோவிலில் சிலையை படம் பிடிக்கக் கூடாது என்பது ஒரு முழு மூடநம்பிக்கை. இதை ஆதரிக்க சரியான  காரணத்தை எவராலும் கூறமுடியாது. இந்த மூடநம்பிக்கையை வலுவாக நடைமுறைப்படுத்தவே கோவிலில்  உள்ள பிற கல்வெட்டுகளை புடைய்ப்புத்தூண் சிற்பங்களைக் கூட  படம் பிடிக்கக் கூடாது என்று சட்டத்திற்கும்  மக்கள் உரிமைக்கு புறம்பாக தடை போடுகிறார்கள். அதேநேரம் சில கோயில் நிர்வாகத்தார் விரும்பினால்  உரூ.50/- அல்லது 100/-  பெற்றுக் கொண்டு படம் பிடிக்க அனுமதிக்கிறார்கள். இதுவே இந்த நம்பிக்கையில் விழுந்த ஓட்டை தான். கோவிலில் படம்பிடிக்கக் கூடாது என்பதற்கு அரசியல் யாப்பின் அடிப்படையில் எந்த சட்ட பிணிப்பும் இருப்பதாகத் தோன்றவில்லை.  உன் வீட்டில் எவரேனும் படம்பிடிக்க அனுமதிப்பாயா? அப்படித் தான் கோவிலும் என்கின்றனர். இதை ஆழ்ந்து சிந்திக்கும் கால் கோவில் என்பது வீடு போல அகம் (personal) சார்ந்த  முறையல்ல. அது ஒரு பொது முறை. மேலும், உற்பத்தி ரகசியம் சார்ந்த தொழிற்சாலையில்  படம்பிடித்தால் உற்பத்தி இரகசியம் வெளியாகிவிடும் என்ற நிலையும் இல்லாதது   கோவிலென்பது. மாறாக மக்களின் பக்தி உணர்வு, பண்பாட்டு உணர்வு, வரலாற்று உணர்வு ஆகியவற்றால் பின்னிப்பிணைந்து தான கோவில் என்ற அமைப்பு. ஆகவே மக்கள் தம்மை அதனோடு அடையாளப்படுத்திக் கொள்ள அங்கு படம் பிடித்துக்கொள்ளவே விரும்புவர்.

இப்படி எல்லாம் சொன்னாலும் கோவில் பூசகர்கள் கோவில் கல்வெட்டுகளில் எங்கெங்கே அரசர்கள் தங்கம், வைரம் போன்ற விலைமதிக்க முடியாத பொருளை  எங்கே சேமித்து வைத்திருக்கின்றனர் என்று கல்வெட்டாக வடித்துள்ளனர். அதை படித்து சிலர் அவற்றை கவரக்கூடும். நாம் நமது பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும். எனவே கல்வெட்டுகளை படம்பிடிக்க அனுமதிக்க முடியாது எனற பொய்க் கருத்தை பரப்புகின்றனர். இந்திய தொல்லியல் துறை மாநில தொல்லியல்;துறை ஆகியன ஏற்கனவே கல்வெட்டுகள் பற்றி பல நூல்களை வெளியிட்டுள்ளனர்  பொக்கிஷம் திருடுவோர் அவற்றை படிக்காமலா இருப்பார்கள். எனவே  கல்வெட்டுகளால் நாட்டின் பழங்கால பொக்கிஷங்களுக்கு ஆபத்து என்பது ஒரு முழு கற்பனை.

Continue Reading →

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்!

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! “The Wanderers Of The Sky And Their Cry Of Melancholy ” என்னும் தலைப்பில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பு லக்பிம சிங்களத் தினசரியின் ஞாயிற்றுப் பதிப்பில் (22.04.2018) வெளியாகியுள்ளது. அக்கவிதை தமிழில் கீழே:

http://e-paper.lakbima.lk/2018/April/last_22_04_18/manjusawa.pdf

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! – வ.ந.கிரிதரன் –

“படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை எப்பொழுதுமே
என்னிதயத்தை ஆழமாகத் தொடுவன.

காலையிலிருந்து
மழை பலமாகப்
பெய்து கொண்டிருக்கிறது.

மழை.
அகதிகளின் கண்ணீர்.
நாடற்ற வான் நாடோடிகள்,
மேகங்களின்
கண்ணீர்,

வழக்கம்போல்
படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை என்னிதயத்தை
ஆழமாகத் தொடுகின்றன.

துயர்மிகு அழுகை.
நாடோடிகளின் துயர் மிகு அழுகை.
வேதனைமிகு அழுகை.
நாடோடிகளின் வேதனை மிகு அழுகை.
அவர்கள் அழுகின்றார்கள்
அவர்கள் இழந்த மண்ணுக்காக.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 281: சங்கக்கவிதைகளும், ஓசையும்..

