முகநூல் முழுவதும் நடிகர் ரஜினியை வாங்கு வாங்கென்று வாங்கித்தள்ளுகின்றார்களே அப்படி என்னதான் அவர் பேசி விட்டார் என்று பார்க்க வேண்டுமென்று இணையத்தில் தேடியபோது கிடைத்த காணொளியில் ரஜினி பேசியதையும், அவர் பேசியதாக அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.
ரஜினி நியாயமாகப் போராடிய மக்களைச் சமூக விரோதிகள் என்று கூறி விட்டார் என்பது அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூறும் முக்கிய காரணம். ஆனால் அக்காணொளியில் ரஜினி கூறியது என்ன? மக்களது போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து கெடுத்து விட்டார்கள். அவ்விதம் புகுந்த சமூக விரோதிகள் காவல் துறையினரைத் தாக்கியதே தொடர்ந்து நடந்த நிலைமைக்குக் காரணம் என்று கூறுவதைத்தான் அக்காணொளியில் காண முடிகின்றது. இன்னுமொன்றையும் அவர் கூறுகின்றார். அது காவற்துறை ஆடை அணிந்த காவற்துறையினரைத்தாக்குவதை ஒருபோதுமே தன்னால் ஆதரிக்க முடியாது. அடுத்து அவர் கூறியது தொடர்ந்து இவ்விதம் போராட்டங்கள் நடந்தால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்பதை.
காணொளியில் ஓரிடத்திலும் போராட்டம் நடத்திய மக்களைச் சமூக விரோதிகள் என்று ரஜினி கூறவில்லை. நியாயமான போராட்டத்தினுள் சமூக விரோதிகள் சிலர் புகுந்து காவல் துறையினரைத்தாக்கியதுதான் நடந்த பிரச்சினைக்குக் காரணம். இவ்விதம்தான் அவர் கூறியிருக்கின்றார். அவர் தன் கருத்துகளைக் கூறுவதற்கு முழு உரிமையுமுண்டு. மேற்படி போராட்டம் தவறு. போராட்டத்தை நடத்தியவர்கள் சமூக விரோதிகள் என்று பொதுவாகக் கூறியிருந்தால் அது முற்றிலும் தவறானது. ஏற்றுக்கொள்ள முடியாதது.