முதல் தடவையாகச் சிங்கள மக்களிடமிருந்து இவ்வாசகங்களைக் கேட்கின்றேன். இவை முக்கியமான வாசகங்கள். 1983 இனக்கலவரத்துக்காக, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அழிவுகளுக்காகச் சிங்கள மக்கள் சார்பில் இவர்கள் மன்னிப்புக் கேட்கின்றார்கள். உண்மையில் இலங்கையின் அதிபர் ஓருவர் என்று இவ்விதம் சிங்கள மக்கள் சார்பில் தமிழ் மக்களுக்கு எதிராக இதுவரை நடைபெற்ற அநீதிகளுக்காக மன்னிப்புக் கோருகின்றாரே அதுவே இந்நாட்டு மக்களுக்கிடையிலான உண்மையான நல்லெண்ணத்துக்கும், புரிந்துணர்வுகளுக்கும் வழி வகுக்கும். அதற்கு முதற்படியாகவே இப்போஸ்டரையும் , வாசகங்களையும் பார்க்கின்றேன். அத்துடன் அடையாளம் காணப்பட்ட , இக்கலவரங்களில் குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். சட்டமானது அனைவருக்கும் பொது என்னும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.
சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனக்கலவரத்தையடுத்து அன்று தமிழக முதல்வராகவிருந்த எம்ஜிஆர் கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தார். இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட ‘சீனியர்’. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.
பின்னர் இறுதியாக சிதம்பரம் கப்பல் தமிழக அரசால் அனுப்பப்பட்டபோது , இரு வாரங்கள் கழிந்திருந்த நிலையில், நானும் யாழ்ப்பாணம் செல்வதற்கு முடிவு செய்தேன். என் வாழ்க்கையில் கட்டுமரங்களில் பயணித்திருக்கின்றேன்; படகுகளில் பயணித்திருக்கின்றேன்; ஆனால் கப்பலொன்றில் பயணித்தது அதுவே முதற் தடவை. கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்தைச் சுற்றிச் சென்ற கப்பலின் பணியாளர்களெல்லாரும் அகதிகளென்று மிகவும் அன்புடன் , பண்புடன் உதவியாகவிருந்தார்கள். கொழும்பில் கப்பலில் ஏறும்பொழுதும் வரிசையில் நின்று ஒவ்வொருவர் உடமைகளையும் வாங்கியுதவி ஏற்றினார்கள். நேற்றுத்தான் நடந்ததுபோல் இன்றும் நினைவிலிருக்கின்றது.
1977கலவரம் நடைபெற்று மக்கள் அகதிகளாக யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரி அகதி முகாமுக்கு வந்துகொண்டிருந்தவேளையில் நண்பர்களுடன் மாலை நேரங்களில் சென்று வரும் அகதிகளுடன் அளவளாவி அவர்கள் கதைகளைக் கேட்டு உணர்ச்சி வசப்படுவதுண்டு. ஆனால் நானே என் சொந்த மண்ணில் அகதியாக கப்பலில் மீண்டும் வருவேனென்று அச்சமயத்தில் எண்ணியிருக்கவில்லை.
அகதிகளாக முகாமில் இருந்த சமயத்தில் என்னுடன் பணி நகர அதிகார சபையில் பணிபுரிந்த சிங்கள நண்பர்கள் சிலர் விடயமறிந்து எங்களை வந்து பார்த்தார்கள். தங்களுடன் வந்து பாதுகாப்புடன் தங்கலாமென்று அழைத்தார்கள். அப்போதிருந்த சூழலில் எம்மால் அவர்களுக்கும் பிரச்சினைகள் வரலாம்; நிலவிய சூழலில் எமக்கும் பாதுகாப்பில்லை. எனவே அகதிகள் முகாமில்இருப்பதே உசிதமாகப்பட்டது. அங்கேயே தங்கி விட்டோம். அவர்களின் பெயர்களைக் கூட மறந்து விட்டேன். ஆனால் பணியாற்றிய காலத்தில் எம்முடன் நன்கு அன்புடன் பழகிய நண்பர்கள் அவர்கள். அவ்விதம் அச்சூழலில் எம்மை வந்து பார்த்ததும் அழைத்ததும் முக்கிய விடயமாக அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி தோன்றுகின்றது.
அக்கலவரம் எனக்கு நன்கு தெரிந்த சிலரைப் பலி வாங்கியிருக்கின்றது. அவர்களில் பொறியியலாளர் ராஜாராம் ஒருவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்து முன்பாக இருந்த தெருவொன்றில் சிங்கள் வீடோன்றில் வாடகைக்கு நண்பர்களுடன் வசித்தபோது எம்முடன் வசித்தவர்களிலொருவர். மலையகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு காதலி இருந்தார்; ஆசிரியை என்றும், பெயர் ராஜேஸ்வரி என்றும் ராஜாராம் கூறியதாக நினைவு. நீண்ட காலமாகக் காத்திருந்து ராஜாராம் படிப்பை முடிந்து பணி புரிந்து கொண்டிருந்தபோதுதான் திருமணம் செய்தார். பல்கலைக்கழகப்படிப்பு முடிந்து பணி புரிந்துகொண்டிருந்த சமயத்தில் கலவரத்துக்குச் சில மாதங்களின் முன்பே அவரை வழியில் இ.போ.ச பஸ்ஸொன்றில் சந்தித்து உரையாடியிருந்தேன். யாருக்குமே தீங்கு செய்ய மனம் வராத அப்பாவி அவர். நன்கு சிங்களம் பேசக்கூடியவர். 83 கலவரத்தில் களுபோவிலை ஆஸ்பத்திரியில் ஏற்கனவே காயமுற்றிருந்து அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காடையர்கள் சென்று கொலை செய்ததாகப் பின்னர் அறிந்து துயருற்றேன்.
