– எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவையொட்டி எழுதிய முகநூற் பதிவிது. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்.காம் –
நெருக்கடிமிக்க சென்னை அண்ணா சாலையின் தென்புறம் நாங்கள் நான்கைந்து நண்பர்கள் நிற்க, மார்பில் அணைக்கப்பட்ட நான்கு பீர் பாட்டில்களோடு சாலையைக் கடந்த பிரபஞ்சனிடம் அந்த இரவு பத்துமணிக்கு சிலர் நின்று ஆட்டோகிராப் கேட்டார்கள். பீர் பாட்டில்களை அவர்கள் கையிலேயே தற்காலிகமாகத் தந்துவிட்டு சாலை ஓரமாக நின்று கையெழுத்திட்டுத் தந்த பிரபஞ்சனைப் பார்த்து, “இதெல்லாம் வேணாம் சார், உங்களுக்கென்று தமிழ்நாட்டில் ஒருபெரிய இமேஜ் இருக்கு ” என்று சொன்ன என்னை தடுத்து, “அப்படி ஒரு பொய்யான இமேஜை நான் வெறுக்கிறேன் பவா. நான் எதுவாக இருக்கிறேனோ அப்படியான பிம்பம் மட்டுமே வெளியிலேயும் பதிவாக வேண்டும். நான் எப்போதாவதுதான் குடிப்பவன். அது வெளியே தெரிய வேண்டாமெனில் இதை இனி தொடக்கூடாது இல்லையா” என்ற அப்படைப்பாளியின் கையிலிருந்த பாட்டில்களை கொஞ்சநேரம் என் கைகளுக்கு மாற்றி நடந்தது நினைவிருக்கிறது. எவர் கைகளிலேயும் நிரந்தரமாக அடக்கிவிட முடியாத நீர் தான் பிரபஞ்சன் எனத் தோன்றும். என் கல்லூரிப் படிப்பை முடித்து, இலக்கியம் நோக்கி வெறிகொண்டலைந்த காலத்தில் கி.ரா. பற்றிய ஒரு இலக்கியக்கூட்டத்தில்தான் பிரபஞ்சனை முதன்முதலில் பார்த்தேன். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை போட்டு கையில் புகைந்த ஒரு சிகரெட்டோடு அரங்கவாசலில் நின்றிருந்த அவரை ஏனோ அப்படிப் பிடித்துவிட்டது. எனக்கு அது இத்தனை ஆண்டுகளாகியும் அகல மறுக்கும் அன்பின் அடர்த்தி. பத்தாயிரம் ரூபாயை கவரில் வைத்து கொடுப்பார்கள் என்ற நிச்சயத்திற்காக, ஒன்றுமேயில்லாத ஒருவனை உலகக்கவி என்றும், தன் படைப்பு அவன் அதிகாரக் காலடியில் அச்சேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், அவன் எழுத்து நோபலுக்கும் மேலே என எழுதுகிற பலபேருக்கு மத்தியில் பிரபஞ்சன் என்ற அசல் இன்றளவும் தமிழ்வாசிக்கும் பலராலும் நேசிக்கப்படுவதற்கு அவரிடம் இயல்பிலேயே இன்றளவும் இருந்து வருகிற இந்த எளிமையும் உண்மையும்தான் காரணம்.
தகுதிபெறாத படைப்புகள் எதுவாயினும், அதை எழுதியவன் இந்தியாவின் பிரதமரேயாயினும் தன் கால் சுண்டுவிரலால் அவர் எத்தித் தள்ளிய சம்பவங்கள் இலக்கிய உலகம் அறிந்தவைதான். எதிலும் எங்கும் நிலைத்திருக்கத் தெரியாத படைப்பாளிகளுக்கேயுள்ள அலைவுறும் மனம் கொண்டவர் பிரபஞ்சன். முறையாகத் தமிழ் படித்து, முதன்முதலில் மாலைமுரசு பத்திரிகையில் ஒரு நிருபராகத் தன் வாழ்வைத் துவக்குகிறார். துவக்கத்திலேயே உண்மையின் குரூர முகம் அச்சேற்ற மறுத்து அவரை வெளியேற்றுகிறது; அல்லது அவரே வெளியேறுகிறார். மானுட ஜீவிதத்தின் இந்த எழுபத்து மூன்று வயது வரை அவருக்கு ஏற்பட்ட முரண்பாடுகளையும், சமூக வாழ்வில் ஒரு படைப்பாளியால் சகித்துக்கொள்ள முடியாத அருவருப்பு மிக்க சமரசங்களையும் உதறித் தள்ளுபவராகவும், எதிர்கால லௌகீக வசதிகளைப் பற்றி எந்தக்கவலையுமின்றி ஆரம்பத்தில் தன் உடல் மீதேறிய அதே உற்சாகத்துடன் கடற்காற்றின் குளுமையுடனும், சுதந்திரத்துடனும் நம்மோடு அலைந்து திரியும் எளிய படைப்பாளியாகவும்தான் பிரபஞ்சனை ஒவ்வொருவருமே உணரமுடியும்.