பெண் சாதனையாளர் முனைவர் நா.நளினிதேவி

பெண் சாதனையாளர் முனைவர் நா.நளினிதேவி  - முனைவர் இர.ஜோதிமீனா -சாதனைப் பெண்கள் வரிசையில், முன்னிலையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர் முனைவர் நா.நளினிதேவி ஆவார். இவர் மிகச் சிறந்த ஆய்வறிஞர். படைப்பிலக்கிய வித்தகர். பெண்ணியத்தையும் பெரியாரியத்தையும் தன்னிரு விழிகளாகப் போற்றி வருகிற பேரறிஞர். எழுபதைக் கடந்த நிலையிலும் இருபதிற்கே உரிய இளமை வேகத்தோடு இவர் இலக்கிய வெளியில் இடையறாது இயங்கி வருவது பாராட்டுக்குரியது.

‘தமிழே நீ ஓர் பூக்காடு நான் அதிலோர் தும்பி’ எனும் தமிழ்ப்பற்று மிக்க பாரதிதாசனைப் போன்று தமிழுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கி வருகிறார் முனைவர் நா.நளினிதேவி அவர்கள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 1945ஆம் ஆண்டு சூன் திங்கள் 26ஆம் நாள் நாகரத்தினம்-சுப்புலெட்சுமி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். உடன் பிறந்தோர் இருவர். தங்கையும் தம்பியும். இவரது துணைவர் வiலாற்றுப் பேராசிரியர்.வே.மாணிக்கம் அவர்கள். வரலாறு தொடர்பான ஆய்வு நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியிருக்கிறார்

1962 முதல் 1968 வரை மதுரை பாத்திமா கல்லூரியில் புகுமுக வகுப்பு தொடங்கி முதுகலை வரை பயின்றுள்ளார். மதுரை பல்கலைக்கழகத்தின் முதல் முதுகலை பட்டதாரிகளுள் ஒருவரான இவருக்கு வாய்த்த பேராசிரியர்கள் அ.சிதம்பரநாத செட்டியார், அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மொ.துரையரங்கனார், விசயவேணுகோபால் முதலான தமிழ் ஆளுமைகளிடம் தமிழ் கற்றதால் இவருக்குள் இருந்த தமிழ்ப்பற்று ஆழமாக வேரூன்றிச் செழுமைப் பெற்றது.

கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு எழுச்சியில் கலந்து கொண்டு சிறை சென்றார். ஈழத்தமிழர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட இவர் 1980இல் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1969இல் அருள்மிகு மீனாட்சி அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியேற்ற இவர் சேலம், திருப்பூர், நாமக்கல், புதுக்கோட்டை எனப் பல அரசு கல்லூரிகளில் பணியாற்றி 2004இல் பணி நிறைவு பெற்றார்.

தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கெனத் தனி பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதை உணர்த்தும் முறையில் செயல்பட்டதால் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டார்.

Continue Reading →

ஆய்வு: சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகளும்

முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். மக்களை வாழ்விப்பதற்காக ஊருக்கொரு கோவில் கொண்டு அம்சமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை மாரியம்மன். காவிரிச் சமவெளியில் ஓர் பேறுபெற்ற அம்மன் கோயிலாக விளங்குவது சமயபுர மாரியம்மன் கோயில். தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. பக்தர்கள் மாரியம்மனை மாரியாத்தா, கருமாரி, முத்துமாரி, அகிலாண்ட நாயகி, சாம்பிராணி, வாசகி, கவுமாரி, காரண சவுந்தரி, மகமாயி, ஆயிரம் கண்ணுடையாள், கண்ணபுரதேவி, மகாகாளி, மகாமாரியம்மன், திரிசூலி, அம்மா எனப் பலவாறு அழைத்து வணங்கி மகிழ்கின்றனர். 

சமயபுரம் அருள்மிகு மாரியம்மனை இப்பகுதியில் காணப்படும் பிற அம்மன் கோயில்களான அன்பில், நார்த்தமலை, தென்னலூர், கொன்னையூர், புன்னை நல்லூர், வீரசிங்கம்பேட்டை மற்றும் வைத்திகோயில் ஆகிய திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களோடு சகோதரி முறையாகக் தொடர்புபடுத்திக்கூறும் முறையும் மக்களிடம் உண்டு. தஞ்சை வளம்பக்குடி மாரியம்மனும் ஒர் சகோதரியாகக் கூறுவதும் வழக்கில் உள்ளது. இன்னும் சிலர் மாறுபட்ட சகோதரி வரிசையைக் குறிப்பிடுகின்றனர். எவ்வாறு இருப்பினும் தமிழக அம்மன் கோயில்களில் பெரும்பேறும் தலைமைப் பண்பும் கொண்டு அருளாட்சி நடத்தும் பெருமை சமயபுரம் அம்பாளுக்கு மட்டுமே உண்டு எனபதை உணரலாம். இத்தகைய நிலையில் பெருமக்கள் வழக்கின்படி சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகளும் பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.