 கவிஞர் விக்ரமாதித்யன்முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன்அண்மையில் கவிஞர் விக்ரமாதித்யனின் ‘எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு’ என்னும் நூலை வாசித்தேன். கவிஞர் தன் பால்ய காலம் பற்றி, தனது பிறந்த மண்ணான திருநெல்வேலி பற்றி, தன் கவிதைகள் பற்றி, கவிதைகள் பற்றி, தானறிந்த சக இலக்கிய ஆளுமைகள் பற்றி, திரைப்படப்பாடல்களை எழுதிய கவிஞர்களைப்பற்றி, அவர்களின் பாடல் வரிகள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, திமுக அரசியல்வாதிகள் பற்றி, அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, சக கவிஞர்களின் கவிதைகளைப்பற்றி, .. இவ்விதம் பல்வேறு விடயங்களைச் சுவையான, நெஞ்சையள்ளும் நடையில் கூறியிருக்கின்றார். பொதுவாகவே எனக்கு கலை, இலக்கிய ஆளுமைகளின் நனவிடை தோய்தல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. கவிஞர் விக்ரமாதித்யனின் இந்நூலையும் அவ்விதமே வாசித்தேன்.

அவர் நேர்காணலொன்றில் சங்கக்கவிதைகள் பற்றிக் கூறியிருந்த பின்வரும் கூற்று என் கவனத்தைக் கவர்ந்தது: “சங்கக் கவிதைகள் இசை கருதிச் செய்யப்பட்டவையல்ல”. இன்னுமோரிடத்தில் ” தமிழில் திருத்தக்கதேவர், கம்பனிலிருந்துதான் ஓசை, சந்தம் கூடி வருகிறது” என்கின்றார்.

கவிஞரின் இக்கூற்றுகளை வாசித்துக்கொண்டிருந்த போது எனக்கு தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியனின் “இசைத்தமிழ்ச் சிந்தனைகள்” நூலின் ஞாபகம் வந்தது. அதிலவர் சங்க காலத்திலிருந்து தமிழ் இசைப் பாடல்களின் வரலாறு தொடங்குவதாகக் கூறுவதுடன் அதற்கான ஆதாரங்களையும் ஆய்வுரீதியாக முன் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. நூலிலுள்ள ‘கலிப்பாவும் தமிழரின் இசை மரபும்’ என்னும் கட்டுரையில் சங்கத் தமிழ்ப்பாவினங்களில் ஒன்றான கலிப்பா எவ்விதம் பிற்காலத்தில் உருவான கீர்த்தனைகளின் உருவாக்கத்துக்கு முன்னொடியாக விளங்கியது என்றெல்லாம் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. அதில் அவர் கீர்த்தனைகளில் வரும் பல்லவி , அநுபல்லவி மற்றும் சரணம் என்பன ‘கலிப்பாவின் தரவு, தாழிசை. சுரிதகம் என்ற கட்டமைப்புடன் ஓரளவு ஒத்த காட்சியைத் தருவதை உணர முடியும்” என்று கூறுவார் (பக்கம் 61). மேலும் அவர் “கீர்த்தனையிலே சரணங்களே அவற்றின் உயிர்ப்பான உள்ளடக்கப் பகுதியாகத் திகழ்வன. கலிப்பாவில் தாழிசைகளும் அப்படியே. எனவே கீர்த்தனை என்னும் இசைப்பா வடிவத்துக்கு கலிப்பாவின் அமைப்பு – குறிப்பாக ஒத்தாழிசைக் கலிப்பாவின் தரவு, தாழிசை அமைப்பு – ஒரு முன்னோடி நிலை என்பதை நாம் உய்த்துணர முடியும்.” (பக்கம் 61) என்றும் கூறுவார்

Continue Reading →

( மீள்பிரசுரம்: சரிநிகர் ) பிறேமவதி மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் நினைவுகள்

