பண்டையக்கால அசைவ உணவுகளும் நீருணவுகளும் – ஓர் ஆய்வு

- முனைவர் க.லெனின், உதவிப்பேராசிரியர், எம்.ஜி.ஆர் கல்லூரி – ஓசூர் –முன்னுரை
வயிற்றுப் பசிக்காக உண்ணுகின்ற மனிதன் முதலில் பழங்களையும், பின்னர் கிழங்கு மற்றும் தானிய வகைகளையும் உண்டிருக்க வேண்டும். நெருப்பைக் கண்டறிந்த பின்னர் கிழங்குகளை நெருப்பில் போட்டு வேகவைத்து அதன் சுவையை அறிந்திருக்க வேண்டும். காட்டில் மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பற்றி எரிந்தபோது, அங்கு வாழும் விலங்குகள் சில நெருப்பில் சிக்கி இறந்தன. அவற்றைப் பார்த்த மனிதன் கிழங்கு என்றெண்ணி இறைச்சியை உண்டிருக்கிறான். கிழங்கு இல்லை இறைச்சி தான் என்று அறிந்த பழங்கால மனிதர்கள் அவற்றின் சுவையின் காரணமாக அதனை விரும்பித் தின்றிருக்க வேண்டும். இவ்வாறு படிப்படியாக மனிதன் சைவ உணவில் இருந்து அசைவ உணவுக்கு வந்திருக்கலாம். சைவ உணவை விட அசைவ உணவில் சக்தியும், வலிமையும் அதிகம் இருப்பதாக இன்றளவும் மக்களிடையே ஒருவித மனப்போக்கு காண முடிகிறது.

மீன் உணவு
நெய்தல் நில மக்களின் முக்கிய உணவு மீன் உணவாகும். மீனை உணவாகக் கொள்வதன் வாயிலாகப் பல்வேறு புரதங்கள் உடலில் சேர்கின்றன. நெய்தல் நிலத்தில் பெறப்பட்ட இவ்வுணவு அனைத்து நிலங்களுக்கும் கொண்டு செல்லப்பெற்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆற்றிலே நன்கு கட்டப்பட்ட தூண்டில் கோலினால் பாண்மகள் மீன் பிடிக்கும் காட்சியினைப் பின்வரும் பாடல் காட்டுகிறது.

“நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்
தான்புனல் அடைகரைப் படுத்த வராஅல்
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்” (அகம்.216:1-3)

என்ற அடிகளில், வஞ்சி ஒருத்தி விறகினால் மீனைச் சுட்டு தன் தந்தைக்குக் கொடுப்பதை அறியலாம். உழவன் ஒருவன் விடியற்காலத்தே எழுந்து வாரல் மீனைப் பிடித்து துண்டு துண்டாக வெட்டி மணக்கும் குழம்பு வைப்பதையும், அந்தக் குழம்புக்கு ஏற்றப்படி அரிசியால் செய்த சோற்றினைச் சேர்த்து உண்டு மகிழ்ந்ததையும்,

“கருங்கண் வராஅல் பெருந்தடி மளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு” (நற்றி.60:4-6)

என்ற அடிகள் உரைக்கின்றன. இரவில் மீனை உண்ணுதல் (நற்:127), கொழுவிய மீன் உணவை உண்ணுதல் (நற்:159), பரதவர்கள் விடியற்காலையிலே உப்பங்கழியில் சென்று மீனைத் தேடிப் பிடித்தல் (நற்:372) போன்ற செய்திகள் பாடலடிகளில் பயின்று வருவதன் மூலம் பழந்தமிழ் மக்களிடையே மீன் உணவு பெற்றிருந்த செல்வாக்கினை அறியலாம். கடலிலே சென்ற பரதவர்கள் வலைவீசிப் பிடித்து வந்த மீன்களைக் குவியலாக மணலில் குவித்து வைப்பர் அந்த மீன்களை விற்றலும், கருவாடு ஆக்குதலும், மீனில் இருந்து எடுக்கக் கூடிய நெய்யை விளக்கிற்குப் பயன்படுத்தியதையும்,

Continue Reading →

அலெக்ஸி டால்ஸ்டாயின் சித்திர நடை எழுத்து

அலெக்ஸி டால்ஸ்டாய்– கீற்று.காம் இணையை இதழில் வெளியான இக்கட்டுரையினை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். –

பண்டைக் காலத்திலிருந்தே மனித குலம் தனது அறிவாற்றலையும் மனோபாவனையையும் புலப் படுத்தும் வகையில் பல இலக்கியங்களைப் படைத் திருக்கிறது. ஆயினும் தனக்கே உரிய விதிகளுடன் திகழும் நாவல் என்ற இலக்கியத்துறை தொழிற்புரட்சிச் சகாப்தத்தின் நன்கொடையேயாகும். அதை அச்சு யந்திரத்தின் சிருஷ்டி என்றும் ஒரு வகையில் குறிப் பிடலாம்.

