‘டொராண்டோ’வில் எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைந்த தகவலினை எழுத்தாளர்கள் கற்சுறா மற்றும் பா.அ.ஜயகரன் ஆகியோர் பகிர்ந்திருந்தனர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திய எழுத்தாளர் என்.கே.ரகுநாதன். என்.கே.ரகுநாதன் என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரது புகழ்பெற்ற சிறுகதையான ‘நிலவிலே பேசுவோம்’ சிறுகதைதான். இத்தலைப்பிலேயே அவரது சிறுகதைத்தொகுதி 1962இல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியுள்ளது. இலங்கையில் பாரதி புத்தகசாலையில் நூல் கிடைக்குமென்ற அறிவிப்புடன் வெளியான தொகுப்பு அது. எப்பதிப்பகம் வெளியிட்டது என்பதில் தெளிவான விபரமில்லை.
இத்தொகுப்பிலிருந்து என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம்’ சிறுகதை பற்றி மேலதிகத் தகவல்களைப்பெற முடிகின்றது.
அக்கதையை என்.கே.ரகுநாதன் மதுவிலக்குப பிரச்சாரம் செய்யும் இயக்கமொன்றின் பத்திரிகைக்கு அனுப்பியபோது நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுதந்திரனுக்கு அனுப்பியபோது 1951ம் ஆண்டில் அங்கு பணி புரிந்துகொண்டிருந்த எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. நூலுக்கான அ.ந.க.வின் முன்னுரை மூலம் இதனை அறிய முடிகின்றது. மேலும் என்.கே.ரகுநாதனின் ‘சில வார்த்தைகள்’ மூலம் அ.ந.க மேற்படி முன்னுரையினை ஆஸ்பத்திரியில் நோய்ப்படுக்கையிலிருந்துகொண்டு எழுதியுள்ளார் என்பதையும் அறிய முடிகின்றது.
என்.கே.ரகுநாதனின் மறைவுக்காக ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, அவர் நினைவாக ‘நிலவிலே பேசுவோம்’ தொகுப்புக்கு அ.ந.கந்தசாமி எழுதிய முன்னுரையினையும், ‘நூலகம்’ தளத்திலுள்ள ‘நிலவிலே பேசுவோம்’ தொகுப்புக்கான இணைய இணைப்பினையும் ( http://www.noolaham.net/project/03/252/252.pdf ) இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.
என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம்’ நூல் முன்னுரை! – அ. ந. கந்தசாமி –
‘நிலவிலே பேசுவோம்”-என்ற அழகிய தலைப்புடன் கூடிய இச்சிறுகதைத் தொகுதியைத் தரும் என். கே. ரகு நாதன், ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர்.
முதன்முதலில் இவருடைய சிறுகதையொன்றினை நான், 1951ம் ஆண்டில் வாசித்தேன். “சுதந்திரன்” பத்திரிகையில் நான் கடமையாற்றி வந்த காலம் அது. வாரந்தோறும் பிரசுரத்துக்கேற்ற கதைகளை நானே வாசித்துத் தெரிந்தெடுப்பது வழக்கம். இது அவ்வளவு இன்பமான பொழுதுபோக்கல்ல. நல்லது, கெட்டது, இரண்டும் கெட்டான் என்ற நிலையிலுள்ள சகல கதைகளையும் வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஒரு மூடை பதரை நாள் முழுவதும் துழாவி ஒரு நெல்லைப் பொறுக்கி எடுப்பது போன்ற வேலை. சில சமயம் ஒரு முழுநாள் வேலைகூட வியர்த்தமாகிவிடலாம். இப்படி, நான், ஒரு நாள் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தபோது ஒரு குண்டுமணி கிடைத்தது. அதுதான் “நிலவிலே பேசுவாம்” என்ற இப்புத்தகத்தின் தலைப்புக்குரிய சிறுகதையாகும்.