பிரேமாவதி மனம்பெரி1971 ஜேவிபி’யினரின் அரசுகெதிரான புரட்சியின் போது கதிர்காமம் அவர்களின் முக்கியதொரு கோட்டையாக விளங்கியது. அங்கு புரட்சியாளர்களை அடக்கிய இலங்கை அரச படையினர் ஆண்கள், பெண்களென்று பலரைக் கைது செய்தார்கள். அவர்களில் பிரேமவதி மனம்பெரியும் ஒருவர். இரவு முழுவதும் தடுப்புக்காவலில் அவரைப்பலமாகச் சித்திரவதைக்குட்படுத்தினர். அவரிடமிருந்து எவ்விதமான தகவல்களையும் பெற முடியாத நிலையில் ஆத்திரமுற்ற உயர் இராணுவ அதிகாரி அவரை நகரத்தெருக்களினூடு நிர்வாணமாக்கி நடக்க வைத்தார். அவ்விதம் செல்லும்போது இன்னுமோர் அதிகாரி அவரைப்பலமாகத் தாக்கினார். இறுதியில் தபால் நிலையமருகில் அவரைச்சுட்டு உயிருடன் புதைகுழிக்குள் விட்டுச் சென்றனர். பின் மீண்டும் இரு தடவைகள் வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். பிரேமவதி மனம்பெரிக்கு அப்பொழுது வயது 22. அவரைக்கொன்ற இராணுவ அதிகாரிகளான விஜேசூரியா, அமரதாச ரட்னாயக்க ஆகியோர் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றனர். இவர்களில் விஜேசூரியாவை 1988இல் ஜேவிபியினர் பிரேமவதி  மனம்பெரியைக் கொன்றதற்காகச் சுட்டுக்கொன்றனர். சுடப்பட்டு புதைகுழிக்குள் மரணத்தின் விளிம்பில் இருந்தபோதும் அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. யார் மேலும் தனக்குக் கோபமில்லையென்றே கூறியிருக்கின்றார். அந்த மனவலிமை எல்லோருக்கும் வந்து விடாது. பிரேமவதி மனம்பெரி உண்மையான புரட்சிப்பெண். –  பதிவுகள் –


இன்று (ஏப்ரில் 16)  ஜே.வி.பி. ஏப்ரல் கிளர்ச்சியின் 40வது வருட நினைவுநாள்…

இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் 40 வது வருட நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருகின்ற இந்த வேளை அதன்போது கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. 1996ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியின் 25வது வருட நிகழ்வை நினைவை முன்னிட்டு சரிநிகரில் எழுதிய சிறப்புக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று. இக்கட்டுரை எழுதுவதற்காக கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் பெற்றோருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். ஜே.வி.பி தோழர்கள் என்னுடைய இந்த பயணத்தில் உதவினார்கள். குறிப்பாக முற்றிலும் சிங்களப் பிரதேசமான அங்கு அன்றைய சமயத்தில் தமிழர்கள் அச்சமின்றி போய் வரும் நிலை இருக்கவில்லை. என்னோடு வந்த என் சக ஜே.வி.பி. தோழர்கள் என்னுடைய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டனர்.

மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் (*1) எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 – மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் இருந்து சில நாட்களாக திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது. இலங்கையில் முதன் முதலில் பாரிய ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர். 1971 ஏப்ரல் கிளர்ச்சி என அழைக்கப்பட்ட இது அரசாங்கத்தின் கொடூர ஒடுக்குமுறையினால் அடக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட ம.வி.மு. பெண் போராளி மனம்பேரி பற்றி இந்த 40 வது வருட நினைவில் சில குறிப்புகள்.

அவள் கொல்லப்பட்டு 40 வருடங்கள். 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர்கள் கொல்லப்பட்டு 40 வருடங்கள். அவளையும் அவளது தோழர்களையும் கொன்றழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்னமும் வாழ்கிறது. அவர்களது போராட்டம்…?

ஏப்ரல் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அன்றைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி இந்திய படைகளை அனுப்பி உதவினார். இந்தியப் படைகள் தெற்கு காடுகளில் புரிந்த சித்திரவதைகளை பலர் சிங்களத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.) 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அரச படையினால் கொல்லப்பட்ட பெண் போராளிகளில் அவளும் ஒருத்தி. இருபதாயிரத்துக்கும் மேற்ப்பட்ட இளம், ஆண், பெண் போராளிகளை அரச யந்திரம் கொன்றொழித்தது. ஆனால் அத்தனைக்கும் நியாயம் கற்பித்த அரசு, ஒரே ஒரு கொலையை மாத்திரம் படையினரின் அதிகார துஷபிரயோகச் செயல் எனக் கூறி கண்துடைப்புக்காக விசாரணையை நடத்தியது. அவ்விசாரணை தான் பிரேமவதி மனம்பேரியின் கொலை விசாரணை. இதிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் படையினருக்கு எதிரான விசாரணையொன்றில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட ஒரே வழக்கும் இதுதான்.

Continue Reading →

கவிதை: என்னைக் கண்ணீர் உகுக்க விடு! மூலம் (ஆங்கிலம்) – கத்யானா அமரசிங்க ( Kathyana Amarasinghe) | தமிழில் – வ.ந.கிரிதரன் –

கத்யான அமரசிங்க ( Kathyana Amarasinghe) அண்மையில் ஆங்கிலத்தில் கத்யான அமரசிங்க ( Kathyana Amarasinghe)  ஆங்கிலத்தில் எழுதிய கவிதை Let  My Tears Fall என்னும் கவிதை  இது. 83 கறுப்பு ஜுலைக்கலவரத்தால் நாட்டை விட்டே அகதியாகப் புலம்பெயர்ந்து சென்ற தனது தமிழ்ச்சகோதரனை எண்ணி, இதயம் வருந்தி வெளிப்படுத்தும் உணர்வுகளின் வெளிப்பாடு இக்கவிதை. அண்மையில் இவரது  ‘பருத்தித்துறைக் கடற்கரையில்..’ என்னும் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பினை வழங்கியிருந்தேன். இப்பொழுது கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பினைத் தருகின்றேன். பல்லினங்கள் வாழுமொரு சூழலில் இது போன்ற கவிதைகள் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வினை வளர்க்க உதவும். தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.  – பதிவுகள் –


கவிதை: என்னைக் கண்ணீர் உகுக்க விடு!

