2016இல் காலச்சுவடு வெளியீடாக வந்த ‘நட்ராஜ் மகராஜ்’ தீவிர வாசகர்களின் கவனத்தைப் பெற்ற நாவல்களில் ஒன்றாக அப்போது இருந்தது. அதன் வாசிப்பும் வாசிப்பின் மேலான விமர்சனங்களும் இன்னும் ஓயவில்லையென்றே படுகிறது அல்லது இன்னும் ஓய்ந்துவிடக்கூடாத அவசியத்தோடு இருக்கிறது.
முதல் தடவை 2016லேயே நாவலை வாசித்திருந்தபோதும், 319 பக்கங்களினூடாகவும் உள்ளோடியிருந்து தன்னை வெளிப்படக் காட்டாதிருந்த அந்த ஒற்றைச் சரடை என்னால் காணக்கூடவில்லை. நாவலிலிருந்து ஒரு இழையை இழுக்கிறபோது அது கழன்று ஒரு துண்டாக வந்து விழுந்துவிடுவதாய் இருந்தது. இன்னொரு இழையை இழுக்கிறபோதும் நிலைமை அவ்வாறாகவே இருந்துவிட்டது. இழைகள் வெளியே வந்து விழுந்திருந்தாலும் மறுபடி புதிதாக அந்த இடத்தில் அவை முளைத்துக்கொண்டே இருந்துவிட்டன. அது தவிர்க்கவியலாதது. ஏனெனில் அதுவும் நாவலின் பாகமாகவே இருந்தது. அதனால் 319 பக்கங்களினூடாகவும் இழைந்தோடிய இழையை என்னால் காணவே முடியாது போய்விட்டது. அது எனக்கு ஒரு அதிசயமாகவே இருந்தது.
என்னில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நூல் குறித்தும் நான் நண்பர்களுடன் உரையாடாமலோ எழுத்தில் பதிவிடாமலோ இருந்ததில்லை. ஆனால் மனத்துள் பாதிப்பை ஏற்படுத்திய ‘நட்ராஜ் மகராஜ்’பற்றி எதையும் செய்ய முடியாமல் நான் வெறிதே விட்டிருந்தேன். அதையொரு சவாலாக எடுத்துக்கொண்டு இரண்டாம் முறையாகவும் நாவலுள் பிரவேசித்தேன். அதன் வாசிப்பு எனக்கு அலுத்திருக்கவில்லை. சரியான இழை அப்போது தட்டுப்பட்டதுபோலிருந்தது. ஆனால் எனது ‘கலிங்கு’ நாவல் என் முழு கவனத்தையும் நேரத்தையும் தனக்காகக் கேட்டுக்கொண்டிருந்ததில் நான் இதற்கான நேரமொதுக்க முடியாதுபோய்விட்டேன். இப்போது சாவகாசமான நிலையில் ஒரு மூன்றாவது வாசிப்பைச் செய்தபோது அந்த 319 பக்கங்களிலும் உள்ளோடியிருந்த இழையை என்னால் கண்டடைய முடிந்தது. அது உண்மையில் பல இழைகள் சேர முறுக்கப்பட்ட ஒரு கயிறே.
நவீன யுகத்தின் அவசரங்களும் அவசங்களும் பதினெட்டு வருஷங்களுக்கு முந்தியிருந்த அந்த இருபதாம் நூற்றாண்டுபோலக்கூட இல்லாமல் வெகுவான மாற்றங்களை அடைந்திருக்கிறது. அது மனிதனில் விழுத்தியிருக்கும் அவாக்கள் விரக்திகள் பேதலிப்புகள் யாவும் மனித மனநிலையின் மாறுபாடும் பிறழ்ச்சியுமாய் எதிர்வினை செய்கின்றன. அவ்வாறான மனநிலை கொண்ட மனிதர்கள் வாழ்வியலில் மிக இயல்பாக எங்கும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை மிக இலகுவாக டிப்றெஷன் எனக் கூறிவிட்டு, அந்த மனநிலையோடேயே நம்மோடு உறவுகொண்டுள்ள பலரை நாம் கவனித்திருக்க முடியும். அல்லது அவ்வாறான மனநிலையுடையவர்களாக அவர்கள் நம்மைக் கணித்திருக்கக் கூடும். அவதி மனங்களின் மனநிலையென்பது பயித்தியத்தின் ஒரு ஆரம்பக் கூறுதான். மருத்துவம் இன்றிக்கூட இந்த மனநிலையாளர் இயல்பான வாழ்க்கைக்குத் தகுதியானவர்களாக இருக்கமுடியும். ஏதோவொரு பொழுதிலும் ஏதோவொரு வகையிலும் அவரவரும் உணர்ந்திருக்கக்கூடிய இந்த மனநிலை சமூகத்துக்கில்லாவிடினும் அவருக்கே தீங்கானதென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அது அவரை அழுத்தும் விஷயத்தின் அளவும் விசையும் சார்ந்ததாகவிருக்கும்.