ஒரு நாக்கைப் பல நாக்குகளாகப் பெருக்கும் தொழில்நுட்பம்
தெருக்கோடியில் புதிதாகத் திறந்திருக்கும்
மனிதார்த்த மையமொன்றில் கற்றுத்தரப்படுகிறது என்று
ஒலிபெருக்கியில் அலறிக்கொண்டே போனது ஆட்டோ…
போன வருடம் இதே நாளில் சிறிய விமானமொன்று
துண்டுப்பிரசுரங்களைத் தூவிவிட்டுச் சென்றது.
தாவியெடுத்துப் பார்த்தால் அதில் தரப்பட்டிருந்த
கட்டணத்தொகையில் தலைசுற்றியது.
முற்றிலும் இலவசமென்று இப்போது சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது
Pied Piper of Hamelin பின்னே போகும் எலிகளில் ஒன்றாய்
போட்டது போட்டபடி ஆட்டோவைப் பின்தொடர்ந்தேன்.
’பலநேரங்களில் எதிர்வினையாற்றமுடியாமல்தானே இருக்கிறது –
இதில் பல நாக்குகளின் தேவையென்ன?’
என்று தர்க்கம் செய்யத் தொடங்கியது அறிவு.’
ஒரு நாக்கை வைத்துக்கொண்டே
நேற்றொன்றும் நாளையொன்றுமாய்
கருத்துரைத்துக்கொண்டிருக்கிறோம்
இதில் இருபது நாக்குகள் இருந்தாலோ……?’
என்று உறுத்தியது மனசாட்சி.
ஓங்கிக் குட்டியதில் இரண்டும் வாய்மூடி
ஏங்கியழுதபடி தத்தமது மூலையில் ஒடுங்கிக்கொண்டன.