மூலம் (ஆங்கிலம்) – கத்யானா அமரசிங்க ( Kathyana Amarasinghe) | தமிழில் – வ.ந.கிரிதரன் –

கறுப்பு ஜூலை வானமானது
செவ்விரத்தத்தால் வர்ணமடிக்கப்பட்டிருந்தபோது,
நகரம் வெறுப்பினால் எரிந்துகொண்டிருந்தபோது,
என்னுடைய சகோதரனின் இதயம் காயப்பட்டிருந்தபோது,
அது துண்டுகளாகச் சிதறுண்டிருந்தபோது
நான் எங்கே?

பனையோலை வேலியானது உடைக்கப்பட்டபோது
பூத்துக்குலுங்கும் பூக்கள் சிதைக்கப்பட்டபோது
எனது சகோதரன் தனக்குப் பிரியமான நாட்டை விட்டுப்
பலவந்தமாக ஓடச்செய்யப்பட்டபோது
அத்துடன் தொலைதூர நாடொன்றில்,
நாடற்றவனாகத் தனிமை கவிந்த மனிதனாக
அவன் அமைதியாகக் கண்ணீர் சிந்தியபோது
நான் எங்கே!

Continue Reading →

வரலாறு: கூவக்கரை சித்துக்காடு கல்வெட்டு

 சுந்தரராஜ பெருமாள் கோயில் கோபுர வாயில். நீரின்றி அமையாது உலகு என்பது நம் தமிழ ஆன்றோரின் பட்டறிவு. அதனால் தான் உயிர்களின் பெருக்கம் கருதியும், நிலைத்து வாழ்தல் கருதியும் ஆற்றங்கரை மேட்டில் பழம் நாகரிகங்களை உலகம் முழுதும் தோற்றுவித்து மனித இனம் மேம்படச் செய்த பெருமை நம் தமிழ் இனத்திற்கு உண்டு. மேலைக்கடல்,  கீழைக்கடல் என உலகை வலம் வந்து தாம் பெற்ற அறிவை எல்லாம் அங்கத்து மக்களுக்கு பகிர்ந்து அவரை நாகரீகராக்கி மனிதநாகரீகம் வளர்த்தவர் தமிழ் இனத்தவர்  என்ற வகையில் தமிழரே உலக மூத்த தொல்குடி மக்கள் என்ற கருத்து மிகச்சரியானதே.

ஆற்றின் பயன் அறிந்த தமிழ வேந்தரும் மன்னவரும் கி. பி.8 ஆம் நூற்றண்டில் மக்கள் மேலும் மனப்பக்குவப்பட வேண்டி கோவில் இயக்கத்தை வளர்த்தெடுக்க கோவில்களை ஆற்றை அண்டிய நிலப்பகுதிகளில் கட்டியும் அவற்றை போற்றியும் வந்தனர். இதாவது, காட்டைக்கொன்று ஊரை ஏற்படுத்தி கோவிலைக் கட்டினர். கோவிலின் அன்றாட செயற்பாட்டிற்கும், கோவில் ஊழியர் பிழைப்பிற்கு சம்பளம் பெறவும்வேண்டி  இவ்வாறு கோவில்களை ஆற்றை அண்டி கட்டியெழுப்பினர்.

அன்றாட கோவில் பூசனைக்கு, இதாவது, 3 கால பூசனைக்கு திருவமுது படைக்க நெல் வேண்டும். இந்தத்  திருவமுது கோவில் ஊழியர்களின் குடும்ப உறுபினர்கள் 5-6 பேர் உண்ணத்தக்க அளவிற்கு பகிர்ந்து அளிக்க பெரிய கலன்களில்  சோறு சமைக்கப்பட்டது. இதில் பிராமணர், பிராமணர் அல்லாதார் அடங்குவர். அதே நேரம் கோவில் ஊழியர்கள் பிழைப்பிற்காக பயிரிட்டு நெல் விளைத்துக் கொள்ள  தனியே விளை நிலங்கள் ஒதுக்கப்பட்டன. ஏனென்றால் அக்காலத்தே காசு புழக்கம் எளியோரிடம் பெரிதாக புழங்கவில்லை பண்டமாற்றில் பொருள் தான் புழ்ங்கியது. எனவே விளைநிலத்தில் பயிற்செய்து நெல்லை பெற்று அதை மாற்றி பிறபொருளைப் பெறலாம். இதற்காகவே விளை நிலங்கள் கோயில் ஊழியருக்கு ஒதுக்கப்பட்டன.  இவை பெரும்பாலும் இறையிலி நிலங்கள்தாம். அதோடு கோவில் ஊழியர் வாழ வீடுகளும் கட்டி ஒதுக்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட வீடோ, விளை  நிலமோ கோவில் பணியில் இருக்கும்வரை அனுபவித்துக் கொள்ளலாம் ஆனால்  விற்க முடியாது.  இப்படி கோவில்  இயக்கம் தங்கு தடையின்றி   நடக்க வேண்டுமானால் பயிர்ச்செய்ய நீர் வேண்டுமே, அதனால்  தான் கோவில்களை ஆற்றின் மேட்டிலேயே  அரசர்கள்  கட்டினர்.

