கவிதை: அரூபமானவை பூனையின் கண்கள்

ரிஷான் ஷெரீப்எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும்
ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும்
அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர

ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும்
மேனி வரிகளோடு
அச்சுறுத்தும் சிலவேளை அதன்
அசட்டுச் சிப்பிக் கண்கள்

இரைக்காகக் காத்திருக்கும்வேளையில்
அக் கண்களினூடு ததும்பும்
சலனமற்ற ஒற்றைச் சாதுவின் தியானம்

வேட்டை விலங்கின்
உடல் மொழியைப் பேசும்
பின்னங்கால்களில் அமர்ந்து
மீதிப் பாதங்களை ஊன்றி
நிமிர்ந்து பார்க்கையில்

ஏதேனும் யாசித்துப் பின் தொடரும்
அதன் பார்வையில்
தயை கூறக் கோரும்
கெஞ்சல் மிகைத்திருக்கும்

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன். குறைந்த வளங்களுடன் பயணித்து அரிய தகவல்களுடன் திரும்பிய ஊர் சுற்றியின் அனுபவங்கள்.

படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 - 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன். குறைந்த வளங்களுடன் பயணித்து அரிய தகவல்களுடன் திரும்பிய ஊர் சுற்றியின் அனுபவங்கள்.பயண இலக்கியம், அனைத்து மொழிகளிலும் இடம்பெறும் இலக்கியவகைகளில் ஒன்று. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் முதலான துறைகளைப்போன்று பயண இலக்கியமும் வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படுகிறது. சமகாலத்தில் மேலும் சில வகை இலக்கியங்கள் அறிமுகமாகிவிட்டன. அதில் ஒன்று புனைவுசாராத இலக்கியம். அனைத்து இலக்கியவகைகளிலுமே பயணம்தான் பெரிதும் தங்கியிருக்கிறது. வாழ்க்கைப்பயணத்தில் கற்றதையும் பெற்றதையும் அனுபவித்ததையுமே இலக்கிய வகைகளும் பிரதிபலிக்கின்றன.  பிரத்தியேகமான ஓர் வடிவமாக ” பயண இலக்கியம்” தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு முக்கிய காரணங்கள் எவை என்பதை பார்த்தால், வாசகன் தான் என்றைக்குமே பார்த்தறியாத நாடுகள் பற்றியும் அந்நாடுகளின் வரலாறு , மொழி, சமூகம், அரசியல் , பண்பாடு, பொருளாதாரம், அதன் வளங்கள், குறைபாடுகள், முன்னேற்றங்கள் முதலான இன்னபிற விடயங்களையும் அறிந்துகொள்வதற்கு இந்த இலக்கியவடிவம் உகந்தது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பித்தான் பயண இலக்கியம் எழுதவேண்டுமென்பதில்லை. உள்ளுருக்குள்ள பயணித்தும், தான் வாழும் நாட்டின் பிரதேசங்களுக்கு சென்றும் பயண இலக்கியம் படைக்கமுடியும். சமகாலத்தில் பலரதும் பத்தி எழுத்துக்களும் இந்தகைய வடிவத்திற்குள்தான் வருகின்றன.  நவீன விஞ்ஞானம் முழு உலகையும் இன்று எங்கள் கைவிரல்களுக்குள் அடக்கிவிட்டிருக்கிறது. இருந்த இடத்திலிருந்து கணினியை தட்டி, அல்லது ஸ்மார்ட் போனைத்தட்டி அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த வாய்ப்பு வசதியற்றவர்களுக்கு மற்வர்கள் எழுதும் பயண இலக்கியங்கள் துணை புரிகின்றன. இதழ்கள், பத்திரிகைகளும் பயண இலக்கியத்திற்கு களம் தருவதன் காரணத்தையும் இந்தப்பின்னணிகளிலிருந்தும் பார்க்க முடிகிறது.