காலம் கழியும் வேகத்தில் நாம் பலவற்றையும் இலகுவில் மறந்து கடந்துசென்று விடுகின்றோம். திடீரென்று ஒருநாள் ஒரு சிறு பொறி முன்னர் கவனிக்காது கடந்துசென்றுவிட்ட ஒரு தனி மனிதஉறவை மீண்டும் எம்மனதில்; நினைவுத்தட்டின் மேற்பரப்புக்குக் கொண்டுவந்து விடுகின்றது.
என்னுள் முகிழ்ந்த கவிஞர் ‘பாவலவன்” பா.சத்தியசீலனின் நினைவும் அவ்வாறானதே. அண்மையில் லண்டனில் ‘புத்தகப்பிரியர்” ஒருவரின் வீட்டு புத்தக அலுமாரியைக் குடைந்துகொண்டிருந்தேன். அதில் இருந்த தடித்த தமிழ் நூலொன்றை எடுத்து விரித்தபோது அதனுள் சிக்கியிருந்த மிகப்பழைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதமொன்று பொத்தென நிலத்தில் வீழ்ந்தது. வாழ்த்து மட்டையின் தடிப்பு அதனை விரிக்கத் தூண்டியது. அது ஒரு கையடக்கக் கவிதை நூல். அதன் தலைப்பு ‘நத்தார் வாழ்த்து”. அந்தச் சிறிய பிரசுரம் பா.சத்தியசீலனின் சிறிய கவிதைநூல். முன்னாளில் ‘மில்க்வைற்” கனகராசா அவர்கள் ஏராளமான இலவசப் பிரசுரங்களை அமரர் க.சி.குலரத்தினம் அவர்களின் துணையோடு மில்க்வைற் விளம்பரங்களாக வெளியிட்டு விநியோகித்ததை எம்மால் மறக்கமுடியாது. பாவலவன் சத்தியசீலனின் ‘நத்தார் வாழ்த்து”க் கவிதையும் அப்படியாதொரு சிறு கவிதைநூல் தான். நத்தார் வாழ்த்துக் கவிதையை வாழ்த்து அட்டைபோன்று வடிவமைத்து சிறு பிரசுரமாக அந்நாட்களில் வெளியிட்டிருந்தார். அந்தச் சிறு பிரசுரமே இலக்கிய நண்பர் பா.சத்தியசீலன் பற்றிய மனப்பதிவுகளை இன்று இரைமீட்க வைத்துள்ளது.
பா.சத்தியசீலன் தனது நத்தார் வாழ்த்து கவிதைப் பிரசுரத்துடன் 1970களின் இறுதிக்கட்டத்தில் ஒருநாள் என்னை வந்து புங்குடுதீவு சர்வோதய நூலகத்தில் சந்தித்தார். வெறும் அட்டைவழி வாழ்த்து மரபை உடைத்து இப்படியான தூய தமிழ் வாழ்த்து நூல்களை வாங்கி எமது சமூகம் பரிமாறிக்கொண்டால் என்ன என்ற பெரிய புரட்சிகரமான சிந்தனையுடன் தான் அவர் அன்று என்னை அணுகியிருந்தார். அவரது கைகளில் அவர் எழுதிய மேலும் பல நூல்கள். அனைத்தும் சிறு பக்க எணணிக்கையுடன் கூடியவை. அதனைத் தொடர்ந்து பொங்கல் வாழ்த்தையும் இவ்வாறு வெளியிட அவர் முனைந்ததாக எனக்குள் ஒரு நினைவு.
பா.சத்தியசீலனின் பூர்வீகம் அல்லைப்பிட்டி. யாழ்ப்பாணத் தீவுக்கூட்டத்தின் நுழைவாயில் கிராமம் அது. அவர் மணம்புரிந்தது நவாலியில். ‘கலைவண்ணம்” என்பது அவரது நவாலி இல்லத்தின் பெயர். மானிப்பாய், நவாலி தெற்கில் சின்னப்பா வீதியில் அவரது புகுந்த வீடு அமைந்திருந்ததாக நினைவு. நான் ஆனைக்கோட்டை- அயல் கிராமத்தைத் தாய்வழிப் பூர்வீகமாகக் கொண்டதாலும், யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அடிக்கடி நவாலியூடாகப் பயணிப்பதாலும் 70களின் இறுதிப்பகுதியில் சத்தியசீலன் எனக்குப் பரிச்சயமான ஒரு இலக்கியவாதியாக மாறிவிட்டார்.