ஒன்றோடொன்று உயிர்த்தொடர்பு கொண்டிராத பஞ்ச தந்திரக் கதைகள் முதலிய கதைக்கோவைகளைப் போலவல்லாமல், நாவல் உறுப்பழகும் ஒருமை நயமுமாய்ப் பெற்றுப் பொலியும் நெடுங்கதையாக உள்ளது. வாழ்வின் ஏதோ ஓர் அம்சத்தைத் தன் கற்பனை வளத்தால் புதிதாகச் செப்பம் செய்து தரும் சிறுகதை ஆசிரியனைப்போலவல்லாமல், அகலக்கால் விரித்து, வாழ்வின் பல்வகை அம்சங்கள் வெவ்வேறு கோணங் களிலிருந்து மனோபாவனைச் சிறப்புடன் நோக்கும் உரிமை நாவலாசிரியனுக்கு உண்டு என்பது உண்மை. ஆனால் அவன் எத்துணைதான் சஞ்சாரம் செய்த போதிலும், நாவலின் கட்டுக்கோப்பில் ஓர் உள் தொடர்பு இருப்பது அவசியம்; நாவலின் கதை நிகழ்ச்சியில் ஒருமை நயம் மிளிர்வது இன்றியமையாதது. இந்த வகையில் நாவலைக் காப்பியத்துடன் ஒப்பிடலாம். காப்பியத்தில் கிளைக் கதைகள் இருப்பினும் அவை காவியக் கதைக்கு இன்றியமையாதனவாகிக் கதை யோட்டத்தில் ஒன்றிவிடுகின்றன வல்லவா?

நாவல் இலக்கியத்தில் ஒருதுறைதான். மேலும் கவிதை, நாடகம், திரைப்படம், ஓவியம், சங்கீதம் ஆகியவற்றால், நாவலால் இயலாத அளவுக்கு நுட்ப மாகவும் திட்பமாகவும் வாழ்வின் ஒரோர் அம்சங்களை உணர்த்த முடியுமென்பதும் உண்மையே. ஆனால் ஆங்கில இலக்கிய ஆய்வுரையாளரான ரால்ப் பாக்ஸ் கூறுவதைப்போல், தனி மனிதனின் முழு வாழ்வை வெளியிடுவதில் வேறு எந்தக் கலைத்துறையாலும் நாவலை விஞ்ச முடியாது. ஒளிவு மறைவாயுள்ள அக உலக ஓட்டங்களைத் துல்லியமாகப் புலப்படுத்தும் தனித் திறன் நாவலுக்கே உரியது என்று புகழ்பெற்ற ஆங்கிலேய நாவலாசிரியர் ஈ.எம்.பார்ஸ்டர் கூறுவது முற்றிலும் உண்மையே.

நாவல்களில் பல ரகங்கள் உண்டு. படிக்கும்போது தோன்றி மறையும் உணர்ச்சியைத் தவிர வேறு எத்தகைய அனுபவத்தையும்  அளிப்பதற்கு இயலாத ‘கிளுகிளுப்பு’ நாவல்களை நாம் இரண்டாம்முறை படிக்கமாட்டோம். மறு புறத்தில், ஜனங்களின் ஆசாபாசங்களிலும் ஆர்வ அபிலாஷைகளிலும் நலன்களிலும் வாழ்விலும் போராட்டத்திலும் ஒன்றி நிற்கும் எழுத்தாளன் தன் படைப்பில் யதார்த்த உண்மையை முழுமையாகவும் நுட்பமாகவும் வெளியிடும் வல்லவன் ஆகிறான். அத்தகைய எழுத்தாளர்களில் சிறந்தவர்களது இலக்கி யங்கள், சாகாவரம் பெறுகின்றன. ஐம்புலன்களும் அறிதிறனும் ஆத்மாவும் புதிய அனுபவம் பெறுவதற்கு அவை உதவுகின்றன. அவற்றால் ஏற்படும் அனுபவத்தை மறத்தற்கியலாது. அறிவைப் பெருக்கி, மனோ பாவனையை வளம்பெறச்செய்து, இதயத்தைத் தூய்மை அடையச்செய்யும் அத்தகைய நாவல்கள் காப்பிய இயல்பினைப் பெறுகின்றன என்னலாம்.

Continue Reading →

பல்லவர் எத்தனை பல்லவர்!

