தொடர் நாவல்: வெகுண்ட உள்ளங்கள் (3)

- கடல்புத்திரன்  (பாலமுரளி) -[ 1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் ‘கடல்புத்திர’னும் ஒருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து ‘வெகுண்ட உள்ளங்கள்’ நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றோம். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது ‘வெகுண்ட உள்ளம்’ நாவலில் காண முடியாது. ‘வெகுண்ட உள்ளங்கள்’ என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது. கூடவே அமைப்புகள் எவ்விதம் செயற்பட்டன, அவற்றின் கட்டமைப்புகள் எவ்விதமிருந்தன என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றது. – பதிவுகள் -]


அத்தியாயம் மூன்று!

பிறகு அண்ணன் மன்னி வாழ்வு நல்லபடியாகவே ஒடியது. வெளிநாடு போற ஆசை அண்ணனுக்கும் ஏற்பட்டது. அவர்களுக்கிடையில் காசு போதியளவு கிடைக்காமையால் பூசல்கள் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தன. ‘என்னடாப்பா வீட்டில் சத்தம் கேட்கிறது’ என்று அவனுடைய நண்பர்கள் கேட்க.ஒரளவு அடங்கிப் போயிருந்தான்.

இயக்கம் அவனை பிடிச்சபோது மன்னி “விடமாட்டேன்” என குழறி அழுதார்.அப்படியும் கொண்டுபோய் விடவே, வீட்டையே ஒடிவந்தார்கள்.

திரும்பிய பிறகு அடிவாங்கியவர்கள் இரண்டு மூன்று நாள் நோவால் வேலைக்கு போகமுடியாமல் தவித்தார்கள்.

கனகனை, அன்டனை, நகுலனைக் கண்டால் விட்டார்கள்.  அண்ணனோடு நேற்று வந்த பஞ்சன் அவனைப்பார்த்துவிட்டு “உங்கட ஆட்கள் மோசமில்லையடா, ஆனா, அடி வாங்கினால் 2,3 நாளைக்கு கட்டாயம் புக்கை கட்டவேணும்” என்றான்.

அவனுக்கு சிரிப்பு வந்தது. அன்டனும் நகுலனும் நண்பர்களாகவிருப்பதால் அவனையும் இயக்கமாக கருதி முறைப்பாடு தெரிவிக்கிறார்கள்.

அண்ணனும் மெளனமாக இருப்பது சங்கடமாக இருக்கிறது. அவனைக்குறித்து புறுபுறுத்தாவது இருக்கலாம். ஆனால் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடுகிறவர்கள் என்ற மரியாதையும் அவர்களுக்கு இருக்கவே செய்தன.

எனவே இயக்கத்தோடு இழுபடுகிறவர்களையும், ‘சப்போட்’ பண்ணுகிறவர்களையும் அவர்கள் தடுக்க முயல‌வில்லை.

ஏ.ஜி.ஏ கூட்டத்திலே, புதிதாய் ஒருத்தனை அறிமுகப் படுத்தினார்கள். இருவருக்கும் அவனை முன்னமே தெரியும்.

“இவன், தற்காலிகமாக தெற்கு அராலிப்பகுதிக்கு ஜி.எஸ்.ஆக நியமிக்கப்படுகிறான்” என அறிவித்தார்கள்.

சங்கானை உப அரசாங்கப் பிரிவில், அராலியும் ஒரு கிராமம். மற்ற 12 கிராமங்களைப்போல இல்லாமல் பெரிய கிராமமாக இருந்தது. அதன் வடக்கு, தெற்கு பகுதிகள் ஒவ்வொன்றுமே நிலப்பரப்பில் ,சாதிப்பிரிப்பில் தனி தனிக்கிராமத்துக்குரிய குணாம்சங்களைக் கொண்டிருந்தன.

முழு கிராமத்துக்கு ஒரு கிராமசேவகரையே இலங்கை அரச பிரிவால் நியமிக்கப்பட்டதால் அவ்விடத்து மக்கள் அதிகமாக கஷ்டப்பட்டார்கள். அதை ஒட்டியே இவர்களும் வடக்கைச் சேர்ந்த லிங்கனை ஜி.எஸ்.ஆக நியமித்து விட்டிருந்தனர். ஆனால், தெற்குக்கு இன்னொரு ஜி.எஸ்.ஐ நியமிக்க வேண்டிய தேவையிருந்தது.

தற்காலிகமான திலகனின் தெரிவு நல்லது தான் . ஆனால் ‌வாலையம்மன் பகுதி ஆட்களுக்கு நிச்சயமாக ஆச்சரியமளிக்கப் போகிறது. மற்றைய கிராமங்களிலிருந்து இரண்டு , இரண்டு அங்கத்தவர்கள் வந்திருந்தார்கள். லிங்கன் ,தன்னுடைய தோழர்களிற்கு அரசியல் தெரியவேணும் என்பதற்காக எப்பவும் இரண்டு தோழர்களை கூட்டத்திற்கு அழைத்து வருபவன். தெற்குக்கு புதியவர் நியமிக்கப் படுவதால் இவ்விருவரையும் அழைத்திருந்தான். அடுத்த கூட்டத்திற்கு வடக்கிலிருந்து இருவர் வருவார்கள். அவனுக்கும் கூட‌ பெரிதாக அரசியல் தெரியாதுதான். ஆனால் இவர்களிற்கு எல்லாம் அவன் மூத்த ‘பாட்ஜ். எனவே கிராமத்திற்கும், மேலிடத்திற்குமிடையில் இருக்கிற‌ ஒரு தபால்காரனாக‌ தன்னை வைத்திருந்தான். எப்பவும் தொடர்பையும் பேணி வந்தான்.

Continue Reading →