ராகவன் காலனி ஜாபர்கான்பேட்டை கிளை நூலகத்தில் தொடர் நிகழ்வு முதல் நிகழ்வினை துவக்கி வைப்பவர்: திரு. ச. இளங்கோ சந்திரகுமார் Bsc. MLIS, மாவட்ட நூலக அலுவலர்…
கல்வெட்டுகளில் நந்தா விளக்கு எரிக்க 90/96 ஆடுகள் அல்லது 32 பசுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏன் நந்தா விளக்கு எரிக்கப்பட்டது என்ற காரணம் அறியாமல் இதுவரை இருந்தது. சோழர் குடும்பத்தவர் நந்தா விளக்கு எரிக்க ஏற்பாடு செய்யும் பின் புலத்தை ஆராயுங்கால் அது ஒருவர் நோய் நீங்கி நலம் பெற வேண்டியோ அல்லது இறந்த பின்னர் நற்கதி எய்த வேண்டியோ ஏற்றுவதற்கு உற்றாரால் ஏற்பாடு செய்யப்படுகிறது. பின் வரும் கல்வெட்டுகளில் அது புலனாகிறது.
ஸ்வஸ்திஸ்ரீ கச்சியுங் தஞ்சையுங் கொண்ட ஸ்ரீ கன்னர தேவர்க்கு யாண்டு இருப[த்தே]ழா[வது] பல்குன்றக் கோட்டத்[து] / த[ரை]யூர் நாட்டு மாம்பா[க்க]த்து கோதண்ட மன்றாடி திருவோத்தூர் மஹாதேவர்க்கு பகல் விளக்குக்கு வைத்த சாவா [மூ]வா பேர்[ஆடு அ]ஞ்பது
விளக்கம்: இராட்டிரகூடன் 3 ஆம் கிருஷ்ணனுக்கு 27 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.966) பல்குன்றக் கோட்டத்து (போளூர் செங்கம் வட்டம்) தரையூர் நாட்டில் அமைந்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோதண்ட மன்றாடி என்பான் திருவோத்தூர் மகாதேவர்க்கு பகல் பொழுதில் விளக்கு எரிக்க 50 இளம் ஆடுகளை கொடுத்துள்ளான். ஒரு முழு நந்தா விளக்கு எரிக்க 96 ஆடுகள் கொடுப்பர். அதில் பாதி 48 ஆகும். இவன் இரண்டு ஆடுகள் கூடுதலாக கொடுத்து பகலில் மட்டும் எரிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறான். அப்படி என்றால் 50 ஆடுகள் அரை நந்தா விளக்கு கணக்கில் வருகிறது. கல்வெட்டில் நந்தா விளக்கு என்ற சொற் பதிவு இல்லை.
உத்தம சோழன் நினைவில்
ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேஸரி பந்மர்க்கு யாண்டு 14 வது திருவோத்தூர் மஹாதேவர்க்கு திருநந்தா விளக் கெரிப்ப / தற்க்கு வைத்த ஆடு உத்தம சோழமாராயந் சூறையிற் போக உடையார் செம்பியன் மஹாதேவியார்க்கு விண்ண / ப்பஞ்செய்ய அருளுச்செய்ய மீண்ட ஆடு இருனூறும் உடையார் வைத்த திருநந்தா விளக்கினுக்கு சாவா மூ / வாப் பேராடு ஸந்த்ராதித்தவரை இரண்டு திருநந்தா விளக் கெரிப்பதற்க்கு பஞ்சவாரக் காலோடொக்கு நாழியால் திங்கள் / பதிநாறு நாழி உரி ஆழாக்கு நெய்[யு]ம் கோயிலுக்கே கொண்டு சென்று திருவுண்ணாழிகை யுடையார்களு
விளக்கம்: முற்றுப்பெறாத கல்வெட்டு. உத்தம மாராய சோழன் தனது 14 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.984) சூளை நோயில் கிடந்த போது நலம் வேண்டி திருவோத்தூர் மகாதேவர்க்கு நந்தா விளக்கு எரிக்க ஆடுகள் தந்தான். நலம்பெறாமல் இறந்தும் போகிறான். விளக்கு எரிப்பது நிறுத்தப்படுகிறது. இதை அவன் தேவி செம்பியன் மாதேவிக்கு வேண்டுகோள் வைக்க அவள் மீண்டும் 200 ஆடுகள் கொடுத்து இரண்டு நந்தா விளக்கு எரிக்க ஒவ்வொரு மாதமும் 16 நாழி, ஓர் உரி அதனோடு ஓர் ஆழாக்கு நெய் கோவிலுக்கே சென்று கருவறை பொறுப்பாளர்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளாள். இவனது இன்னொரு தேவி ஆரூரன் அம்பலத்தடிகள் இவனது 15 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.985) இதே போல 25 கழஞ்சு பொன் கொடுத்து இடையன் மூலம் கருவறைக்கே நெய் கொண்டு செலுத்த ஏற்பாடு செய்கிறாள் என்பது இன்னொரு கல்வெட்டில் பதிவாகி உள்ளது. [பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி XI, திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோவில்]