– தென்னிலங்கையில் மகாவலி ஆற்றினை வழி மறித்துக் கட்டிய அணைகள் –
வீணாகக் கடலில் கலக்கும் மகாவலி ஆற்று நீரை அணைகள் கட்டித் தடுத்து , மக்களின் விவசாயத்தேவைகள் மற்றும் மின்சாரத்தேவைகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்துவதும், நகரங்களை நோக்கி வேலை வாய்ப்புகளுக்காகப் படையெடுக்கும் கிராமப்புற மக்களை அவ்விதம் செல்லாமல் , தாம் வாழும் பகுதிகளில் தங்கி விடச்செய்வதும், புதிய நகர்களை நதியோடும் திசை வழியே உருவாக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள். மகாவலித்திட்டம் திருப்பப்படுமாயின் உண்மையில் வட, கிழக்குப் பகுதிகளுக்கு நன்மையையே தரும். ஆனால் இவ்வகையான திட்டங்களைக் காலத்துக்குக் காலம் இலங்கை அரசுகள் பெரும்பான்மைச் சமூகத்தினரின் குடியேற்றங்களுக்காகப் பயன்படுத்துவதுதான் பிரச்சினையைக் கொண்டுவருகின்றது. காலத்துக்காலம் தமிழ்ப்பகுதிகள் பல சிங்களப்பகுதிகளாகியதைப் பார்க்கின்றோம். அம்பாறை திகாமடுல்லாவாகியதையும், மணலாறு வெலிஓயா ஆகியதையும் பார்க்கின்றோம். இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இவ்வகையான குடியேற்றத்திட்டங்கள். இவ்விதமான திட்டங்களை நிறைவேற்றும்போது அப்பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்கள் (அவ்விதம் அப்பகுதிகளில் வாழ்ந்திருப்பின், வாழ்ந்திருந்து வெளியேற்றப்பட்டிருப்பின்) மீளக்குடியேற்றப்பட வேண்டும். மேலும் அப்பகுதிகளில் புதிதாக மக்கள் குடியேற்றப்படுவதாக இருப்பின் அப்பகுதியில் வாழும் மக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
Continue Reading →