ஆய்வு: இலக்கியங்கள் காட்டும் வீரக்கற்கள்

- முனைவா் செ. செயந்தி, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சங்ககிரி, வீராச்சிபாளையம். 637 303 -தமிழில் கிடைத்துள்ள இலக்கியங்களில் காலப்பழமை வாய்ந்தது சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியங்களின் பின் எல்லையை கி.பி. 300 எனக்கூறுவா். சங்க இலக்கியங்களுக்குப் பின்னா் தோன்றிய நூல்களிலும் செய்திகள் பேசப்படுகின்றன.  தமிழ் இலக்கியங்கள் வீரக்கற்கள் எழுப்பப்பட்ட இடங்களையும் அக்கற்களில் வீரரது உருவம், பெயா், பெருமை ஆகியவற்றைப் பொறித்து வைத்திருந்த தன்மைகளையும் அக்கற்களை வழிபட்ட தன்மைகளையும் பெரும்பாலும் காட்டுகின்றன. 

இலக்கிய நூல்கள் 
தெலுங்கு மொழியில் இலக்கிய வளா்ச்சி பிற்பட்ட காலங்களில்தான் ஏற்பட்டது. இருப்பினும் கி.பி. 11 – ம் நூற்றாண்டிற்குப் பின்பு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. கி.பி. 800 க்கும் கி.பி. 1000 க்கும் இடைப்பட்ட காலங்களில் வாழ்ந்த புலவா்களைப் பற்றியக் கருத்துகளும் உண்டும். 

முதல் கல்வெட்டு
கி.பி. ஆறாவது நூற்றாண்டில் தோன்றிய கல்வெட்டுகளில் தான் தெலுங்கு மொழியினை முதன் முதலாகக் காணமுடிகிறது. கடப்பா மாவட்டத்திலுள்ள கலமல்லா என்னும் இடத்தில் கண்டெடுக்கபட்ட கல்வெட்டே முதல் கல்வெட்டாகும். கி.பி 848 – ல் அதங்கி என்ற இடத்தில் கீழைச்சாளுக்கியா்களின் தலைவா்களான பாண்டுரங்காவில் அமைந்த முதல் தடவையாகத் தெலுங்கு கவிதை பொறிக்கப்பட்டுள்ளது. 

வீரக்கற்கள் நடப்பட்ட இடம்
வீரக்கற்கள் பாலை நில வழிகளில் உள்ளுரிலும் நடப்பட்டமையை இலக்கியங்கள் குறிக்கின்றன. உள்ளுரில் கற்கள் நடப்பட்டதற்கான சான்றுகள் குறைவாக இருக்க பாலை நில வழிகளில் இறந்தவா்கள் நினைவாக அமைக்கப்ட்ட நினைவுக்கற்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. 1

பாலைநில வழிகளில் வீரக்கற்கள்
பாலை நில வழிப்போவோரைக் கொன்று பொருள் பறிப்பது மரவா்களது பழக்கமாக இருந்தது. அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களைத் தழையிட்டு மூடி அதன்மேல் கற்களைக் குவித்து மேடுபோல் செய்வா். இதனை “பதுக்கை“ என சங்க இலக்கியப் பாடல்கள் பகா்கின்றன. இத்தகு பதுக்கைகளின் அச்சமூட்டும் வருணனையை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

Continue Reading →

ஆய்வு: தொல்தமிழர் கொடையும் மடமும்

முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றியக் குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும். இக்கட்டுரையில் தொல்தமிழ் மன்னர்களின் கொடைமடச் செயல்களைச் சற்று ஆராய்வோம்.

கொடை பற்றிய விளக்கம்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து (குறள்.221)

ஈகை என்பது இல்லாதார்க்குக்கு ஒன்று கொடுப்பதே; பிற எல்லாக் கொடையும் எதிர்பார்த்துக் கொடுப்பது. கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், புறத்துறை, திருவிழா, வசவு, அடி என்றும் ஈகைக்கு – கொடை, பொன், கற்பகம் என்றும் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி. (பக்.236 ) பொருள் தருகின்றது. தமிழ்-தமிழ் அகரமுதலி கொடை என்ற சொல்லிற்கு ஈகம், தியாகம், கொடை, கைக்கொண்ட ஆநிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் (புறத்துறை), ஊர்த்தேவதைக்கு மூன்று நாள் செய்யும் திருவிழா, வசவு, அடி(ப.- 387) என்று பொருள் சுட்டுவதைக் காணலாம்.

கொடைமடம்
கொடைமடம் என்பது மடைமை குணங்களில் ஒன்றாகும். ‘மடம்’ என்பதற்கு ‘அறியாமை’ என்ற பொருள். இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணாமல், கிடைத்ததை நினைத்தபோதே கொடுப்பதைக் ‘கொடை மடம்’ என்று சொல்வார்கள். இது சரியா, தவறா என்று ஆலோசிக்க அறிவுக்கு இடம் கொடுக்காமல், உள்ளத்தில் கொடுக்கத் தோன்றியபோதே ‘கொடை மடம்’ உடையவர்கள் கொடுத்துவிடுவார்கள்.

