” என்னுடைய கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். ” என்று சொல்லும் பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசையில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார். ஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான கதைகளை விதைக்கத்தொடங்கினார். ஜிகினா வேலைசெய்து வாசகரை ஏமாற்றி இருட்டுக்கு இட்டுச்செல்லும் சில கதாசிரியர்கள் செய்யும் வேலையைச்செய்யாது, யதார்த்தங்களை அப்படியே சாயம் பூசாமல், மனதால் மட்டுமே எழுதிக்காட்டுபவர் பாலகுமாரன். இவரது நாவலான ‘ மெர்க்குரிப்பூக்கள்’ இவருக்கு கனதியான அந்தஸ்தத்தை தேடித்தந்தது. படுத்திருந்த பல வாசகர்களை இது நிமிர வைத்தது. அயர வைத்தது. போராட்டத்தைப்பற்றி சிந்திக்கவைத்தது. சின்னச்சின்ன வட்டங்கள் இவரது முதல் சிறுகதைத்தொகுதி. அதைத்தொடர்ந்து வந்தவைய, ஏதோ ஒரு நதியில், அகல்யா, மௌனமே காதலாகி, இரும்புக்குதிரை என்பன. இதைத்தவிர, நான் என்ன சொல்லிவிட்டேன், சேவல் பண்ணை, கல்யாண முருங்கை, என்றென்றும் அன்புடன், பனிவிழும் மலர் வனம், முதலிய வித்தியாசமான மாத நாவல்களையும் எழுதியுள்ளார்.
“பாலகுமாரன் இன்னமும் பேசப்படுவார். அவரால் நாவல் இலக்கியமும் பேசப்படும் என்பது முகமூடி அணியப்படாத உண்மை” இந்த வரிகளை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரே வீரகேசரியில் இலக்கியச்செய்திகள் என்ற வாராந்த பத்தியில் எழுதியிருக்கின்றேன். அக்காலத்தில் அவரும் இளைஞர். கறுத்த மீசையுடன் அவரது படத்தையும் பதிவுசெய்து அந்தப்பதிவை எழுதியிருந்தேன். நேற்று 15 ஆம் திகதி அவர் சென்னையில் மறைந்தபின்னர் மீண்டும் அவர் நினைவுகளை மீட்டி இந்த அஞ்சலிக்குறிப்புகளை அவரது வெண்ணிற மீசை, தாடி தோற்றத்துடன் இந்தப்பதிவை எழுத நேர்ந்திருக்கிறது.
வாசிப்பு அனுபவமும் வயது வித்தியாசத்தினால் மாறிக்கொண்டே இருக்கும். ஜெயகாந்தனின் எழுத்துக்களை தீவிரமாக வாசித்துக்கொண்டிருக்கையில், தி. ஜானகிராமனும், கி. ராஜநாராயணனும், இந்திரா பார்த்தசாரதியும் இடையில் வந்து இணைந்தார்கள். இவர்களை வாசித்துக்கொண்டிருக்கையில் பாலகுமாரன் 1978 இற்குப்பின்னர் நெருங்கினார். அவரது எழுத்து நடை சற்றுவித்தியாசமாக இருந்தது. அவர் எழுதிய தாயுமானவன் என்ற நாவலில் என்னையும் கண்டுகொள்ளமுடிந்தது. அப்பொழுது நானும் ஒரு தந்தையாகியிருந்தமையும் முக்கிய காரணம். நான் மாத்திரமல்ல பல இளம் குடும்பத்தலைவர்களும் அந்த நாவலில் தங்களை இனம் கண்டார்கள். அதனால் பாலகுமாரன், அக்காலப்பகுதியில் என்னையும் கவர்ந்த படைப்பாளியானார்.