முகநூல்: தொடக்கமும் தொடர்ச்சியும் விடை பெறுதல் ​ – பிரபஞ்சன்

– எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவையொட்டி எழுதிய முகநூற் பதிவிது. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்.காம்

நெருக்கடிமிக்க சென்னை அண்ணா சாலையின் தென்புறம் நாங்கள் நான்கைந்து நண்பர்கள் நிற்க, மார்பில் அணைக்கப்பட்ட நான்கு பீர் பாட்டில்களோடு சாலையைக் கடந்த பிரபஞ்சனிடம் அந்த இரவு பத்துமணிக்கு சிலர் நின்று ஆட்டோகிராப் கேட்டார்கள். பீர் பாட்டில்களை அவர்கள் கையிலேயே தற்காலிகமாகத் தந்துவிட்டு சாலை ஓரமாக நின்று கையெழுத்திட்டுத் தந்த பிரபஞ்சனைப் பார்த்து, “இதெல்லாம் வேணாம் சார், உங்களுக்கென்று தமிழ்நாட்டில் ஒருபெரிய இமேஜ் இருக்கு ” என்று சொன்ன என்னை தடுத்து, “அப்படி ஒரு பொய்யான இமேஜை நான் வெறுக்கிறேன் பவா. நான் எதுவாக இருக்கிறேனோ அப்படியான பிம்பம் மட்டுமே வெளியிலேயும் பதிவாக வேண்டும். நான் எப்போதாவதுதான் குடிப்பவன். அது வெளியே தெரிய வேண்டாமெனில் இதை இனி தொடக்கூடாது இல்லையா” என்ற அப்படைப்பாளியின் கையிலிருந்த பாட்டில்களை கொஞ்சநேரம் என் கைகளுக்கு மாற்றி நடந்தது நினைவிருக்கிறது. எவர் கைகளிலேயும் நிரந்தரமாக அடக்கிவிட முடியாத நீர் தான் பிரபஞ்சன் எனத் தோன்றும். என் கல்லூரிப் படிப்பை முடித்து, இலக்கியம் நோக்கி வெறிகொண்டலைந்த காலத்தில் கி.ரா. பற்றிய ஒரு இலக்கியக்கூட்டத்தில்தான் பிரபஞ்சனை முதன்முதலில் பார்த்தேன். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை போட்டு கையில் புகைந்த ஒரு சிகரெட்டோடு அரங்கவாசலில் நின்றிருந்த அவரை ஏனோ அப்படிப் பிடித்துவிட்டது. எனக்கு அது இத்தனை ஆண்டுகளாகியும் அகல மறுக்கும் அன்பின் அடர்த்தி. பத்தாயிரம் ரூபாயை கவரில் வைத்து கொடுப்பார்கள் என்ற நிச்சயத்திற்காக, ஒன்றுமேயில்லாத ஒருவனை உலகக்கவி என்றும், தன் படைப்பு அவன் அதிகாரக் காலடியில் அச்சேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், அவன் எழுத்து நோபலுக்கும் மேலே என எழுதுகிற பலபேருக்கு மத்தியில் பிரபஞ்சன் என்ற அசல் இன்றளவும் தமிழ்வாசிக்கும் பலராலும் நேசிக்கப்படுவதற்கு அவரிடம் இயல்பிலேயே இன்றளவும் இருந்து வருகிற இந்த எளிமையும் உண்மையும்தான் காரணம்.

தகுதிபெறாத படைப்புகள் எதுவாயினும், அதை எழுதியவன் இந்தியாவின் பிரதமரேயாயினும் தன் கால் சுண்டுவிரலால் அவர் எத்தித் தள்ளிய சம்பவங்கள் இலக்கிய உலகம் அறிந்தவைதான். எதிலும் எங்கும் நிலைத்திருக்கத் தெரியாத படைப்பாளிகளுக்கேயுள்ள அலைவுறும் மனம் கொண்டவர் பிரபஞ்சன். முறையாகத் தமிழ் படித்து, முதன்முதலில் மாலைமுரசு பத்திரிகையில் ஒரு நிருபராகத் தன் வாழ்வைத் துவக்குகிறார். துவக்கத்திலேயே உண்மையின் குரூர முகம் அச்சேற்ற மறுத்து அவரை வெளியேற்றுகிறது; அல்லது அவரே வெளியேறுகிறார். மானுட ஜீவிதத்தின் இந்த எழுபத்து மூன்று வயது வரை அவருக்கு ஏற்பட்ட முரண்பாடுகளையும், சமூக வாழ்வில் ஒரு படைப்பாளியால் சகித்துக்கொள்ள முடியாத அருவருப்பு மிக்க சமரசங்களையும் உதறித் தள்ளுபவராகவும், எதிர்கால லௌகீக வசதிகளைப் பற்றி எந்தக்கவலையுமின்றி ஆரம்பத்தில் தன் உடல் மீதேறிய அதே உற்சாகத்துடன் கடற்காற்றின் குளுமையுடனும், சுதந்திரத்துடனும் நம்மோடு அலைந்து திரியும் எளிய படைப்பாளியாகவும்தான் பிரபஞ்சனை ஒவ்வொருவருமே உணரமுடியும்.

Continue Reading →

எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பு

எழுத்தாளர் பிரபஞ்சன்எங்கள் காலத்தில் வாசிப்பு முக்கியமானதொன்றாக இருந்தது. ஒருவரோடு உரையாடும் போது அவரிடம் இலக்கியத்தேடல் இருக்கிறதா இல்லையா என்பதை அவருடைய வாசிப்பு அனுபவத்தில் இருந்துதான் பெறமுடிந்தது. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் நிறைய வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இதனால் அவர்களின் கல்வி அறிவை மட்டுமல்ல, அவர்களின் பொது அறிவையும் இனம் காண முடிந்தது. சிறுகதை, நாவல் போன்றவற்றில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினேன். அந்த வரிசையில்தான் பிரபஞ்சனின் ஆக்கங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். சுருங்கச் சொன்னால், முகம் தெரியாத பிரபஞ்சனின் வாசகர்களில் ஒருவனாக இருந்த எனக்கு, அவர் 2011 ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்த போது, அவரை நேரிலே சந்தித்து உரையாடச் சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

எழுத்தாளர் பிரபஞ்சனை நான் சந்தித்ததற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. சமீபத்தில் அமரரான சித்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘யுகமாயினி’ குறுநாவல் போட்டியில், ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற எனது குறுநாவல் பரிசு பெற்ற போது, அந்தக் குறுநாவல் போட்டிக்கு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தான் நடுவர் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தாகவும் தெரிவித்திருந்தார். அதனால்தான் கனடாவுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்த சமயம், அவரைச் சந்தித்து உரையாடினேன். அப்போது அந்த ‘அம்மாவின் பிள்ளைகள்’ குறுநாவலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டியிருந்தார். போர்க்காலச் சூழலில் எழுந்த அந்த நாவலின் கருப்பொருளையும், சிறப்பு அம்சங்களையும் சொன்ன போது, அவருடைய ஞாபக சக்தியையும், முழுமையாக வாசித்துத்தான் அதைத் தெரிவு செய்திருந்தார் என்பதையும் நினைத்து பெருமைப்பட்டேன்.

Continue Reading →