தொடர் நாவல்: வெகுண்ட உள்ளங்கள் (4)

- கடல்புத்திரன்  (பாலமுரளி) -

[ 1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் ‘கடல்புத்திர’னும் ஒருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து ‘வெகுண்ட உள்ளங்கள்’ நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றோம். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது ‘வெகுண்ட உள்ளம்’ நாவலில் காண முடியாது. ‘வெகுண்ட உள்ளங்கள்’ என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது. கூடவே அமைப்புகள் எவ்விதம் செயற்பட்டன, அவற்றின் கட்டமைப்புகள் எவ்விதமிருந்தன என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றது. – பதிவுகள் -]

– கடல்புத்திரனின் ‘வெகுண்ட உள்ளங்கள்’ நாவலின் நான்காம் அத்தியாயம் இது. இதில் விபரிக்கப்படும் மிதவை பற்றிய தகவல் ஈழத்தமிழர்கள்தம் ஆயுதப்போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. போராட்டச்சூழல் காரணமாகப் பாதைகள் பல தடைப்பட, முக்கியத்துவமற்றிருந்த அராலித்துறை ஊர்க்காவற்றுறைக்குச் செல்வதற்குரிய படகுத்துறையாக முக்கியம் பெறுகின்றது. அப்பகுதிக் கடற்றொழிலாளர்களால் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த படகுச்சேவையை போராட்ட அமைப்புகள் தம் வசம் எடுத்துக்கொள்கின்றன. இந்நாவலில் முக்கிய பாத்திரங்களிலொன்றான கனகனின் ‘இயக்கம்’ பயணிகளுடன், வாகனங்களையும் ஏற்றிச்செல்கின்ற பெரிய மிதவையொன்றினை வெற்றிகரமாகச் செய்கின்றது. இது பற்றி நாவல் பின்வருமாறு விபரிக்கின்றது:

“தீவுப்பகுதி எ.ஜி. எ. அமைப்பு புத்திசாலித்தனமாக இன்னொரு ஏற்பாடும் செய்திருக்கிறார்களடா. வெல்டிங் பெடியன், தோழனும் கூட‌… சுந்தரத்தின் ஐடியா வை அந்த எ.ஜி. எ.அமைப்பு ஒத்துழைப்புக் கொடுத்து செயற்படுத்தியது. அவனோடு சேர்ந்து செயல்பட ஏழெட்டுப் பேரை சர்வேசன் நியமித்தான். காம்பிற்கு பின்னாலுள்ள பெரிய‌ வளவில் புதிய வெற்று டீசல் ட்ரம்கள் குவிக்கப்பட்டன. சுந்தரம் குழு சுறுசுறுப்பாக இயங்கியது. அவற்றின் வாய்ப் பகுதிகளை மூடி வெல்ட் பண்ணினார்கள். காற்று அடைக்கப்பட்ட ட்ரம்களை அருகருகாக அடுக்கி , அதன் மேல் கம்பிச்சட்டம் வைத்து இணைத்து ஒட்டினார்கள். அப்படியே ஒரு மேடை போல் அமைத்தார்கள்.மூன்று நான்கு நாட்களாக முழு மூச்சாக செயல் பட்ட அவர்கள் கடைசியில் வெற்றியடைந்திருந்தனர். அது முதல் தரமான மிதவையாக காரைநகர் கடற்பகுதியிலுள்ள பெரிக்கு இணையாக செயற் படுமென்ற நம்பிக்கை அவர்களுக்கு எல்லாம் இருந்தது. ட்ராக்டரில் ஏற்றப்பட்டு புழுதியைக் கிளப்பிக் கொண்டு போய் கடலில் இறக்கப்பட்ட போது பெடியள்கள் கரகோசம் செய்தார்கள். தச்சுவேலை தெரிந்த ஒரு பெடியன் ஒருவன், இவனும் தோழன் தான்… கம்பிச் சட்டத்தின் மேல் கையோடு கொண்டு வந்த பலகைகளை வைத்து கச்சிதமாகப் பொருத்தி விட்டான். அவன் சொல்லிக் கொடுத்தபடி மற்ற‌ பெடியளும் உதவியாக இருந்ததால் வேலை இரண்டு மணித்தியாலத்திலேயே முடிந்தது.”

இயக்கம் அமைத்த இந்த மிதவை (Ferry) பற்றிய தகவல் இந்நாவல் பதிவு செய்யும் முக்கியமான தகவல்களிலொன்று. உண்மையில் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. இது போல் ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைப்பற்றிய நாவல்களைப்படைப்பவர்கள் இது போன்ற தகவல்களை உள்ளடக்கிய அக்கால மானுட வாழ்க்கையினை விபரிப்பது முக்கியமானது. இனி அத்தியாயம் நான்கினை வாசியுங்கள். – பதிவுகள் –


அத்தியாயம் நான்கு: சரித்திரம் படைத்த மிதவை!