தமிழ்நாட்டிலுள்ள பழங்கோவில்களைக் கணக்கெடுத்தால்  அவற்றின் இருப்பிடத்தை நோக்குங்கால் இந்த உண்மை விளங்கும். இது ஒரு வகைப் பாதுகாப்பு (socio economic security) ஆகும். அதனால் தான் இக்கோவில் ஊர்கள் ஓராயிரம் (1,000) ஆண்டுகளாக இன்றளவும் மனித நாகரீகத்தைத் தாங்கி  நிலைத்து  நிற்கின்றன. அரசர்களின் நிருவாகத் தலைநகரங்கள் ஆளும் அரச குடும்பம் .ஒழிந்ததும்  பாழ்பட் டு சிறு கிராமமாக இருப்பதை இன்றும்  காண்கிறோம். அதேபோல வணிகர்கள் குழுமுகின்ற  நகரங்கள் அவ்வணிகர் வரவு நின்றதும் மக்கள் போக்குவரத்து குறைந்து அவையும்  சிற்றூர்களாக ஆகிவிட்டதையும் காணமுடிகிறது.  இப்படி ஒரு தலைவிதி மட்டும் கோவில் ஊர்களுக்கும் நகரங்களுக்கும் நிகழாமை எதனால் என்றால் ஆற்றின் அண்டிய அமைப்பு தான் காரணம் எனலாம்.    ஆறுகள் ஊருக்கு வாழ்வூட்டின.  காஞ்சியில் பல்லவர் ஆட்சி ஒழிந்தாலும் வேகவதி ஆற்றை சார்ந்து கோவில்கள் இருந்ததால் காஞ்சிபுரம்  சிறு கிராமமாக ஆகாமல் தப்பியது.

Continue Reading →

ஆண்டுவட்டத்தைக் கடந்ததொரு இலக்கியப் பயணி: அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணம் பற்றியதொரு பதிவு

எழுத்தாளர் அ.முத்துலிங்கம்தமிழரின் காலக் கணிப்பில் ஒருவரின் அறுபதாண்டு வாழ்க்கை ஒரு ஆண்டுவட்டச் சுற்றைப் பூர்த்திசெய்கின்றது என்பர். அவ்வகையில் எமது தமிழ் இலக்கியவாதியான அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணமும் ஒரு ஆண்டுவட்டப் பயணத்தைக் கடந்து தொடர்கின்றது. அறுபதாண்டுகளாகத் தளராமல், வரட்சி காணாமல் கையிருப்பில் இன்னமும் ஏராளமான ‘விஷயங்களை” வைத்துக்கொண்டு இலக்கியப் பயணமொன்றைப் புகலிடத்திலும் தொடர்வதென்பது எழுத்தாளனுக்கு இலகுவில் கிடைக்கும் பாக்கியமொன்றல்ல.

தற்போது புகலிடத்தில் வாழும் ஈழத்துப் படைப்பாளி அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் எனது அயல் கிராமத்தவர். நான் ஆனைக்கோட்டையில் வாழ்ந்த எழுபதுகளில்; அவர் எழுத்துத் துறையில் அனைவரையும் பிரமிக்கவைத்துக் கொண்டிருந்தார். அவரது முதலாவது சிறுகதைத்தொகுதி ‘அக்கா” வெளிவந்த 1964இல் எனக்கு 10 வயது. நான் தென்னிலங்கையில் பிறந்து நீர்கொழும்பில் இளம்பிராயத்தைக் கடந்தவன். அங்கும் ஒரு நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுத்தாளராக இருந்தார். நான் நூலியல்துறையிலும், எழுத்துத்துறையிலும் ஈடுபட்டிராத அக்காலத்தில் சில சமயங்களில் அறியாமையால் இருவரையும் பெயர் மாற்றிக் குழப்பிக்கொண்டதுண்டு.