மாமல்லபுரச்சிற்பங்கள்பல்லவர் வேந்தராக ஆட்சி புரிந்து வீழ்ந்த பின்னும் அவர்கள் இரண்டாம் அதிகார நிலை மன்னர்களாக தொண்டை மண்டலத்தின் சில இடங்களில் ஒரே காலத்தில் ஆண்டுள்ளனர். குறிப்பாக காடுவெட்டி பல்லவன் நல்லசித்தன், காடுவெட்டி கோப்பெருஞ்சிங்கர், தொண்டைமான்கள், கண்ட கோபாலன்  என்போர். இவர்கள் 3 -ஆம் குலோத்துங்கன் காலத்தில் அவனுக்கு கீழ்ப்படிந்து ஆட்சிபுரிந்துள்ளனர். கோப்பெருஞ் சிங்கனும், கண்ட கோபாலனும் சோழர் வீழ்ச்சிக்கு பின் வேந்தர்களாகி விட்டனர்.   நான்காம்  அதிகார  நிலையான நாடு கிழவன் நிலையிலும்  புழல் கோட்டத்தில் அடங்கிய நாடு ஒன்றுக்கு கருமாணிக்கப் பல்லவரையன் இருந்துள்ளான். இப்படி நான்கு அதிகார நிலையிலும் பல்லவர் இருந்துள்ளனர். இனி நல்லசித்த மகாராசன் பற்றிய கல்வெட்டு கீழே:

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவநசக்கரவத்திகள்  ஸ்ரீ விசையகண்ட கோபால தேவர்க்கு யாண்டு 17 [ஆவது] கற்கடக நாயற்று பூப்  பக்ஷத்து தசமியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற  உத்திராட[த்]து நாள் செயங்கொண்ட சோழ ம / ண்டலத்து  எயிற்க்கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்து திருவத்தியூர் நின்றருளின அருளாளப் பெருமாளுக்கு அநேகபூண்தை  மஹாராஜாதிராஜ பரமேஸ்வர  பரமவம் ஸோக்பவ  —- சமஸ்கிரித வரிகள் – – – -/ விஜயாதித்ய முக்க [ண்டி] காடுவெட்டி வம்சாவதார – – – – தானவமுராரி – – – – ராஹுத்தராய   நல்லசித்தராஸநேந்    வைத்த பெருமாளுக்கு வைத்த திருநன்தா விளக்கு ரு (5) ம் பெரியபிராட்டியார்க்கு வை  / த்த திநுநன்தா விளக்கு ரு (5) ம்   ஆக விளக்கு ய (10) ம் இவ்விளக்கு பத்துக்கும் விட்ட பால்பசுவும்  கன்றுப்பசுவும் பொலிமுறை நாகும் உள்பட உரு 300 ம் இஷபம் [30] ஆக உரு 330 ம் இவ்உரு முன்னூற்று மு[ப்]பதும் இவ்வாண்டின் / ஆடிமாத முதல் நாள் ஒன்றுக்கு அரியென்ன வல்லான் நாழியால் அளக்கும் நெய் இருநாழி உரியும் மதுவற்கத்துக்கு அளக்கும் தயிர் அமுது குறுணி இருநாழியும் திருநாள் தேவைகளும் கோயில் தேவைகளும் / – – – – சந்திராதித்ய வரை செலுத்தக் கடவோமாக கைக்கொண்டோம்  கரண[த்]தோம் இவ்விளக்கு கைக்கொண்டான் திருவிளக்கு குடிகள் – – – -க்கோன் செங்கழுநீரான துவாரபதிவேளான்  / கைக்கொண்ட விளக்கு ரு (5) ம் இவன் உள்ளிட்டார் கைக்கொண்ட விளக்கு ரு (5) ம் ஆக  விளக்கு ய (10) ம் இவ்விளக்கு பத்தும் கைக்கொண்டமைக்கு இப்படிக்கு இவை கோயிற்[க்]கணக்கு  உத்தரன் மேருருடையான் திரு / புவன சோழனான ஆனைமே[ல்] அழகியான் எழுத்து.

Continue Reading →

என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்! வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி! நிலவிலிருந்து பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில் சித்திரித்த எழுத்துப்போராளி!

