முன்னுரை
வயிற்றுப் பசிக்காக உண்ணுகின்ற மனிதன் முதலில் பழங்களையும், பின்னர் கிழங்கு மற்றும் தானிய வகைகளையும் உண்டிருக்க வேண்டும். நெருப்பைக் கண்டறிந்த பின்னர் கிழங்குகளை நெருப்பில் போட்டு வேகவைத்து அதன் சுவையை அறிந்திருக்க வேண்டும். காட்டில் மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பற்றி எரிந்தபோது, அங்கு வாழும் விலங்குகள் சில நெருப்பில் சிக்கி இறந்தன. அவற்றைப் பார்த்த மனிதன் கிழங்கு என்றெண்ணி இறைச்சியை உண்டிருக்கிறான். கிழங்கு இல்லை இறைச்சி தான் என்று அறிந்த பழங்கால மனிதர்கள் அவற்றின் சுவையின் காரணமாக அதனை விரும்பித் தின்றிருக்க வேண்டும். இவ்வாறு படிப்படியாக மனிதன் சைவ உணவில் இருந்து அசைவ உணவுக்கு வந்திருக்கலாம். சைவ உணவை விட அசைவ உணவில் சக்தியும், வலிமையும் அதிகம் இருப்பதாக இன்றளவும் மக்களிடையே ஒருவித மனப்போக்கு காண முடிகிறது.
மீன் உணவு
நெய்தல் நில மக்களின் முக்கிய உணவு மீன் உணவாகும். மீனை உணவாகக் கொள்வதன் வாயிலாகப் பல்வேறு புரதங்கள் உடலில் சேர்கின்றன. நெய்தல் நிலத்தில் பெறப்பட்ட இவ்வுணவு அனைத்து நிலங்களுக்கும் கொண்டு செல்லப்பெற்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆற்றிலே நன்கு கட்டப்பட்ட தூண்டில் கோலினால் பாண்மகள் மீன் பிடிக்கும் காட்சியினைப் பின்வரும் பாடல் காட்டுகிறது.
“நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்
தான்புனல் அடைகரைப் படுத்த வராஅல்
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்” (அகம்.216:1-3)
என்ற அடிகளில், வஞ்சி ஒருத்தி விறகினால் மீனைச் சுட்டு தன் தந்தைக்குக் கொடுப்பதை அறியலாம். உழவன் ஒருவன் விடியற்காலத்தே எழுந்து வாரல் மீனைப் பிடித்து துண்டு துண்டாக வெட்டி மணக்கும் குழம்பு வைப்பதையும், அந்தக் குழம்புக்கு ஏற்றப்படி அரிசியால் செய்த சோற்றினைச் சேர்த்து உண்டு மகிழ்ந்ததையும்,
“கருங்கண் வராஅல் பெருந்தடி மளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு” (நற்றி.60:4-6)
என்ற அடிகள் உரைக்கின்றன. இரவில் மீனை உண்ணுதல் (நற்:127), கொழுவிய மீன் உணவை உண்ணுதல் (நற்:159), பரதவர்கள் விடியற்காலையிலே உப்பங்கழியில் சென்று மீனைத் தேடிப் பிடித்தல் (நற்:372) போன்ற செய்திகள் பாடலடிகளில் பயின்று வருவதன் மூலம் பழந்தமிழ் மக்களிடையே மீன் உணவு பெற்றிருந்த செல்வாக்கினை அறியலாம். கடலிலே சென்ற பரதவர்கள் வலைவீசிப் பிடித்து வந்த மீன்களைக் குவியலாக மணலில் குவித்து வைப்பர் அந்த மீன்களை விற்றலும், கருவாடு ஆக்குதலும், மீனில் இருந்து எடுக்கக் கூடிய நெய்யை விளக்கிற்குப் பயன்படுத்தியதையும்,