நான் புலம்பெயர்ந்தபின்னர் ‘நூல்தேட்டம்” ஆவணத்தொகுப்பின் வேலைத்திட்டத்தில் ஓய்வுவேளைகளில் முழுமையாக ஈடுபடத் தொடங்கிய காலகட்டத்தில்தான் அ.முத்துலிங்கம் அவர்களின் தொடர்பினை வலிந்து தேடிக்கொண்டேன். அப்பொழுது அவர் கனடாவில் இருந்தார். சிரமம் பாராது தனது நூல்களை எனக்கு தபால் பொதிகளில் அவ்வப்போது அனுப்பியும் வைத்திருந்தார். அவரால் அனுப்பப்படும் நூல்களை அவ்வப்போது நான் ஐ.பீ.சீ. வானொலியின் காலைக்கலசம் இலக்கியத் தகவல் திரட்டு  நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி வந்துள்ளேன்.

2004இல் ஒருதடவை இலங்கை சென்றவேளையில் அமரர் பூபாலசிங்கம் அவர்களின் மகன் ராஜனை 14 ஆண்டுகளின் பின்னர் அவரது வெள்ளவத்தை புத்தகக் கடையில் சந்திக்கநேர்ந்தது. அவ்வேளையில் ராஜன் எனக்குத் தந்த நினைவுப்பரிசு ‘அ.முத்துலிங்கம் கதைகள்” என்ற பெருந்தொகுப்பாகும். அந்நாட்களில் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் பெருந்தொகுப்புகள் பரவலாக வெளிவந்திருக்கவில்லை. அதனால் 2003 டிசம்பரில் தமிழினி வெளியிட்டிருந்த அப்பெருந்தொகுப்பு என்னைத் திகைக்க வைத்திருந்தது. எழுத்தாளர் அ.மு.வின் 2003 வரை வெளியான தேர்ந்த 75 சிறுகதைகளை 774 பக்கங்களில் உள்ளடக்கியதாக அந்நூல் இருந்தது.

பத்தாண்டுகளின் பின்னர் 2014இல் நூல் தேடலுக்காகத் தமிழகம் சென்றிருந்த வேளையில் ஈழநாடு பத்திரிகையாளர் அமரர் கே.ஜீ.மகாதேவாவின் அழைப்பையேற்று திருச்சிக்குச் சென்றிருந்தேன். நான் எதிர்பாராத வகையில் அன்று திருச்சிராப்பள்ளி ஆண்டவர் அறிவியல் கல்லூரியில், ஈழத்து இலக்கியத்தை தமது பட்டப்படிப்பிற்காகப் பயிலும் மாணவர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தார். பாடசாலை உயர்வகுப்பு மாணவர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். ‘புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பு” என்ற பொருள்பற்றிப் பேசுமாறு என்னை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கரிகாலன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, எனது அறிமுக உரையை நிகழ்த்தினேன்.

Continue Reading →

பூங்காவனம் இதழ் 30 பற்றிய கண்ணோட்டம்

பூங்காவனம் இதழ் 30 பற்றிய கண்ணோட்டம்பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் 30 ஆவது இதழ் வெளிவந்திருக்கிறது. பிரபல எழுத்தாளரும் உளவளத் துணையாளருமான திருமதி. கோகிலா மகேந்திரனின் முன் அட்டைப் படத்துடன் வெளிவந்திருக்கும் இவ்விதழில் வழமை போன்று நேர்காணல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூலகப் பூங்கா போன்ற பிரதான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

பூங்காவனம் இதழ் மூத்த எழுத்தாளர்கள், சாதனையாளர்கள் என பிரபலமானவர்களது நேர்காணலுடன் வெளிவருவது அதன் சிறப்பம்சமாகும். அந்த வகையில் இவ்விதழில் திருமதி. கோகிலா மகேந்திரன் தனது இலக்கிய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

திருமதி. கோகிலா மகேந்திரன் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் சிவசுப்பிரமணியம் – செல்லமுத்து தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். தந்தை தமிழாசிரியர், அதிபராகப் பணி புரிந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கிராம பள்ளிக்கூடத்தில் கற்ற கோகிலா மகேந்திரன் இடைநிலை மற்றும் உயர் நிலைக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். 1974 இல் விஞ்ஞான ஆசிரியையாக நியமனம் பெற்று 1989 இல் அதிபரானார். 1999 முதல் வலிகாமம் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமை புரிந்ததோடு இடையில் விஞ்ஞான பாடச் சேவைக் கால ஆலோசகராகவும், விரிவுரையாளராகவும், கடமையாற்றியிருக்கிறார். பாடசாலைக் காலத்திலேயே இலக்கியம் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவருக்கு அக்கால அறிஞர்களும் வித்துவான்களும் பக்க பலமாக இருந்திருக்கின்றார்கள்.

