சிறுகதை: பால்ய விவாஹம்

சீர்காழி தாஜ் எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மறைவினையொட்டி , பதிவுகள் இணைய இதழில் வெளியாகிய அவரது  சிறுகதையான ‘பால்ய விவாஹம்’ மீள்பிரசுரமாகின்றது –

– எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துகள் பலவற்றை உங்களில் பலர் இணையத்தில் வலைப்பூக்களில், இணைய இதழ்களில் (பதிவுகள் உட்பட), முகநூலில் படித்திருக்கலாம். எனக்கு அவரது எழுத்தில்  பிடித்த விடயங்களிலொன்று அவரது நடை. ஒருவித நகைச்சுவை ததும்பும் எள்ளல் நடை. அடுத்தது அவரது சிந்தனைப்போக்கு. ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு திக்குகளில் படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிந்திப்பது. இன்னுமொரு முக்கியமான விடயத்திலும் அவரை எனக்குப் பிடிக்கும். பாசாங்குத்தனமற்ற, வெளிப்படையான , தற்பெருமையற்ற ஆளுமை. அவரது எழுத்தில் காணப்படும் இன்னுமொரு விடயம்: கூர்ந்து அவதானித்தல். தன்னைச் சுற்றிவரும் உலகில் நடைபெறும் செயல்களை, உறவுகளை.  நிலவும்   வாழ்வியற் போக்குகளை  இவற்றையெல்லாம் மிகவும் கூர்ந்து அவதானிப்பது அவரது இன்னுமொரு திறமையான பண்பு. ‘பால்ய விவாஹம்’ என்ற அவரது இந்தச் சிறுகதையின் தலைப்பினைப் பார்ததும் ‘பால்ய விவாகம்’ பற்றிய விமர்சனமாக இருக்குமோ என்று எண்ணி வாசித்தால் இந்தச் சிறுகதையில் விரிந்த உலகு என்னைப் பிரமிக்க வைத்தது. 

ஒரு சிறுவனுக்கு காய்க்காத வீட்டு வளவு மா மரத்துடன் நடைபெறும் பால்ய விவாஹம் பற்றியதே கதையின் மையக்கருத்து. அந்தச் சிறுவனே கதை சொல்லியும்; அவனது பெயரும் தாஜ் என்றிருப்பது கதையின் நடையில் ஒருவித சுயசரிதத் தன்மையினைப் படர விடுகிறது. ஆனால் அவர், தாஜ், தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் பின்னிய சிறுகதையாகத்தான் இதனைக் கொள்ளவேண்டும். அவ்விதம் மரத்துடனான திருமணம் அந்த மரத்தைக் காய்க்க வைக்குமென்ற கருத்தொன்றும் அந்தச் சிறுவன் வாழும் சீர்காழி இஸ்லாமிய சமூகத்தில் நிலவுகின்ற விடயத்தை இச்சிறுகதை வெளிப்படுத்துகின்றது. இதனைக் குழந்தைப் பேறில்லாது வாடும் பெண்களுக்கும் குறியீடாகக் கருத முடியும். இந்த கருத்தினூடு விரியும் கதையில் வரும் பாட்டி பாத்திரம் மிகவும் இயல்பான அனைவர் வாழ்வில் வந்துபோகும் பாத்திரம். உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றது. இது தவிர இந்தச் சிறுகதையில் சீர்காழியில் வாழும் இஸ்லாமிய மக்களிடையே நிலவும் பேச்சுத்தமிழை வாசிப்பில் நாம் அறிந்துகொள்கின்றோம். அத்துடன் அச்சமுதாயத்தின் வாழ்வில கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றியெல்லாம் இச்சிறுகதையினூடு அறிந்துகொள்கின்றோம். இது தவிர சுற்றியுள்ள இயற்கை பற்றிய அழகான வர்ணனையும் கதையில் விரவிக் கிடக்கின்றது. தாஜ் அவர்களின் இச்சிறுகதையான ‘பால்ய விவாஹம்’ சிறுகதை இதுவரை நான் வாசித்த அவரது சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை. உங்களையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும். வாசித்துப் பாருங்கள். –  வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள் –


