இன்று வீரகேசரிக்கு அகவை 89: கலை – இலக்கியத்தில் வீரகேசரியின் வகிபாகம்!

சொக்கனின் 'சீதா'முருகபூபதிஇந்தியா – தமிழ்நாட்டில் தனவணிகர் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் செறிந்து வாழ்ந்த செட்டி நாட்டு மண்ணில் ஆவணிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து, வளர்ந்து கொழும்புக்கு வர்த்தகம் செய்யவந்திருக்கும், பெரி. சுப்பிரமணியம் செட்டியார், 1930 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார்.  முதலில் கொழும்பு செட்டியார் தெருவிலிருந்து வெளிவந்த வீரகேசரி, அதன் விரிவாக்கம் கருதி கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்க இல்லத்திற்கு இடம்பெயர்ந்தது. அந்த இல்லமும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது என்பதை பலரும் அறியமாட்டார்கள்! அங்குதான் இலங்கையின் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனா பிறந்திருக்கிறார்.

இத்தகைய அரிய தகவல்களை தன்னகத்தே வைத்துள்ள வீரகேசரியின் தொடக்காலத்தில் வ.ராமசாமி அவர்களும் தமிழகத்திலிருந்து வருகை தந்து ஆசிரியராக பணியாற்றியவர். வ.ரா. என சுருக்கமாக அழைக்கப்படும் வ. ராமசாமி அய்யங்கார் மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பருமாவார். மகாத்மா காந்தி சென்னைக்கு வந்த சமயத்தில் அவர் தங்கியிருந்த இல்லத்தின் வாயில் காப்போனாகவும் பணியாற்றியவர். இந்தக்காட்சியை பாரதி திரைப்படத்திலும் பார்த்திருப்பீர்கள். இத்தகைய பின்புலத்தில் வெளிவந்திருக்கும் வீரகேசரிக்கு இன்று ஓகஸ்ட் 6 ஆம் திகதி 89 வயது பிறக்கிறது.

வீரகேசரி நாளிதழ், செய்திகளுக்கும் செய்தி அறிக்கைகளுக்கும் உலக விவகாரங்கள் மற்றும் உள்நாட்டு நடப்புகளுக்கும் முக்கியத்துவம் வழங்கினாலும், ஞாயிறன்று வெளியாகும் வாரவெளியீடு, மற்றும் வராந்தம் வெளிவரும் சங்கமம் முதலானவை கலை, இலக்கியம்,கலாசாரம், பண்பாட்டுக்கோலங்கள், மலையகம், சினிமா, சிறுகதை, கவிதை, தொடர்கதை, முதலான விடயதானங்களுக்கு களம் அமைத்து வெளிவருகின்றன. இலங்கையில் சிறந்த சிறுகதைகளை வெளியிட்ட இதழ் என்ற பெருமையும் வீரகேசரி வாரவெளியீட்டையே சாரும். காலத்துக்காலம் சிறுகதை, நாவல் மற்றும் கலை இலக்கியப்போட்டிகளையும் வாரவெளியீடு நடத்தியிருக்கிறது. கடந்த 88 வருடகாலத்தில் வீரகேசரியில் பல புகழ்பூத்த படைப்பாளிகள், கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது முக்கியமான தகவல்.

வீரகேசரியில் ஈழத்து எழுத்தாளர்கள் அ.ந. கந்தசாமி, கே. கணேஷ், சில்லையூர் செல்வராசன், செ. கதிர்காமநாதன், காசிநாதன், அன்டன் பாலசிங்கம், க. சட்டநாதன், ஆ. சிவநேசச்செல்வன், சோமசுந்தரம் ராமேஸ்வரன், மூர்த்தி, தெய்வீகன், சூரியகுமாரி பஞ்சநாதன், சந்திரிக்கா சுப்பிரமணியன், ரவிவர்மா,  எஸ்.எம். கோபாலரத்தினம், முருகபூபதி, டீ.பி.எஸ்.ஜெயராஜ், சொலமன் ராஜ், ஜீ.நேசன், சுபாஷ் சந்திரபோஸ், அன்னலட்சுமி இராஜதுரை, கமலா தம்பிராஜா, யோகா பாலச்சந்திரன், கு. இராமச்சந்திரன் , வி.ஏ. திருஞானசுந்தரம் உட்பட பலர் வீரகேசரி – மித்திரன் மற்றும் முன்னர் வெளிவந்த ஜோதி முதலானவற்றின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர்கள்தான். தமிழகத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராக விளங்கிய கு.மா. பாலசுப்பிரமணியமும் ஒரு காலத்தில் வீரகேசரியில்தான் பணியாற்றியவர்.

Continue Reading →