பல வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆனந்தவிகடன் ஆசிரியராகவிருந்த மணியன் பற்றி அறிவீர்கள். அவர் உலகம் சுற்றிவந்து தொடர்ச்சியாக ஆனந்தவிகடனில் பயண இலக்கியம் படைத்தவர். அதற்கு அவர் சூட்டியபெயர் ” இதயம் பேசுகிறது” அதனால் அவரை இதயம் பேசுகிறது மணியன் என்றும் அழைக்கத்தொடங்கினார்கள். அந்தப்பெயர் புகழ்பெற்றதனால், ஆனந்தவிகடனை விட்டு அவர் வெளியேறியதன் பின்னர் தாமாகவே தொடங்கிய வார இதழுக்கு ‘ இதயம் பேசுகிறது என்றும் பெயரிட்டார். இவர் எமது இலங்கைக்கும் வந்திருக்கிறார். இலங்கைப்பயணம் பற்றியும் எழுதியவர். யாழ்ப்பாணத்திற்கு இவர் வந்தபோது ஒருவர் இவரிடம் ஆறுமுகநாவலர் பற்றித்தெரியுமா? எனக்கேட்டதற்கு ” தனக்கு நாவலர் நெடுஞ்செழியனைத்தான் தெரியும்” எனச்சொன்னவர். அவ்வாறு நல்லை நகர் தந்த நாவலரையும் தெரியாமல்தான் இவர் இலங்கை பயணக்கதை எழுதுகிறார் என்றும், இப்படித்தான் இவரது ஏனைய உலக நாடுகள் பற்றிய பயணக்கதைகளும் இருக்கும் என்றும் அக்காலத்தில் எதிர்வினைகள் வந்தன. மெல்பன் வாசகர் வட்டத்தில், ஏ. கே. செட்டியார் எழுதியிருக்கும் உலகம் சுற்றும் தமிழன் என்ற பயண இலக்கியத்தைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை பகிரும்போது, மேற்சொன்ன தகவல்களையும் சொல்லநேரிட்டுள்ளது.

Continue Reading →

தமிழகம்: திருப்பூர் இலக்கிய விருதுகள் 2018, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.., திருப்பூர் மாவட்டம்

- சுப்ரபாரதிமணியன் -மலையாள எழுத்தாளர்  வெள்ளியோடன் சிறப்புரையில்  ” தமிழ்மொழி தொன்மையும் வனப்பும் மிக்கது. எங்கள் மலையாளம் சம்ஸ்கிருதக்கலப்பில் இருப்பது. தமிழின் தூய்மையும் , செம்மொழித்தன்மையும்  உலகளவில் போற்றப்படுவதாகும்..எங்களின் ஆதிகவிகளாக தமிழ்க்கவிஞர்களை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இன்றைய உலகமயமாக்கலில் , பல தொன்மையான மொழிகளின் அழிவில் நிலையில் உலகளவில் பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் இலக்கியத்தை  காக்கும் நெருக்கடியில்  உள்ளார்கள்.அதை உணர்ந்தும் உள்ளனர்.   என்கதைகள் தமிழில் வருவதும், நான் தமிழ்நாட்டில் இலக்கிய கூட்டங்களில் கல்ந்து கொள்வதும் தாய் வீட்டிற்கு வருவதைப்போன்ற அனுபவத்தை எப்போதும் அளிக்கிறது. தமிழிலிருந்து மலையாளத்திற்கும், மலையாளத்திலிருந்து தமிழுக்கும் ஏராளமான நவீன இலக்கியப்படைப்புகள் ழொழிபெயர்க்கப்படுவது ஆரோக்கியமாக உள்ளது. ” என்று ஞாயிறு அன்று Thiruppuur Literary awards 2018  திருப்பூர் இலக்கிய விருதுகள் 2018 விழாவில் விருது வழங்கலில்  விருதைப் பெற்றுக்கொண்டு பேசுகையில் குறிப் பிட்டார்.( இவர் துபாயில் வசித்து வரும் மலையாள எழுத்தாளர். அய்ந்து சிறுகதைத்தொகுப்புகள், 3 திரைப்படத் தொடர்களை எழுதியிருப்பவர்  )

கீழ்க்கண்ட தமிழ் எழுத்தாளர்களுக்கும் Thiruppuur Literary awards 2018  திருப்பூர் இலக்கிய விருதுகள் 2018  வழங்கப்பட்டன. விருது பெற்ற மதிப்பிற்குரியோர் : குட்டி ரேவதி ( சென்னை ), ரோஸ்லின் ( மதுரை), சாந்தாதத் ( ஹைதராபாத்) ,ராஜாசந்திரசேகர்(சென்னை),  அன்பாதவன் ( விழுப்புரம் ), ஜெயன் மைக்கேல் ( சென்னை),  மு.முருகேஷ் ( வந்தவாசி ), உஷாதீபன் (சென்னை),   ம.காமுத்துரை ( தேனி ), ஷக்தி ( திருத்துறைப்பூண் டி), மு. ஆனந்தன் ( கோவை )  ,முத்துக்குமாரசாமி ( சென்னை),  ஆர்.எம். சண்முகம் ( சென்னை),   சொக்கலிங்கனார் ( ஈரோடு ), யுகபாரதி  (பாண்டிச்சேரி ), பொன்குமார் ( சேலம் ), மீனாட்சிசுந்தரம் ( கோவை ) , மலையாள எழுத்தாளர்கள் வெள்ளியோடன், சாபி செருமாவிலயி.

3/6/18. ஞாயிறு  மாலை 4 மணி  (மில் தொழிலாளர் சங்கம்.), பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி, , ஊத்துக்குளி சாலை, திருப்பூரில் இந்த விழா நடைபெற்றது .,  தோழர் எம்.இரவி தலைமை வகித்தார், மொழிப்போர் தியாகி  பெரியசாமி ஜீவா நூலகத்திற்கு 350 நூல்களை வழங்கினார்.   சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார்,

Continue Reading →

கலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது ! எம். ரிஷான் ஷெரீப் நேர்காணல்!