சிறுகதை: பால்ய விவாஹம் – சீர்காழி தாஜ்

இன்று வியாழக்கிழமை. நாளை வெள்ளி! ‘பள்ளி’ கிடையாது. கண்விழித்தவுடன் தோன்றிய முதல்நினைவே சந்தோஷம் தந்தது. நாளைக்கு காலை ஏழு, ஏழரை வரை துங்கலாம். எட்டும் தூங்கலாம். என்னை எழுப்ப என் அம்மா நிலையாய் நிற்கும்தான். ‘இத்தனை நேரம் தூங்குறானேன்னு…!’ பாட்டி விடாது. “பிள்ளை நல்லா தூங்கட்டும்டீ….” என சொல்வார்களே தவிர, எழுப்ப சம்மதிக்க மாட்டார்கள். ஆனால், பள்ளி இருக்கும் நாள்தோறும், என் பாட்டிதான் என்னை எழுப்பி விடும். அஞ்சேகால் விட்டா… அஞ்சரை! கொல்லை நடைக்கு போய் கிணற்றடியில் ‘கைகால்’ அலம்பிவிட்டு, பல்விளக்கச் சொல்லும். தூக்கம் கலையாது எழுந்து போய், கொல்லைக் கதவை திறப்பேன். திறந்த நாழிக்கு, கோழிகளின் அதன் குஞ்சுகளின் கெக்கரிப்பு, தூக்கக் கலக்கத்தை விரட்டும். இந்தக் கெக்கரிப்புதான் தினம்தினம் நான் கேட்கும் முதல் இசை! கொல்லைத் தாழ்வாரத்தின் கிழக்குப்பக்க மூலையில், கள்ளிப்பலகையிலான, கம்பி வலையிட்ட கோழிப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளையும் குஞ்சுகளையும் பார்க்க ஆவலெழும்! இன்னும் தீரவிடியாத, அந்த   இருட்டில், அதுகள் எதுவும் சரியா தெரியாது. சப்தம் மட்டும்தான் ஆறுதல். தாழ்வாரத்திலிருந்து படியிறங்கி, இடதுபுறம் திரும்பி, பத்து தப்படி வைத்தால், சின்ன கிணறு. அதைச்சுற்றி சிமெண்ட்தளம்! கிணற்றை குனிஞ்சுப் பார்க்க மாட்டேன். பயம். பார்த்தாலும், தண்ணீர் தெரியாது. இருட்டுத்தான் கிடக்கும்! கொஞ்சத்துக்கு விடியல் கண்டுவிட்டதென்றாலும், எங்க வீட்டுக்கொல்லை இன்னும் இருட்டுதான்!

Continue Reading →

குறுநாவல்: தங்ஙள் அமீர்

அஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ் மறைவு! இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தோம்!  இன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்க– எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மறைவினையொட்டி , பதிவுகள் இணைய இதழில் வெளியாகிய அவரது  ‘தங்ஙள் அமீர்’  குறுநாவலை மீள்பிரசுரம் செய்கிறோம் –

– புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் ‘தங்ஙள் அமீர்’ இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. ‘தங்ஙள் அமீர்’ என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர்  இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக ‘தங்ஙள் அமீரை’ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை  விபரிக்கும் ‘தங்ஙள் அமீர்’ வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் ‘மிதவை’ (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ”தங்ஙள் அமீர்’. இக்குறுநாவலினைப் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர். -வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்-


குறுநாவல்: தங்ஙள் அமீர் (பதிவுகள் – 23 April 2014)

“நேற்று ‘அல் – முராஃபி’க்கு போனீங்களா?, போக்கரை சந்திச்சீங்களா?” – எங்க மேனேஜர் ‘ஜெம்’, எதிர்பக்கத்து கேபினிலிருந்து எழுப்பிய அந்தக் கேள்வி எனக்கானது. காலையில் அலுவலகம் போனவுடன், மேனேஜர் ரூமுக்கும், அக்கவுண்டண்ட் ரூமுக்கும் எதிரே, பக்கவாட்டுத் தடுப்பினுள் காணும் டீ டேபிளில், காஃபி உண்டாக்கி; நானும், ஸ்டோர்கீப்பர் ஜமாலும் குடிக்கத்தொடங்கிய போதுதான், ஜெம் அலுவலகம் வந்தார். இருக்கையில் அவர் அமர்ந்த நாழிக்கு அப்படி கேட்டதென்பது எனக்கு குழப்பத்தைத் தந்தது.

