எழுத்திலும் பேச்சிலும் தர்மாவேசம் ! இயல்பில் குழந்தை உள்ளம் ! இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அகஸ்தியர் எழுதிய கடிதங்கள்
இலங்கையின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், வடபுலத்தில் ஆனைக்கோட்டையில் சவரிமுத்து – அன்னம்மாள் தம்பதியருக்கு 1926 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பிறந்தவர். தனது இளம் பராயத்திலேயே இலக்கிய உலகில் பிரவேசித்து, இலங்கையில் வெளியான பல பத்திரிகைகள், இதழ்களில் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், கட்டுரை, உணர்வூற்று உருவகம், நாடகம், இலக்கிய வரலாறு முதலான சகல கலை, இலக்கியத்துறைகளிலும் தொடர்ச்சியாக அயர்ச்சியின்றி எழுதியவர். தமிழக இலக்கிய இதழ்களிலும் அவரது பல படைப்புகள் வெளியாகின. இலங்கை மல்லிகை, தமிழ்நாடு தாமரை ஆகிய இதழ்கள் முகப்பில் அகஸ்தியரின் படத்துடன் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளன. அவரது நூல்கள், இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், பிரான்ஸிலும் வெளியாகியுள்ளன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழுவில் இணைந்திருந்தவர். தனது படைப்புகளை வெளியிடத் தயங்கிய பத்திரிகை, இதழ்களின் ஆசிரியர்களுடனும் எந்தத் தயக்கமும் இன்றி நேரடியாக கருத்துமோதல்களில் ஈடுபடும் இயல்பும் கொண்டிருந்தவர். தர்மாவேச பண்புகள் அவரிடமிருந்தபோதிலும் குழந்தைகளுக்குரிய மென்மையான இயல்புகளினாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் அன்போடு அணைத்தவர். 1972 முதல் எனதும் நெருக்கமான இலக்கிய நண்பரானார். கொழும்பு வரும் வேளைகளில் நான் பணியாற்றிய வீரகேசரி அலுவலகம் வந்து சந்திப்பார். 1983 தொடக்கத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டை கொண்டாடிய வேளையில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த மூத்த எழுத்தாளர்களும் பாரதி இயல் ஆய்வாளர்களுமான தொ.மு.சி. ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கும் அழைக்கப்பட்டனர். யாழ். கொட்டடியில் அமைந்திருந்த பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூபாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் தமிழக எழுத்தாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, இலக்கிய கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அகஸ்தியர்தான் தலைமை தாங்கினார்.
1983 இனக்கலவர காலத்தில் யாழ்ப்பாணத்தில் நான் தங்கியிருந்தபோது ஒருநாள் அவரை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சந்தித்தேன். அதுவே அவருடனான இறுதி நேரடிச்சந்திப்பு. எனக்கு முன்னமே அகஸ்தியர் வெளிநாடு புலம்பெயர்ந்து 1986 முதல் பிரான்ஸில் வாழத்தலைப்பட்டார். நானும் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர், எனது முகவரியை தேடிப்பெற்று தொடர்புகொண்டார். 1995 ஆம் ஆண்டு அவர் மறையும் வரையில் என்னுடன் கடிதத்தொடர்பிலிருந்தவர். அவர் எழுதிய பல கடிதங்கள் இன்னமும் எனது சேகரிப்பில் பத்திரமாக இருக்கின்றன.