எண்பது அகவையில் பேராசிரியர் சண்முகதாஸ்! நினைவழியா நாட்களில் நீடித்து வாழும் கலை, இலக்கிய சகா!

பேராசிரியர் அ.சண்முகதாஸ்பேராசிரியர் சண்முகதாஸ், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் 1950 களில் எனக்கு மூன்று வகுப்புகள் மூத்தவராகக் கல்வி பயின்றவர். நான் எனது 11ஆவது வயதில் அப்பாடசாலையுள் தயங்கித் தயங்கிக் கண் விழிக்காத பூனைக்குட்டியாகக் காலடி வைத்தபோது எனக்கு வயது 11. சண்முகதாஸுக்குவயது 14. தன் இனிய குரலால் அனைவரையும் வசீகரித்து அனைவரும் அறிந்த சிறுவனாக இருந்தார் சண்முகதாஸ். அண்ணன் என்றுதான் நாம் அவரை அன்று அழைத்தோம். என்னைப்போல அவரும் கட்டையானவர். வண்டுகள் போல நாம் அங்கு ஓடித்திரிவோம். 6 வருடங்கள் அந்த விடுதியில் நாங்கள்ஒன்றாக வளர்ந்தோம். 1954 ஆம் ஆண்டு மஹா பாரதம் தழுவிய நச்சுப் பொய்கை எனும் பாடசாலை நாடகம் ஒன்றில் 15 வயது சண்முகதாஸ் கதாயுதம்தாங்கி ஹா ஹா என்று சப்தமிட்டபடி வீமனாக மேடைப் பிரவேசம் செய்தமையும், கையினால் தண்ணீர் பருகாது பொய்கையிலிருந்த தண்ணீரைகதையினால் அடித்து அடித்து வாயினால் ஆவ் ஆவ் எனப் பருகிய காட்சியும் இப்போது ஞாபகம் வருகிறது.

திருகோணமலைக் கிராமம் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பெற்று அக்கல்லூரிக்கு அவர் வந்திருந்தார். அவர் வந்து மூன்றுவருடங்களின் பின் மட்டக்களப்புக் கிராமம் ஒன்றிலிருந்து நான் ஐந்தாம் வகுப்புப் புலமைபரிசில் பெற்று, புலமைப்பரிசில் பெற்றோர் பயில கன்னங்கரா திட்டத்தில் உருவான அந்த மத்திய கல்லூரியில் கல்வி பயிலச் சென்றேன். விடுதி வாழ்க்கை. சண்முகதாஸ் அவரது வகுப்பில் என்றும் முதன்மாணவர். அவருடன் போட்டிக்கு நின்றார் அருணாசலம் என்ற மாணவர். படிப்பில் இருவரும் தீரர். அருணாசலம், சண்முகதாஸின் உயிர் நண்பன். திரியாயைச் சேர்ந்த இருவரும் கெட்டிக்காரர்கள். இணைபிரியா இரட்டையர்கள். அவர்களை எமக்குமுன்னுதாரணங்களாக ஆசிரியர்கள் காட்டுவர். இருவரும் ஒரு நாள் சாரண இயக்க காரியமாகச் சென்றபோது, ஒருகுளத்தில் இருவரும்சிக்குப்பட்டுக்கொண்டனர். அருணாசலம் காலமானர். சண்முகதாஸ் அதிஷ்டவசமாகத் தப்பித்துக்கொண்டார். அருணாசலத்தின் உடல் பாடசாலைமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது சண்முகதாஸ் நண்பனுக்காக இரங்கி குலுங்கிக் குலுங்கி அழுத குரல் இன்னும் காதில் கேட்கிறது. கல்விப்பொது சாதாரண தர வகுப்பு சித்தியடைந்ததும், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பு அன்று இன்மையினால் மட்டக்களப்புசிவானந்தா கல்லூரியில் இணைந்து அங்குள்ள விடுதியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் கல்வி கற்றார் சண்முகதாஸ். அது அவருக்கு இன்னுமோர் அனுபவமாயிற்று.

இராமகிருஷ்ண மிசன் வளர்ப்பு அவரை மேலும் பதப்படுத்தியது. வளப்படுத்தியது. அங்கிருந்து பல்கலைக்கழகம் தெரிவாகிப்பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு அவர்தன் கூரிய அறிவாலும் நல்ல குணங்களாலும், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, செல்வநாயகம் ஆகியோரின் மிக விருப்புக்குரிய மாணவரும் ஆனார். 1961 இல் அவர் பேராதனைப் பல்கலைத் தமிழ்ச்சங்கத் தலைவராயிருந்தார். அப்போது அவர் மாணவர்.

அவர் தலைமையில் பட்டப்பகலில் பாவலர்க்குத்தோன்றுவது எனும் கவி அரங்கு நடைபெற்றது. அக்கவி அரங்கப்போட்டியில் முதற்பரிசு பெற்ற என் கவிதையை நான் அரங்கேற்றினேன். மூன்றாவது பரிசு பெற்ற அவரது கவிதையை மனோன்மணி முருகேசு அரங்கேற்றினார். இவரே பின்னர் மனோன்மணி சண்முகதாஸ்  ஆனார். அது ஓர் காதல் காவியக் கதை. பேராசிரியர் வித்தியானந்தன் 1960 களில் கூத்து மீளுருவாக்க இயக்கம் ஆரம்பித்தபோது, அதன் உள் விசைகளில் சண்முகதாஸும் ஒருவரானார்.  1960 களில் பேரா.வித்தியானந்தன் தயாரிப்பில் கர்ணன் போரில் அவர் கிருஸ்ணனாக வர, நான் கர்ணனாக வந்து இருவரும் பலமேடைகளில் ஆடிப் பாடியமை ஞாபகம் வருகிறது.

Continue Reading →