இதுவரை 02 நாவல்களையும், 07 சிறுகதைத் தொகுதிகளையும், 03 நாடகத் தொகுதிகளையும், 01 விஞ்ஞானப் புனை கதை நூலையும், 04 தனிமனித ஆளுமை நூல்களையும் 11 உளவியல் நூல்களையும், 01 பெண்ணிய உளவியல் நூலையும்  01 புனைவு இலக்கிய நூலையும் வெளியிட்டுள்ளார். நீண்ட கால எழுத்தனுபவம் கொண்ட இவருக்கு இலக்கிய வித்தகர், கலைச்சுடர், சமூக திலகம், கலைப் பிரவாகம் என்ற கௌரவப் பட்டங்களும் பல விருதுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

பூங்காவனம் இதழ் 30 இல் பதுளை பாஹிரா, மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, எஸ். முத்துமீரான், ஆ. முல்லைதிவ்யன், சந்திரன் விவேகரன், சப்னா செய்னுல் ஆப்தீன், பூகொடையூர் அஸ்மா பேகம், வெலிப்பன்னை அத்தாஸ், என். சந்திரசேகரன், கிண்ணியா ஜெனீரா ஹைருல் அமான், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

Continue Reading →

ஆய்வு: தொல் தமிழில் முருகு

- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -பண்டைத் தமிழ்க்குடி மக்களின் சமுக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அனைத்தும் ‘முருக’ வழிபாட்டு முறைகளுக்கு ஏற்பவே அமைந்து இருந்தன. தமிழ்நாட்டின் அடிகானல்லூர் என்ற இடத்தில் இருந்த மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகப் பழமையுமான மயானங்களில் இருந்த கல்லறைகளில் ‘வேல்’ மற்றும் ‘சேவல்’ சின்னங்கள் கிடைத்துள்ளன. இவை பழங்காலத் தமிழர்களைப் பற்றிய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் மிக முக்கியமானவரும், பெரும் வல்லுரனுமான பேராசிரியர் ‘பீ. டி. சீனிவாசன்’ என்பவருடைய கூற்றின்படி, அடிகானல்லூரில் இருந்த அந்த கல்லறைகள் 7,000 ஆண்டுகளுக்கு முட்பட்டவை. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே ‘வேல்’ வழிபாடும், முருக வழிபாடும் தமிழர்களிடம் இருந்தது. அதில் அவர்கள் தீவிர ஆர்வமும் கொண்டு இருந்தனர். ‘தொல்காப்பியம்’, ‘பத்துப்பாட்டு’ மற்றும் ‘எட்டுத் தொகை’ போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளில் இருந்து அந்தக் காலத்தில் முருக வழிபாட்டு முறையைச் சார்ந்தே பண்டைத் தமிழ்க்குடி மக்களுடைய சமுக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அமைந்து இருந்தன எனத் தெரிய வருகின்றது. “சேயோன் மேய மைவரை உலகம்” எனப் பண்டைத் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிக்கும். இதனால் முருகப்பெருமான் குறிஞ்சி நிலத்திற்கு உரிய தெய்வமாக வழிபடப்பட்டமை புலனாகின்றது. எனவே தொன்மைச் சிறப்புக் கொண்ட தமிழும் முருகு எனப்படும் முருகனும் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

முருகக் கடவுள்
தமிழர்களுக்கு முருகு என்று சொல்லும்போதே மனதெல்லாம் உருகும் சொல்லது. “முருகு” என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ – மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

முருகனின் பெயர்கள்
முருகனுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு அதில் 42 பெயர்கள் வருமாறு,

அரன்மகன், ஆசான், ஆண்டலைக் கொடியுயர்த்தோன், ஆறுபடை வீடுடையோன், ஆறுமகன், கங்கைமைந்தன், கடம்பன், கந்தசாமி, காங்கேயன், கார்த்திகேயன், குகன், குமரன், குழகன், குறிஞ்சிவேந்தன், சரவணபவன், சரவணன், சாமி, சிலம்பன், சுப்ரமணியன், சுரேஷன், சூர்ப்பகைவன், செட்டி, செந்தில்நாதன், செவ்வேள், சேந்தன், சேய், சோமாஸ்கந்தன், சோமாஸ்கந்தன், தாரகற்செற்றோன், தெய்வானைகாந்தன், புலவன், மஞ்ஞையூர்தி, மயில்வாகனன், மாயோன்மருகன், முத்தையன், முருகன், வரைபகவெறிந்தோன், வள்ளற்பெருமான், வள்ளிமணாவாளன், விசாகன், வேலினுக்கிறை, வேள்.

சங்க இலக்கியம் முழுவதும் ஒன்பது இடங்களில் முருகன் என்ற பெயர்சுட்டப்படுகிறது.