என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்! வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி! நிலவிலிருந்து பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில் சித்திரித்த எழுத்துப்போராளி!யாழ்ப்பாணம் அரியாலையில் செம்மணி வீதியில் சில மாதங்கள் ஒரு வாடகைவீட்டில் வசிக்க நேர்ந்தது. 1983 தென்னிலங்கை வன்செயல்களினால் இடம்பெயர்ந்திருந்தோம். இலக்கிய நண்பர்கள் மல்லிகை ஜீவா சைக்கிளிலும் கே. டானியல் தனது மோட்டார் சைக்கிளிலும் வந்து பார்த்துவிட்டுச்செல்வார்கள். தென்னிலங்கையில் நிலைமை படிப்படியாக சீரடைந்ததும் அரியாலையைவிட்டு புறப்படத்தயாரானோம். ஊரிலிருந்து எடுத்துவந்த பெருந்தொகையான புத்தகங்களையும் சில கதிரைகள் மேசையையும் அயலில் ஒரு வீட்டில் ஒப்படைத்தோம்.  1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரியாலைக்கு விடைகொடுத்துவிட்டு, ஒருநாள் காலை புறப்படுவதற்கு தயாராகியிருந்த வேளையில், அதற்கு முதல் நாள் இரவு ஏழுமணியளவில் அவர் என்னைத்தேடி தனது சைக்கிளில் வந்தார்.  வந்தவரை அமரச்சொல்வதற்கும் அந்த வீட்டில் கதிரைகள் இல்லை. தரையில் ஒரு பாயைவிரித்து, ” தரையிலிருந்து பேசுவோம்” என்றேன். அவர் உரத்துச்சிரித்துக்கொண்டு அமர்ந்தார். அன்று நெடுநேரம் பேசினோம். அவரது சிரிப்புக்கு காரணம் இருந்தது. அவர்தான் கனடா டொரன்டோவில் அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் என்.கே. ரகுநாதன். அந்தச்சிரிப்பை இனிமேல் நாம் காணமுடியாது.

அன்றைய சந்திப்பில் அவர் உரத்துச்சிரித்தமைக்கு அவர் 1960 களில் எழுதிய நிலவிலே பேசுவோம் சிறுகதைதான் அடிப்படைக்காரணம். எனது புத்தகங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் அரியாலையிலிருந்து நண்பர் புதுவை ரத்தினதுரை எடுத்துச்சென்றார். கதிரைகளையும் மேசையையும் மல்லிகை ஜீவா எடுத்துச்சென்றார்.  புத்தகங்களும் கதிரை , மேசைகளும் என்னவாயின? என்பதும் தெரியாது, புதுவை ரத்தினதுரைக்கு என்ன நடந்தது ? என்பதும் தெரியாது. அக்காலப்பகுதியில் என்னைப்பார்க்க வந்த டானியல் தமிழ்நாட்டில் மறைந்தார். மல்லிகை ஜீவா கொழும்புக்கு இடம்பெயர்ந்தார். நான் அவுஸ்திரேலியாவுக்கு முதலிலும் ரகுநாதன் அதன்பின்னர் கனடாவுக்கும் புலம்பெயர்ந்தோம். புதுவை காணாமல் போனார். எங்கள் இலக்கியவட்டத்திலிருந்து ஒவ்வொருவராக விடைபெறும்போது எஞ்சியிருப்பது அவர்கள் பற்றிய நினைவுகள் மாத்திரமே!

நாமெல்லாம் இலக்கியவாதிகளாக இருந்தபோதிலும் இஸங்களினால் பிளவுபட்டிருந்தோம். சிலர் ஒருவருடன் ஒருவர் முகம் பார்த்தும் பேசாதிருந்தனர். டானியலும் ஜீவாவும் ரகுநாதனும் அரசியலிலும் ஒன்றிணைந்திருந்து பல மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள். எனினும் மாஸ்கோ – பீக்கிங் என அரசியல் கோட்பாடுகளில் பிளவு தோன்றியவேளையில் ஜீவா மாஸ்கோ சார்பு நிலையெடுத்தார். புதுவை உட்பட ஏனைய இருவரும் பீக்கிங் அணியில் இணைந்திருந்தனர். நான் வெளிப்பிரதேசத்தைச்சேர்ந்திருந்தாலும் இவர்கள் அனைவருடனும் தோழமையுடனும் சகோதர வாஞ்சையுடனும் உறவுகொண்டிருந்தேன். அதனால் அவர்களிடையே ஏற்பட்ட ஊடல்கள் உரசல்களை போக்குவதற்கும் அவ்வப்போது முயன்றேன்.

ரகுநாதனின் நிலவிலே பேசுவோம் – டானியலின் பஞ்சமர், ஜீவாவின் மல்லிகை – புதுவை, வரதபாக்கியான் என்ற புனைபெயரில் எழுதிய கவிதைகள் – இவைதான் எங்கிருந்தோ என்னை இவர்களுடன் இணைத்தது. ஆலயப்பிரவேசம், தேநீர்க்கடை பிரவேசம் முதலான போராட்டங்களில் புதுவை தவிர ஏனையோர் ஈடுபட்டு முன்னணியில் நின்ற காலத்தில் நான் வடக்கிலிருக்கவில்லை. அங்கு படிக்கச்சென்ற பருவத்தில் எனக்கு 12 வயதுதான். இலக்கியப்பிரவேசத்தின் பின்னர் (1972 முதல்) இந்த மூத்தவர்களுடன் எனக்கேற்பட்ட உறவுக்கு என்றைக்கும் விக்கினங்கள் வரவில்லை.

Continue Reading →