எஸ்.ராமகிருஷ்ணனின் ‘நாவலெனும் சிம்பொனி’ நூலில் எழுத்தாளர் நகுலன் பற்றியதொரு கட்டுரையுள்ளது. சிறு கட்டுரை அது. அதில் நகுலனின் படைப்புகளில் அடிக்கடி காணப்படும் சுசீலா என்னும் பெண் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. நகுலனின் சுசீலா பற்றி எஸ்.ரா பின்வருமாறு கூறுவார்:
“‘சுசீலாவின் உயர் தன்மைகள் சுசீலாவிடம் இல்லை’ எனப்பேசும் இவர், கவிதையெங்கும் காணப்படும் சுசீலா எனும் பெண் பெயரைக்கொண்டு அதைப்பெண்ணாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ப்படுகிறது. இப்பெண்பெயர் உருவாக்கும் வார்த்தைச் சித்திரம் ஏற்கனவே உருவாகும் மனநிலையின் தீவிரத்திற்கு எதிர்நிலையாகவோ , சமன் செய்யும் ஒன்றாகவோ, பரிகசிக்கும் நிலையாகவோ கொள்ளலாம். ஒருவகையில் மரபுக்கவிதையில் வரும் வெண்சங்கே, பாம்பே, கிளியே, குதம்பாய்போல் இதுவும் சுய எள்ளல் குறியீடாகக் கொள்ளலாம். சில இடங்களில் சுசிலா மூலம் ஏற்படுத்தும் நெருக்கம் பாரதியின் கண்ணம்மா என்ற வார்த்தை உருவின் செயல்பாடு போலத் தெரிகிறது.”
எழுத்தாளர்கள் பலர் அவ்வப்போது சுசீலா போன்ற விடயமொன்றினைப்பற்றிக் குறிப்பிடும்போது அவ்விடயம் பற்றிய போதிய ஆய்வெதுமின்றி முடிவொன்றுக்கு வந்து விடுகின்றார்கள். அதற்கு எஸ்.ராமகிருஷ்ணனும் விதிவிலக்கானவரல்லர் என்பதையே நகுலனின் சுசீலா பற்றிய அவரது கூற்றும், அது பற்றிய மேலதிக விளக்கங்களும் புலப்படுத்துகின்றன.
எஸ்.ரா. நகுலனின் சுசீலா பற்றி இவ்விதமான முடிவொன்றுக்கு வர முன்னர் நகுலனின் படைப்புகள் அனைத்திலும் நகுலன் எவ்விதம் சுசீலாவை விபரித்திருக்கின்றார் என்று பார்த்திருக்க வேண்டும். பார்த்தாரா என்பது தெரியவில்லை. அவ்விதம் அவர் செய்திருந்தால் நிச்சயமாக ‘சுசீலாவும் ஒரு எள்ளல்’ என்னும் முடிவுக்கு வந்திருக்க மாட்டார். எனக்கென்னவோ நகுலனின் வாழ்வில் எதிர்பட்ட , அவர் காதலித்த ஆனால் அவருக்குக் கிடைக்காமற் போன பெண்ணொருத்திதான் அவர் படைப்புகளில் வரும் சுசீலா என்னும் பாத்திரமாக இருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. தனக்குக் கிடைக்காமற் போன பெண்ணைச் சுசீலா என்னும் பாத்திரமாக உருவகித்து அவளைத்தன் எழுத்துகளில் நடமாடவிட்டு , அவளுடன் எழுத்துலகில் வாழ்ந்து வந்திருக்கின்றார் நகுலன் என்றே தோன்றுகின்றது. இறுதிவரைத் தனிமையில் வாழ்ந்த நகுலன் நிஜ வாழ்க்கையில் தனக்குக்கிடைக்காமற் பெண்ணைச் சுசீலாவாக்கி மானசீகமாக வாழ்ந்த்திருக்கின்றார் என்றே தோன்றுகின்றது.
உதாரணத்துக்கு நகுலனின் சுசீலா பற்றிய கவிதைகள் சிலவற்றைப்பார்ப்போம்.. – நடை சிற்றிதழில் வெளியான கவிதைகள் இவை:
1. உன் நினைவு
காவியத்தின் சுவை போல
சுவை போல
நீள் நகரின் எழில் போல
எழில் போல
உன் நினைவு தான்
நினைவு தான்.
2. சுசீலா
சுசீலா
சுசீலாவின் பெயரில்லை;
சுசீலாவின் சிறப்பு (ச்)
சுசீலாவிடமில்லை
என்றாலும் என்ன
அவளிடம் இல்லாத
ஒவ்வொன்றும்
எனக்குக் கிட்டாத
ஓராயிரம்
கிட்டும் கிட்டும்
என்று
பல்லாண்டு பாடும்.