– தமிழகத்தில் வெளிவரும் பிரபல “தினமலர்” பத்திரிகையின் நிறுவனர் – அமரர். டி.வி.ராமசுப்பையர்அவர்களது, நினைவு தினத்தை முன்னிட்டு, வருடாந்தம் நடத்தப்படும், “அமரர்.டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டி” வரிசையில், 1999ம் ஆண்டு, முதற் பரிசாக ரூ.7500 பெற்றுத் தந்த சிறுகதை இது. – ஸ்ரீராம் விக்னேஷ் –
“பாருப்பா, மனுசன் அம்பது வயசாகியும்,என்னமாதிரி பறந்து பறந்து நியூஸ் கவர்பண்ராரு….ரிப்போட்டர்ன்னா இப்பிடித்தான் இருக்கணும்….”
சீப் எடிட்டர் சீனிவாசன், தன் நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டதாக சப்-எடிட்டர் சாரங்கபாணி எனக்குச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்ட சம்பவம் நடந்து மூன்று மாதமாகிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நானும்,சாரங்கபாணியும் ஒன்றாகத்தான் இந்த தினசரிப் பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்தோம். எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கெல்லாம், ஒன்றாகவே சென்று செய்திகள் தொகுத்திருக்கின்றோம்.
அவரது எம்.ஏ., பட்டப்படிப்பும், எனது எஸ்.எஸ்.எல்.சி.யும் நாளடைவில் எங்கள் இருவரின் தொழில்ரீதியான அந்தஸ்தில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, அன்றய நட்பு இன்றும் நீடிக்கத்தான் செய்கிறது.
இருந்தும், கடந்த இரண்டு மாதமாக நிருபர் பணியில் நான் இல்லை.
நான் என்னதான் தவறு செய்துவிட்டேன்? எனது தவறாக அவர்களின் கண்ணிலே பட்டது என்ன?
மாற்றுப் பத்திரிகையொன்றில், பணிபுரியும் மனோகரனோடு பேசுவதும், பழகுவதும்தான்.
அந்த மனோகரன் எங்கள் பத்திரிகையில் சிலகாலம் பணி செய்தவர்.என்னைவிட பதினைந்து வயது இளையவர்.முன்னேறத் துடிக்கும் இளைஞர். அதைவிட, பத்திரிகைத்துறையில் எனது சீடரும் கூட.
இந்தச் சந்திப்பும், வார்த்தைப் பரிமாறல்களும் அடிக்கடி நடப்பதுதான்.
சமீபத்தில் ஒருதடவை மனோகரன் என்னைச் சந்தித்தபோது என்னிடம் கேட்டார்;
“சார்…. ஒரு வித்தியாசமான பேட்டி எடுத்திருக்கிறேன்….பிரிண்டிங்குக்கு குடுக்கிறத்துக்கு முன்னால ஒருதடவை உங்ககிட்ட காட்டி, உங்க ஒப்பீனியனைக் கேட்டு, கரெக்ஷன் பண்ணிட்டு குடுக்கலாம்னு நினைக்கிறேன் சார்…. லைட்டா கொஞ்சம் பாக்கிறீங்களா….”
வஞ்சகமில்லாத பேச்சுவார்த்தையில் குழந்தைத்தனம். நான் பக்குவமாகச் சொன்னேன்.