‘மடைமை’ என்பது போற்றப்பட வேண்டிய குணங்களில் ஒன்றாக இல்லையெனினும், ‘கொடைமடத்தை’ அவ்வாறு கூற இயலாது. கொடைக் கொடுப்பதென்பது ஒரு மாபெரும் நற்செயல். நாம் பெற்ற செல்வங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கே. ஈகையை தவிர, பிற எல்லா கொடுத்தலும், திரும்பி பெறக்கூடிய நோக்கத்தில் மட்டும் தான் தரப்படும். இதனை வள்ளுவர் கூறுவது,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள்.221)

இத்தகைய கொடையை, கண் மூடித்தனமாக கொடுப்பதில் தவறொன்றுமில்லையே? சங்க காலத்தில், இந்த ‘கொடைமடத்தைப்’ போற்றி, கபிலர் போன்ற பல புலவர்கள், அரசர்களின் கொடை வள்ளல்களைப் பாடியது சிறப்பிற்குரியது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 292: கலைஞர் கருணாநிதியின் வரலாற்றுப்பங்களிப்பு!

வாசிப்பும், யோசிப்பும் 292: கலைஞர் கருணாநிதியின் வரலாற்றுப்பங்களிப்பு!\கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர்கள். கலையுலக, அரசியலுலக வாழ்வினுள் காலடி வைத்தவர்கள். வரலாற்றில் இவர்கள்தம் வாழ்க்கையானது அரசியலில் மட்டுமல்ல  கலையுலகிலும் வைத்து நோக்கப்பட வேண்டியதொன்று.

அரசியலைப்பொறுத்தவரையில் கலைஞரைப்பற்றிய விமர்சனங்கள் பல இருப்பினும்  ஏனைய கலை, இலக்கியத் துறைகளில் இவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியவர். ஒரு காலத்தில் பாடல்களால் நிறைந்திருந்த தமிழ்ச்சினிமா உலகை இளங்கோவனின் வசனங்கள் திரும்பிப் பார்க்க வைத்தன. அதன் பின்னர் கலைஞரின் வசனங்கள் தமிழ்த் திரையுலகில் ஐம்பதுகளில், அறுபதுகளின் ஆரம்ப காலகட்டங்களில் கோலோச்சின. பராசக்தி, மருத நாட்டு இளவரசி, மனோஹரா , பூம்புகார், ராஜா ராணியென்று கலைஞரின் வசனங்களின் சிறப்பினை, தாக்கத்தை வெளிப்படுத்த பட்டியலொன்று உண்டு. கலைஞரின் திரைப்படப்பாடல்கள் குறைவாக இருப்பினும் அவற்றுக்கும் முக்கியத்துவமுண்டு. தமிழ்த்திரைப்படத் தயாரிப்பிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புண்டு,

தமிழ் இலக்கியத்துறையிலும் கலைஞர் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரையென்று அவரது இலக்கியத்துறைக்கான பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இருபதாம் நூற்றாண்டுத்  தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் அடுக்கு மொழி நடைக்கும் ஒரு காலகட்டப்பங்களிப்புண்டு. சமூகச் சீர்கேடுகளை, மூட நம்பிக்கைகளைக்கடுமையாகச் சாடி மக்கள்  மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை அவை ஐம்பதுகளில், அறுபதுகளில் ஏற்படுத்தின. அதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு முன்னேறியது வரலாறு.

கலைஞரின் குறளோவியம், சங்கத்தமிழ் போன்ற தொகுதிகள் முக்கியமானவை.

என்னைப்பொறுத்தவரையில் கலைஞரைப்பற்றி முதன் முதலில் அறிந்துகொண்டது 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்த் மகாநாட்டு மலர் மூலமேதான். அப்பா திமுகவினர் மேல் மதிப்பு மைத்திருப்பவர். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோர் மீது மதிப்பு வைத்திருந்தவர். அதன் காரணமாகவே அம்மாநாட்டு மலரையும் வாங்கியிருந்தார். மிகவும் சிறப்பாக வடிவமைக்கட்டிருந்த மலர் அது. இதுவரை நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மலர்களில் மிகவும் சிறப்பான மலராக அம்மலரே கணிப்பிடப்படும் என்று கருதுகின்றேன். அம்மலரில் கலைஞரின் ‘பூம்புகார்’ நாடகமிருந்தது. அதன் மூலமே அவரைப்பற்றி முதலில் அறிந்து கொண்டதாக நினைவு. அதன் பின் அறிஞர் அண்ணாவின் மறைவினையடுத்து அவர் பாடிய இரங்கற்பா மூலம் என்னை அவர் மீண்டும் கவனிக்க வைத்தார். கேட்பவர் நெஞ்சங்களை உருக்கும் இரங்கற்பா அது. அவ்வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரங்கற்பாவாக அவ்விரங்கற்பா அமைந்து விட்டது.

அடுத்து என்னைக் கவனிக்க வைத்தது குமுதம் சஞ்சிகையில் ஆரம்பமான அவரது ‘ரோமாபுரிப்பாண்டியன்’ தொடர் நாவல். வரலாற்று நாவல். அத்தொடரை அக்காலகட்டத்தில் முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் வெளியான ஆரம்ப அத்தியாயங்கள் என்னை அவ்வயதில் கவர்ந்தன. ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான தொடர் அது. அக்காலகட்டத்தில் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான அவரது நாவலான ‘வெள்ளிக்கிழமை’யும் என் கவனத்தைச் சற்றே அவர்பால் ஈர்த்த படைப்புகளிலொன்றே.

Continue Reading →