மாரியம்மன் விளக்கம்
பொதுவாகக் கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுவது வழக்கம். இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்கக் கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்த தெய்வம் மாரி(மழை) அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகக் கருதுகின்றனர். தமிழர் வாழும் அனைத்து ஊர்களிலும் நாடுகளிலும் மாரியம்மனுக்கு ஓர் தனிச்சிறப்பு உண்டு. கோடை காலத்தில் மழையாய் பொழிந்து மக்களின் பஞ்சம் தீர்க்கும் மாரியம்மனை வழிபடுவோருக்கு நோய்கள் எதுவும் அண்டாது. வேம்பினை விரிச்சமாய் கொண்டு எங்கும் நிறைந்திருக்கிறாள்.

1.சமயபுரம் முத்துமாரியம்மன்

திருச்சி மாவட்டம் சமயபுரம் ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும் தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை திருவரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால் அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள் அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத்தொடங்கினர். அக்காலகட்டத்தில் விசயநகர மன்னன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்குக் கோயில் கட்டி வழிபடுவதாகச் சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள். விசயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706இல் அம்மனுக்குத் தனியாகக் கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.

Continue Reading →

ஆய்வு: தொண்டைமண்டலத்தில் சமணசமயத் தாக்கமும் சிறுதெய்வ வழிபாடும்

 

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -தொண்டைமண்டலப் பகுதிகளில் பல்வேறு சிறுதெய்வ வழிபாடுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் போன்ற வழிபாடுகள் பண்டைக்காலத்திலும் இடைக்காலத்திலும் காஞ்சிமாநகர் பகுதிகளில் காணப்பட்டுள்ளன. தற்போது இச்சிறுதெய்வ வழிபாடுகள் காஞ்சிமாநகர் பகுதிகளில் காணப்படவில்லை. ஆனால் சமணசமய பெளத்தசமயக் கோயில்களில் ஐயனார், சாஸ்தா வழிபாடுகள் காணப்படுகின்றன (வேங்கடசாமி,2003:125-126).

ஐயனார்

ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் என்னும் பெயர்களையுடைய தெய்வம் ஊர்த்தெய்வமாக இப்போது இந்துக்களால் வணங்கப்படுகிறது. இந்தத் தெய்வம் பெளத்தம், சமணம் எனும் இரு சமயங்களிலிருந்து இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பெளத்தமதத்திலிருந்து சாஸ்தா என்னும் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதைப் பெளத்தமும் தமிழும் என்னும் நூலில் எழுதப் பட்டுள்ளது. சமணர்களுடைய கோவில்களில் இத்தெய்வத்தை இன்றும் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாகச் சமணர் இதனை இன்றும் வணங்குகின்றனர். இத்தெய்வத்திற்குப் பிரம்மயட்சன், சாத்தனார் முதலிய பெயர்களை அவர்கள் கூறுகின்றனர். ஜினகாஞ்சியில் உள்ள திருப்பருத்திக்குன்றத்துச் சமணக்கோயிலில் இத்தெய்வத்தின் உருவம் பூசிக்கப்படுகிறது. ஏனைய சமணத்திருக்கோவில்களிலும் இத்தெய்வத்தின் உருவம் பூசிக்கப்படுகிறது. இது சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட சிறுதெய்வங்களில் ஒன்றாகும். சமணர்களாக இருந்து இந்துக்களாக மாறிய ஆருகதர்களால் இது இந்து மதத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும். பெளத்தமதத்திலிருந்தும் சமணமதத்திலிருந்தும் ஐயனாரை (சாஸ்தாவை) இந்துக்கள் ஏற்றுக்கொண்டனர். பெளத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேற்றுமையாதெனில், பெளத்த ஐயனாருக்கு வாகனம் குதிரை; சமண ஐயனாருக்கு வாகனம் யானை ஆகும். சைவக்கோவில்களில் பிள்ளையார் அல்லது முருகன் எவ்வாறு போற்றப்படுகின்றனரோ அவ்வாறே சமாணக் கோவில்களில் ஐயனார் எனப்படும் பிரம்மயட்சன் பூசை முதலிய சிறப்பும்பெற்று இன்றும் விளங்குகின்றார் (வேங்கடசாமி, 2003 : 125 – 126).

