ழுத்தாளர் அகஸ்தியர் பிறந்த தினம் ஆகஸ்ட் 29. அதனையொட்டிப் பிரசுரமாகும் கட்டுரை!
இலக்கியம் என்பது ஒரு எழுத்தாளன் வாழும் காலகட்டத்தில் அவன் கண்ட சமுதாயத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு சரித்திர ஆவணம் என்பது எனது கருத்து. தான்வாழும் சமுதாயத்தில் சாதி மத இன,நிற வர்க்க பேதங்களால் மக்களுக்கு நடக்கும் கொடுமைகயைக் கவனிக்காமல் அல்லது தெரிந்தும் தெரியாத நடித்துக்கொண்டு ஒரு எழுத்தான் தனது இலக்கியப் படைப்புக்களைச் செய்தால் அவை சமூகம் சாராத-தன்னை அந்தச் சமுகத்துடன் இணைத்துப் பாராத ஒரு படைப்பாளியின் உயிரற்ற வெற்றுப் படைப்பாகத்தானிருக்கும்.
இலக்கியங்கள் ஏதோ ஒரு வகையில் படைப்பாளியின் அடையாளத்தை அவர் யார் என்று படம் பிடித்துக் காட்டுகிறது. அரசியல் சாராத, ஒரு தனி மனிதனின் உள்ளுணர்வுகளின் பிரபலிப்பான படைப்பாக ஒரு இலக்கியம் கணிக்கப் பட்டாலும் அவனின் வரிகளில் ஒன்றிரண்டு அந்த இலக்கியததைப் படைத்தவனின் சமூகக் கண்ணோட்டதை;தைக் காட்டிக் கொடுத்து விடும்.
இலங்கை எழுத்தாளர்கள் பலர் 40-60ம் ஆண்டுகளில் சமுகத்தின் வேறுபாடுகளால் அடக்கப் பட்டு ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றி எழுதினார்கள். அவர்களின் சமுதாய வெளியுலகத் தொடர்பால் கண்ட கொடுமைகளையுணர்ந்த உள்ளுணர்வின் கோபப்பொறிகள்,ஆதங்கங்கள், அதிர்வுகள்,என்பன அவர்களின் படைப்புக்களில் பிரதி பலித்தன.
ஒட்டுமொத்தமான மக்களின் சமத்துவ வாழ்க்கைக்கு வழிதேடியவர்களில் சமயவாதிகள்,அரசியல்வாதிகள் என்று பலர். அவர்களில் தங்கள் வாழ்க்கையையே ஒடுக்கப் பட்ட மக்களின் நிலையை மாற்றும் வித்தில் தங்கள் இலக்கியப் படைப்புக்களைச் செய்தவர்களும்; அடங்குவர்.
தமிழ் இலக்கியம் வளர்ந்த தமிழ்நாட்டில் சாதிக் கொடுமையால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இலக்கியத்தற் கேட்காமலிருந்த கால கட்டத்தில் அவர்களின் துயரைத் தங்கள் படைப்புக்களில் காட்டியவர்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள்.
அந்த வரலாற்றைக் கொண்ட இலங்கையின் முற்போக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமான படைப்பாளிகளில் அகஸ்தியரும் ஒருத்தர். இவர், 28.8.1926ம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை என்ற இடத்தில் திருவாளர் சவரிமுத்து-அன்னம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். இவரின் எழுத்தாற்றலை மதித்து இவருடன் எனக்கு ஒரு உள்ளார்ந்த ஈர்ப்பு ஏற்பட்டதற்கு என் தாயார் மாரிமுத்து பிறந்த அதே 1926ம் ஆண்டு இவரும் பிறந்தது ஒரு காரணமோ எனக்குத் தெரியாது.
பாரிசில் இவர் வாழ்ந்தபோது ஓரிரு நாட்கள் அவருடன் பழகியது எனது அதிர்ஷ்டம் என்று கருதினேன்.தன்னலமற்ற ஒரு சாதாரண தமிழன், தனது சமூகத்தில் படிந்து கிடக்கும் பன்முகக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஆளும் வர்க்கம் எப்படி ஏழை மக்களை வதைக்கிறது. வாட்டுகிறது,மனிதராக மதிக்காமல் இழிவுபடுத்துகிறது என்பதைத் தனது படைப்புக்கள் மூலம் உலகுக்குச் சொன்ன முற்போக்கு எழுத்தாளர்களில் திரு அகஸ்தியரும் முன்னிலைப் படுத்தப் படவேண்டியவர்.