‘அல் முராஃபி’ ஒரு சூப்பர் மார்க்கெட். ரியாத் புறநகர்ப் பகுதியான ‘அல் நசீம்’-ல் உள்ளது. அதன் பர்ச்சேஸ் மேனேஜர்தான் போக்கர்! அவனைப்பற்றிதான் கேட்கிறார். மலையாளியான அவன் பெயர் பக்கர் குஞ்சு. பக்கர் குஞ்சு, வழக்கில் போக்கராகிப் போனான். எங்க மேனேஜருக்கு அவன் கூட்டுக்காரனும்கூட. வியாபாரரீதியில் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் தரக்கூடியவன். அதற்கு ஈடாக மாதம்தட்டாமல் நாங்கள் தரக்கூடிய அன்பளிப்பு கவர் கனமானது! சிரிப்பற்ற அவனது முகத்தில் சிரிப்பை வரவழைப்பது! அவனது எத்தனையோ சௌதி சம்பாத்திய சந்தோஷங்களில் இதுவும் ஒன்று.

Continue Reading →

அஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ் மறைவு! இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தோம்!

எழுத்தாளர் சீர்காழி தாஜ்இன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்களின் மறைவுச் செய்திதான் அது. எழுத்தாளர் அனார் தனது முகநூற் பதிவில் தாஜ் அவர்களின் மறைவுச்செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். செய்தியினை உள்வாங்குவதற்கே சிறிது கஷ்ட்டமாகவிருந்தது. நேற்றும் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய முகநூற் குழுமத்தில் நான் பதிவிட்டிருந்த முகநூற் பதிவொன்றுக்குத் தன் கருத்துகளை ‘அன்பு  கிரி’ என்று ஆரம்பித்துப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களா மறைந்து விட்டார். அவரது அங்கத்தம் தவழும் எழுத்து நடைக்கு நான் எப்பொழுதுமே அடிமை. நண்பர் எழுத்தாளர் தாஜ் அவர்கள் மறைந்த செய்தி ஏற்படுத்திய துயரத்தை  அளவிட வார்த்தைகளேதுமில்லை.

சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது. நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது ‘அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் ‘எங்கள் தாத்தாவுகு ஆனையொன்றிருந்தது’ நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.

‘பதிவுகள்’ இதழில் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் நண்பர் தாஜிம் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியினையே தந்தது. அச்செய்தினைக் கனவில் கூட எதிர்பார்த்திராத நிலையில் அச்செய்தி மிகுந்த அதிர்ச்சியினைத்தந்தது. கூடவே அளவிட முடியாத துயரையும் தந்தது.

நண்பர் தாஜின் சிறுகதைகள், குறுநாவல் ஆகியன உள்ளடங்கிய தொகுதியின அண்மையில்தான் காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் தொகுதிகளிலொன்று அத்தொகுதி.

சீர்காழி தாஜ் கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள் (பதிவுகள் உட்பட) , தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவளவிழாப்போட்டிகளில் இவரது கவிதைகள் முத்திரைக்கவிதைகளாக வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தாஜ் அவர்கள் ‘தமிழ்ப்பூக்கள்’ என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வருகின்றார். http://tamilpukkal.blogspot.ca/

எழுத்தாளர் தாஜ் அவர்களின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் (முகநூல் நண்பர்களுட்பட) அனைவருக்கும் எனது மற்றும் ‘பதிவுக’ளின் ஆழ்ந்த இரங்கல்கள். கூடவே ‘பதிவு’களில் , முகநூலில் வெளியான அவர் பற்றிய குறிப்புகளையும் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.

Continue Reading →