ரிஷான் ஷெரீப்கத்யானா அமரசிங்க(இந்த நேர்காணலானது, இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஞாயிறு லக்பிம வாரப் பத்திரிகையில் (20.05.2018) வெளிவந்தது. நேர்காணல் செய்திருப்பவர் லக்பிம பத்திரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரும், எழுத்தாளருமான திருமதி.கத்யானா அமரசிங்ஹ.)


கேள்வி : நீங்கள் தமிழ்மொழியில் ஆக்கங்களை எழுதி வரும் படைப்பாளியாக இருப்பதோடு, சிங்கள இலக்கிய நூல்கள் பலவற்றை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பின் மீதான ஈடுபாடு எவ்வாறு தோன்றியது?

பதில் : அது வேண்டுமென்றே செய்தவொன்றல்ல. தானாக நிகழ்ந்தது. பணி நிமித்தம் பிற நாடொன்றுக்கு வந்ததன் பின்னர் அதுவரைக்கும் நான் இலங்கையில் வசித்த காலத்தில் வாசித்துக் கொண்டிருந்த சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை இழக்க நேரிட்டது. எனவே எனது சகோதரி கவிஞர் பஹீமா ஜஹான், இலங்கையில் சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகும் சிறந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மாத்திரமல்லாது அரசியல் கட்டுரைகளையும் கூட மின்னஞ்சல் வழியாக அனுப்பிக் கொண்டிருந்தார். அவற்றிலுள்ள நல்ல, தீய விடயங்கள் குறித்து நாங்கள் வாதிட்டோம். தர்க்கித்தோம். அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் சிங்கள இலக்கியத்தைக் குறித்தும், ‘சிங்களவர்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிரானவர்களல்ல’ என்பதையும், யுத்தத்தையும், இன மத வேறுபாடுகளை எதிர்க்கும் சிங்களவர்களும் இலங்கையில் வசிக்கிறார்கள் என்பதையும் தமிழ் வாசகர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற முடியும் எனப் புரிந்தது. மொழிபெயர்ப்புப் பயணம் அப்போதிலிருந்து அவ்வாறுதான் தொடங்கியது.

கேள்வி : தமிழ் மொழி மூலமாகக் கல்வி கற்ற நீங்கள் சிங்கள மொழியறிவை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? சிங்கள சமூகத்தோடு சிறுபராயம் முதல் தொடர்பேதும் இருந்ததா?

பதில் : எனது ஊர் மாவனல்லை. எனவே சிறுபராயம் தொட்டு நான் வளர்ந்தது சிங்கள மக்களுடன்தான். சந்தையில், மைதானத்தில், வைத்தியசாலையில், கடைத்தெருக்களில் என அனைத்து இடங்களிலும் என்னைச் சூழ இருந்தவர்கள் சிங்கள மக்கள். அக் காலத்திலேயே அனைவரும் சிரமம் எனக் கூறும் சிங்கள மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது. பாடசாலையில் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைத் தேர்ந்தெடுத்தேன். பிற்காலத்தில் கணினி வகுப்பில் சேர்ந்ததுவும் ஒரு சிங்கள ஆசிரியையிடம்தான். பல்கலைக்கழகத்திலும் என்னுடன் படித்தவர்கள் சிங்கள மாணவர்கள். இவ்வாறாக சிங்கள மொழி சிறுபராயம் தொட்டு என் கூடவே வந்ததால் சிங்கள மொழி எனக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

கேள்வி : படைப்பாக்கங்களுக்கு தூண்டுதலாக அமைந்த உங்கள் குடும்பப் பின்னணி, சிறு பராயம் மற்றும் நீங்கள் வெளியிட்டுள்ள இலக்கிய படைப்புக்கள் பற்றி?

பதில் : எனது சிறுபராயம் தொட்டு புத்தகம் வாசிக்கும் சூழல் எமது வீட்டிலிருந்தது. அம்மா முதற்கொண்டு வீட்டிலிருந்த அனைவரும் புத்தகங்களை வாசித்தார்கள். ஆகவே எனக்கும் அந்தப் பழக்கமே தொற்றியிருக்கிறது என்று கூறலாம். பாடசாலைக் காலங்களில் நிறைய இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்றிருக்கிறேன். பாடசாலைக் காலத்துக்குப் பிறகும் நிறைய எழுத அவையும் பெரும் ஊக்கத்தையும் தைரியத்தையும் அளித்தன. உயர்தரக் கல்வியை மேற்கொண்டிருந்த காலத்திலேயே இலக்கியப் பத்திரிகைகளுக்கும் எழுதத் தொடங்கியிருந்தேன்.

Continue Reading →