எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் தனது ‘புகையில் தெரியும் முகம்’ நாவலுக்கான நூலின் ஆரம்பத்தில் கதையின் கதை என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் அதனைக் குறிப்பிடுகையில் முகவுரை, முன்னுரை போன்ற பதங்களப் பாவித்திருப்பார். அதிலவர் பின்வருமாறு கூறுவார்:
“அடுத்தபடியாக இந்த முகவுரையை ஏன் எழுதினீர் என்று கேட்கின்றீர்களா? சரி அதையும் சொல்லி விடுகிறேன்” என்று கூறியதுடன் ” முன்னுரையை நானேதான் எழுதவேண்டுமென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கேட்பார்களானால் – அதற்கு சுருக்கமாகவே பதிலளித்துவிடுகின்றேன்” என்றும் கூறுவார்.
இது பற்றிய தனது முகநூல் எதிர்வினையில் எழுத்தாளர் மைக்கல் கொலின் (மகுடம் இதழாசிரியர்) பின்வருமாறு கேல்வியொன்றினை எழுதியிருப்பார்:
“நூலாசிரியர் தனது நூலுக்கு எழுதும் உரை முன்னுரையே.ஏனையோர் எழுதுவது அணிந்துரை, மதிப்புரை, வாழ்த்துரை, அ.செ.மு.தனது நூலுக்கு தான் முன்னுரை எழுதியதில் என்ன புதுமை உண்டு.”
இது பற்றிச் சிறிது சிந்தித்துப்பார்த்தேன். அப்பொழுதுதான் முன்னுரை, அணிந்துரை மற்றும் முகவுரை விடயத்தில் பலருக்கும் ஒருவிதக் குழப்பமிருப்பதை அறிய முடிந்தது. இது பற்றிச் சிறிது சிந்தித்துப்பார்த்தேன். அ.செ.மு அவர்கள் முன்னுரையையும் முகவரையையும் ஒன்றாகக் கருதுவதாகத்தான் அவரது ‘கதையின் கதை’ என்னும் கூற்றிலிருந்து முடிவு செய்யலாமா?
ஆக்ஸ்போர்ட்டின் ‘ஆங்கில -ஆங்கில -தமிழ்’ அகராதியில் பின்வருமாறு Preface என்னும் சொல்லை விபரித்திருப்பார்கள்:
“ஒரு நூல் இன்னது பற்றியது அல்லது இன்ன காரணத்துக்காக எழுதப்பட்டது என்பதை விளக்கும் அதன் எழுத்து வடிவிலான முன்னுரை , முகப்புரை”
முகவரை பற்றி க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதியில் ” உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரை. ஆசிரியர் முன்னுரை”. மேற்படி அகராதியில் முன்னுரை பற்றி “நூலாசிரியரால் நூல் குறித்த கருத்துகள அடங்கிய அல்லது நூலுக்கு அறிமுகமாக அமையும் கட்டுரை preface” என்று கூறப்பட்டிருக்கும்.