தொண்டைமண்டலத்திற்கு உட்பட்ட மறைந்துபோன சமணக்கோவில்கள், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றையும் மறையாமல் உள்ள சமணக்கோவில்கள், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றையும் பின்வருமாறு காணலாம். கீழ்க்காணும் குறிப்புக்கள் அனைத்தும் சீனி.வேங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டவைகளாகும் (2003 : 131 – 152).

சென்னைமாவட்டம்
மயிலாப்பூர்: சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பண்டைக்காலத்தில் சமணக்கோவில் ஒன்று இருந்தது. இந்தச் சமணக்கோவிலில் நேமிநாத தீர்த்தங்கரர் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோவிலில் எழுந்தருளியிருந்த நேமிநாதரைப் போற்றிப் பாடிய நூல் திருநூற்றந்தாதி என்பதாகும். திருநூற்றந்தாதியைப் பாடினவர் அவிரோதியாழ்வார் என்பவராவர். இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சமணராக மாறி இந்நூலை இயற்றினார் என்பர். திருநூற்றந்தாதியின் முதல் செய்யுள் பின்வருமாறு அமைகிறது:

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 323: (தாய்வீடு கனடா) எஸ்.கே.வி பார்வையில் ‘குடிவரவாளன்’

வாசிப்பும், யோசிப்பும் 323: (தாய்வீடு   கனடா) எஸ்.கே.வி பார்வையில் 'குடிவரவாளன்'சிறுகதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல் பிரிவுகளிலும் தன் பன்முக ஆளுமையைப் பதித்து வரும் எழுத்தாளர் எஸ்.கே,.விக்னேஸ்வரன் ஜனவரி 2019 ‘தாய்வீடு’ பத்திரிகையில்  ‘பூவுலகின் ஓசைகள்’ என்னுமொரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் வாசித்த நூல்களில் பத்து நூல்களைத் தேர்ந்தெடுத்து அவை பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்த பத்து நூல்களின் விபரங்கள் வருமாறு:

1.  Beween Parenst and Child  by Heim G.Ginott
2. Black Boy by  Richard Wright
3. The Glass Palace by Amitav Ghosh
4.  மாதொருபாகன் (நாவல்) – பெருமாள் முருகன்
5. குடிவரவாளன் (நாவல்) – வ.ந.கிரிதரன்
6. நிலவளம் (நாவல்)  – க.நா.சுப்பிரமணியம் (The Growth of the Soil by Knut Hamsun என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு)
7. அன்புவழி (நாவல்)  – க.நா.சுப்பிரமணியம் Barabbas by  Par Lagerkvist என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு)
8. கதை – பார்த்திபன் (சிறுகதைத்தொகுப்பு)
9.  ஏழு கடற்கன்னிகள் – தமயந்தி (சிறுகதைகள்)
10. உம்மத் (நாவல்) – ஸர்மிளா ஸெய்யத்

இவற்றில் அவர் என் நாவலான ‘குடிவரவாளன்’ பற்றி எழுதிய குறிப்புகளை ஒரு தகவலுக்காக இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

குடிவரவாளன்:
“குடிவரவாளன் நாவல் அதன் கதை சொல்லி ஒரு ஈழத்து அகதி. நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவின் நியூயோர்க் மாநகரில் ஒரு சட்டவிரோதக் குடிவரவாளனாக எவ்விதம் தனது இருப்பினைத் தக்க வைப்பதற்காகப் போராடுகின்றான் என்தை விவரிக்கும் ஒரு படைப்பு.  எழுத்தாளர் வ.ந.கிரிதரன் அவர்கள் தனது  புலம்பெயர்வு அனுபவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய இரண்டாவது நாவல் இது.  புலம்பெயர் சூழலில்  நாவல் வடிவில்  இந்த விடயம் சார்ந்து ஈழத்தமிழ் படைப்பாளர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த எழுத்து இவரதே என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது என்று கருதுகிறேன்.

Continue Reading →