வேந்தராய் ஓங்கிய சம்புவராயர்!

வரலாறுஇசுலாமியப் படையெடுப்பினால்  தமிழ் அரசர் ஆட்சி தஞ்சையிலும், மதுரையிலும் ஒழிந்தாலும் தொண்டை மண்டலத்தில் இசுலாமிய ஆட்சி ஏற்படாமல் ஒழித்தோ அல்லது ஆட்சியை மீட்டோ பல்லவ காடவர்களான சம்புவராயர்கள்  வேந்தர்களாக விசயநகர படையெடுப்பு வரை வடதமிழ்நாட்டை ஆண்டுள்ளனர். இவர்களே முன்முயன்று மதுரையில் சுல்தானின் ஆட்சியை ஒழித்திருந்தால் விசயநகர கம்பண்ண படையெடுப்பு நிகழ வாய்ப்பு இருந்திருக்காது. தமிழக வரலாறு வேறு  வகையாக இருந்திருக்கும். தாம் பல்லவக் காடவர் வழிவந்தோர் என்று நிறுவ தேடித் தேடி ஓடிஓடி செப்பேடு உண்டா கல்வெட்டு உண்டா என்று அலைந்து பாடுபடும் சில இளைஞர்கள் இந்தப் பல்லவர் ஈரானில் இருந்து வந்த ஆரியப்  பார்தியர்கள் என்பதை பலரும் அறிந்திரா நிலையில் இவர்கள் அறிந்திருப்பாரா எனத் தெரியவில்லை. தெரிய வருங்கால் ஆரியர் அடையாளத்தை  சுமக்க முன்வருவாரா என்பது ஐயமே.  அந்த துணிவு உள்ள நெஞ்சங்களுக்கு  காஞ்சி அருளாளப் (வரதராச) பெருமாள் திருக்கோயிலில் உள்ள இரு  சம்புவராயர் காலக் கல்வெட்டுகளை  கீழே. கொடுத்துள்ளேன்.

ஸ்வஸ்திஸ்ரீ கட்டாரி ஸா / ளுவன்  விட்ட / திருவிடையாட்ட / ம்  சிறுபுலியூர் / க்கு திருமுகபடி / ஸ்வஸ்திஸ்ரீ [II*] ஸகலலோகச் சக்ரவத்தி ஸ்ரீ இராஜநாராயணன் பலவ ஸம்வத்ஸரத்து / ப்ரதமையும் திங்கட்கிழமையும்  பெற்ற ரேவதி நாள் ஜயங்கொண்ட சோழ — – /  ஞ்(ச)சிபுரத்து திருவத்தியூர் நின்றருளிய அருளாளப்பெருமாளுக்கு அமுதுப / ணி உள்ளிட்டனவற்றுக்கு விட்ட உக்கல் பற்று சிறுபுலியூர் ஊரவர்க்கு தங்களுர் பலதளி பூசைபாதியும் பட்ட ப்ர / த்தியும்   நீக்கி ஆறாவது ஆடி மாதம் முதல் கடமை பொன்வரி உள்ளிட்ட பல வரிகளும் எடுத்து அளவு / விருத்துப்படி அரிசிக்கணம் – – –

விளக்கம்: பிலவ ஆண்டு (1364) 2 -ஆம் இராசநாராயண சம்புவராய வேந்தரின் ஆட்சியின் போது காஞ்சிபுரம் அருளாளப் பெருமாளுக்கு அமுதுபடி உள்ளிட்டனவற்றுக்கு   உக்கல் பற்றாக சிறுபுலியூர் ஊரார்க்கு பல கோவில் பூசை பாதியில் வரிநீக்கி அந்த வரிப்பணத்தை கொண்டு  என்ற வரை கல்வெட்டு நிறைவு பெறாமல் நின்று விடுகிறது. இதனை கட்டாரி சாளுவன் என்பவன் தானமாக வழங்குகிறான். இவன் பெயருக்கு முன் ஸ்வஸ்திஸ்ரீ வருவதால் இவனும் மன்னனாக இருக்க வேண்டும் 

ஸ்வஸ்திஸ்ரீ  ஸகலலோகச் சக்ரவத்தி ஸ்ரீ இராஜநாராயணன் சம்புவராயர்க்கு யாண்டு 7 ஆவது ஆனி  மாதம் முப்பதாந்தியதி பெருமாள் அருளாளநாதன்  கோயில் தானத்தார்க்கு நினைப்பு பெருமாள் திருநாள் எழுந்தருளும் அளவில் அனைநம்பிரானிலும் குதிரைநம்பிரானிலும் ஸ்ரீகருடாழ்வானிலும் நகரி சோதனைக்கும் எழுந்தருளும் நாலுநாளும் மிறங்கின திருவீதி / யிலே எழுந்தருளுவிக்ககடவார்(ர)கள் ஆகவும் திருத்தேரில் எழுந்தருளும் அளவில் திருநாள்தோறும் ஏழாந்திருநாளின் அற்றைக்கு கங்கைகொண்டான் மண்டபத்து அளவாக எழுந்தருளு னால் மீள எழுந்தருளுவிக்க கடவாராகவும் உடையார் ஏகாம்பரநாதன் திருநாமத்துக்காணி  ஆன திருத்தோப்புகளில் சேரமான் திருத்தோப்பு அறப்பெருஞ்செல்வி திருத்தோப்பு செண் /பகத்தோப்பு ஈசானதேவர் திருத்தோப்பு இந்நாலு திருத்தோப்பிலும் உடையாரை எழுந்தருளுவிக்கும்படியும் இப்படிக்கு கல்லு வெட்டி நாட்டி  இது ஒழிய புதுமைபண்ணிச்  செய்யாதபடியும்   சொல்லிவிட்ட அளவுக்கு இப்படிக்கு தாழ்வற நடத்திப்போகவும் பார்ப்பதே இவை தென்னவதரையன் எழுத்து .

Continue Reading →