“உருவப்பல்தேர்இளையோன்சிறுவன்
முருகற்சீற்றத்துஉருகெழு குருசில்” (பொருநர்.131-132)

“முருகன்தாள்தொழு தன்பரங்குன்று” (பரி.8-81)
“முருகன்நற்போர்நெடுவேள் ஆவி” (அகம்.1.3 )

“சினம்மிகுமுருகன்தன்பரங் குன்றத்து” (அகம்.59:11 )
“முருகன்ஆர்அணங்கு என்றலின்” (அகம்.98:10 )

“முருகன் அன்ன” (அகம்.158:16 )

“முருகற் சீற்றத்து உருகெழு குருசில்” (புறம்.16:2)

“முருகன் சுற்றத்து அன்ன” (புறம்.23:4 )

“அணங்குடை முருகன் கோட்டத்து” (புறம்.299.6 )

முருகு என்னும் சொல் முருகன் என்னும் பொருளில் இடம்பெற்றுள்ளது. முருகு, முருகநழகு என்னும் பொருளைச் சுட்டி நிற்கும்.

Continue Reading →

காக்கை இதழ்க் குழுமம் முன்னெடுத்த மூன்றாவது ஆண்டு கிபி அரவிந்தன் நினைவு உலகத் தமிழ் குறுநாவல் போட்டி 2018 முடிவுகள்

கி.பி.அரவிந்தன்அறிவித்தல்‘ உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ –  (வள்ளுவராண்டு 2049) காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த மூன்றாவது ஆண்டு கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு முடிவுகளை காக்கை குழுமம் வெளியிட்டிருக்கிறது.

சென்னையிலிருந்து வெளிவரும் காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த புலம்பெயர் கவிஞர் ‘கி பி அரவிந்தன்’ நினைவாக ஆண்டு தோறும் இலக்கியப் பரிசுப் போட்டிகளை நடாத்திவருகிறது. அந்த வகையில் மூன்றாவது ஆண்டில் ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ இனை நடாத்தியது. இந்தப் போட்டியில் உலகளாவிய 59 எழுத்தாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் இறுதிச் சுற்றுக்கு 30 குறுநாவல்கள் தெரிவாகின. இந்தக் கடுமையான எழுத்துப்போட்டியின் தெரிவுகளை நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் மதிப்புக்குரிய இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர்கள் மதிப்புக்குரிய பேராசிரியர் அ. ராமசாமி (இந்தியா) மதிப்புக்குரிய எழுத்தாளர் ரஞ்சகுமார் (அவுஸ்திரேலியா) மதிப்புக்குரிய எழுத்தாளர் இளவாலை விஜயேந்திரன் (நோர்வே) கொண்ட  குழு பரிசீலனையில் எட்டப்பட்ட முடிவுகளை காக்கை இதழ்க் குழுமம் 10.04.2018 அன்று முறைப்படி வெளியிட்டிருக்கிறது.

குறுநாவல்களின் பெறுமானம் கருதி பரிசுக்குரியனவாக  14 குறுநாவல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை பூர்வீகமும் – புலம்பெயர்வுமென  இந்தியா, இலங்கை, ஜேர்மனி, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் என தற்போது புவி எங்கு பரந்து வாழும் தமிழர்களது படைப்புகளின் மஞ்சரியாக அமைந்தமை சிறப்பானதாகும்.

பணப்பரிசுகளும் சான்றிதழுமான குறுநாவல்கள் – 7 மற்றும் காக்கையின் ஓர் ஆண்டு சந்தா பெறும் தெரிவுக் குறுநாவல்கள்  – 7 என இவை தெரிவாகியுள்ளன. இந்தக் குறுநாவல்கள் அனைத்தும் காக்கை வெளியீடாக நூல் வடிவம் பெறும் என காக்கை குழுமம் அறிவித்திருக்கிறது..

0.        முதலாவது பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்   கொங்கை – அண்டனூர் சுரா (இந்தியா)
0.        இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்    மைதானம் – சோ. தர்மன் (இந்தியா)
0.        மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்     குரவை மீன்கள் புதைந்த சேறு – மோனிகா மாறன் (இந்தியா)

திருத்தப்பட்ட  பட்டியல் :  09.04.2018 அன்று வெளியாகியிருந்த இரண்டாவது பரிசு ‘இராமன் ஒரு தூர தேசத்து மகாராஜா’  எனும் குறுநாவல் ஊடகமொன்றில் ‘தூர தேசத்து மகாராஜா’  எனும் தலைப்பில் வெளியாகியுள்ளதால் தகுதிநீக்கமடைகிறது.

நான்கு ஆறுதல் பரிசுகள் : 1500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

·         நீலு என்கிற நீலாயதாட்சி – எஸ். ஸ்ரீவித்யா
·         இனியும் விதி செய்வதோ… ! – மைதிலி தயாபரன் (இலங்கை)
·         வெயில் நீர் – பொ. கருணாகரமூர்த்தி  (ஜேர்மனி)
·         நெடுஞ்சாலைப் பைத்தியங்கள் – வி. வல்லபாய் (இந்தியா)

Continue Reading →