ஊரிலுள்ளவர்களைப் போல அப்ப, அண்ணனுக்கும் வெளிநாடு போகிற ஆசை பிடித்திருந்தது. அதற்காக காசுக்காக இழுபறிப்பட்டது ஒரு பெரும் சோகக் கதை. கை கூடாது என்று நிச்சயமாகத் தெரிந்தபோது அண்ணன் குடியில் விழுந்தான். பாபும் லதாவும் பிறந்த போதும் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அறவே இல்லை.

அண்ணியின் சகோதரங்கள் வந்து பாராதது வேறு அவரை வெகுவாகப் பாதித்தது. சண்டையும் பூசலும் இருவருக்குமிடையில் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தன. அண்ணன் அவருக்கு அடிக்கவே தொடங்கியிருந்தான். யாருடனும் அதிகமாக பழகியிராத அண்ணிக்கு கமலம் ஒருத்தியே சினேகிதியாக இருந்தாள். அவளை பின்னேரங்களில் பிள்ளைகளோடு அங்கே வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். அப்படியிருக்கிற ஒருநாள் லதா கத்தியால் விரலைச் சீவிக் கொண்டாள். சதையில் ஆழமாக வெட்டு விழுந்திருந்தது. சிறிது தொங்கியது. அண்ணியோட கமலமே தொலைவிலிருந்து கொட்டக் காடு ஆஸ்பத்திரிக்கு …ஒடினாள். தொடர்ந்த நாட்களில் அண்ணனோடு அவளுக்குப் பிரச்சனை முற்றிவிட்டது.அதனால் அடி கூட வாங்கினாள். அயலவர்களுக்குத் தெரிந்த போதும் யாரும் தலையிட முடியவில்லை. கடைசியில் அம்மா அண்ணனைக் கூப்பிட்டுக் கண்டித்தாள்.

“பாவம் புள்ள, அவளுக்கு நாங்க தாண்டா துணையாயிருக்க வேணும் !”

அடுத்த இரு நாட்களுக்கு பிறகு பாபு நெருப்பிலே கை வைத்து விட்டான். அதுவும் பெரிதாக கொந்தளித்து அடங்கியது. உடன்பிறப்புகளின், புருசனின் புறக்கணிப்பால் அவர் வெகுவாகப் பாதிக்கப் பட்டார். மாரிகாலம் வேறு சூழலைச்சேறாக்கியது.

ஊர்மனையில் ஏற்பட்ட வெள்ளம் வாய்க்கால் வழிய ஒடி குளங்குட்டைகளை  எல்லாம் நிரம்பி வழியச் செய்தது. ஒரு மாலைப் பொழுதில் கமலத்தோடு கதைத்துக் கொண்டிருந்த அண்ணி“கொல்லைக்குப் போயிட்டு வரேண்டி பிள்ளைகளை  ஒருக்காய்ப் பார்த்துக்கொள்” என்று காய் வெட்டிக் கொண்டு பின்புறமாக கிழக்கு வயல் குளத்தை நாடிச் சென்று விட்டார். நீச்சல் தெரியாது என்ற துணிச்சல் அவர் நடையை வேகப்படுத்தி இருக்க வேண்டும். நீர் நிறைஞ்சு வழிஞ்சு பார்க்க‌ பயங்கரமாக இருந்தது. அக் குளத்தில் இறங்கினார்.

Continue Reading →

கவிதை: அஸ்தமனத்தின் அஸ்திவாரங்கள்.

- தம்பா (நோர்வே) -முகில்களை முகர்ந்து பார்க்க
மாடிகளாக வளர்த்த பின்
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.
அஸ்திவாரத்தில் கிடப்பதெல்லாம் 
வெறும் கல்லும் மண்ணும் என்று
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.

அஸ்திவாரங்களை அலட்சியபடுத்தி 
ஆகாயத்தில் ஆடித்தவிக்கும்
அரக்குமாளிகைகளை அழகுபடுத்து.

தோளினிலும் முதுகினிலும்
சவாரி செய்து
சவாரியின் தோலை உரித்து
சப்பாத்துகள் செய்துகொள்.
விரியும் பயணத்தின்
பாதங்களை எப்போதும்
பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
உதவியவனை உதைந்து விழுத்த
ஆத்மார்த்தமான  ஆயுதம் அதுமட்டுமே.

Continue Reading →