சந்திரன் கவிதைகள்!

1. மாற்றம்

- முனைவர் ஆ.சந்திரன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், வேலூர் -ஏனோ அன்று புத்தாடை வாங்கியே தீரவேண்டுமென்று
பிடிவாதமாய் அங்காடித் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்
“அங்கவஸ்திரம் தலைக்கு அழகாய் இருக்கும்” என்ற கடைக்காரன்
“தோளில் மாட்டும் பூனூல் இலவசம்” என்றான்
திருப்தியின்றி வேறுகடையினுள் நுழைந்தேன்
“இது லேட்டஸ்டு மாடல் ஜிப்பா” என்று நீட்டியவன்
“இந்த டாலர் செயின் இலவசம்” என்றான்
விளைவு
சாம்ராணிப் புகை வீசிய கடையில் நான்
“இந்தத் துணி வாங்கினால் உங்களுக்குத் தாடி அழகாய்
முளைக்கும்” என்றான் கடைக்காரன்!
மூன்று நாள் சேவ் செய்யாத தாடியைத் தடவியவாறே
எதிரே வந்த துறவியைக் கடந்து வீட்டை அடைந்தேன் !
குளித்து முடித்து, எந்த ஆடையை உடுத்திக்கொள்வது? என்ற
யோசனையுடன் அலமாறியை அலசியபோது
அம்மாவின் கைப்பக்குவத்தை மீறி எழுந்த
மகனின் சிறுநீர் வாசம் “என்னை இருக்கப் பற்றிக்கொள்” என்று
என்முன் வந்து டேன்ஸ் ஆட
அதை எடுத்து உடுத்திப் பார்த்தேன்!
மடிப்பின் இடையில் ஒளிந்துகொண்டிருந்த
மஞ்சள் என்னைப் பார்த்து சைட் அடித்தது!

Continue Reading →

சிறுகதை: தலைவன் தேடு படலம்!

- முனைவர் ஆ.சந்திரன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், வேலூர் -நிலத்தின் நீர் வேட்கை முற்றிலும் பூர்த்தியானதைப் பசுமையின் கரங்கள் வானத்திற்குத் தெரிவித்துக்கொண்டிருந்தன. நைட் வாச்மேன் வேலைக்குப் போய்த்திரும்பிய சோர்வைப் போக்கிக்கொள்ள போர்வைகள் சூரியக்குளியல் மூழ்கின. மாலைச் சூரியன் நீச்சல் பழக கடலை நோக்கி விரைந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிய தலைவிக்கு அன்றை இரவு யுகத்தின் எல்லையாக நீண்டது. அது அவளுக்கு ஒரு முடிவை எடுக்க போதுமான இடைவெளியைத் தந்திருந்தது. அதனால் சூரிய உதயம் அவளுக்கு இனிய பொழுதாய் இருந்தது.

திருமணத்திற்குப் பிறகு வீட்டைவிட்டுத் தனியாகப் போவது இதுதான் முதல் முறை என்றாலும், அவளுக்கு அதைப் பற்றிய சிந்தனை ஏதும் அப்போது ஏற்படவில்லை. கதிரவனின் சூட்டை இலவசமாக வாங்கிக்கொண்டிருந்த தரையின் மேற்பரப்பு அவளைப் பரிசோதிக்க ஆரம்பித்தது. அவற்றின் சோதனைகளைப் பற்றிச் சிந்திக்கவிடாமல் செய்தன பிரிந்து சென்ற காதலனின் நினைவுகள். 

அவளுடைய நடையின் வேகம் தளர ஆரம்பித்தது. நீண்டதூரம் நடந்த களைப்பும் சூரியனின் வெக்கையும் அவளுடைய பெண்மையை உணர்த்தி பயமுருத்திப் பார்த்தன என்றாலும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. 

தென்னை மர நிழலில் அழையாத விருந்தாளியாய் அவள் அடைக்கலம் புகுந்த போது சூரியன் பூமியை தொண்ணூறு டிகிரி கோணத்தில் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையின் உக்கிரத்திற்கு மரத்தடியில் நிழலுக்கு ஒதுங்கியவர்களின் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையே முதன்மைச் சாட்சியங்களாய் இருந்தன.

அடிவயிற்றைத் தடவிய விரல்களின் பூரிப்பை முகம் வெளிக்காட்ட நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். தென்றலின் ஸ்பரிசம் அவளைத் தீண்டும் தருணங்களில் மட்டும் வெயிலின் சோர்வு ஓய்வு கொண்டது. 

நூடுல்ஸ்க்கு வெள்ளையடித்தது போன்ற தலையைக் கொண்ட பெண்ணின் கண்கள் நிழலுக்கு ஒதுங்கிய தலைவியை ஸ்கேன் செய்துகொண்டிருந்தன. வயதிற்கு மீறித்தெரிந்த அழகினைப் பெருமூச்சுடன் கூடிய அவளுடைய பார்வைத் தோலுத்துக் காட்டியது. அதை முதல் பார்வையிலேயே புரிந்துகொண்ட தலைவி, தன்னுடைய பார்வையை மரத்தின் நிழலில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த எறும்பின் மீது திருப்பினாள். அப்போதும் அவளுடைய கைகள் அடிவயிற்றைத் தடவியவாறே இருந்தன.

இளமைத் தோற்றமுடன் காணப்பட்ட முதியவள் இவ்வாறு சொன்னாள் இளம்பெண்ணைப் பார்த்து. “இந்த வெக்கையில் தனியாய் எங்கே போகிறாய் பெண்ணே! துணைக்கு யாரையாவது அழைத்து வந்திருக்கக் கூடாதா?……..” என்று.

Continue Reading →

கவிதை: வண்ணத்துப் பூச்சியின் எண்ணச்சிதறல்கள்!

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -வண்ணம் தோய்ந்த சின்னம் நான்.
வானவில்லின் சாரம் நான்.
சின்னஞ்சிறிய சிறகை அசைத்துச்
சீட்டாய்ப்பறக்கும் சிறுபறவைநான்.

கூட்டைப் பிளந்து  காற்றில் மிதந்து,
கண்டேன் காட்சி  கண்கொள்ளா….!
ஏட்டில் அதுவர , பாட்டில் மதுதர,
காட்டும் சொல்லுக்குத்  தமிழ் நில்லா….!

நித்தம் மலர்ந்தும், மதுவால் நிறைந்தும்,
சொக்கும் மலர்கள் தோழிகளே….!
சித்தம் குளிர்வேன்,  முத்தம் தருவேன்,
சுற்றம் அணைப்பேன், வாழியவே….!

கொட்டும் அருவியும் , முட்டும் மேகமும்,
சொட்டும் எழிலைச் சொல்வதற்கு….!
கட்டி அணைப்பதும், கனியாய் இனிப்பதும்,
சொக்கும் தமிழில்  வேறெதற்கு….?

குதித்தே ஓடும் ஓடைதன்னில்,
குளித்தே ஆடும் மீன்கூட்டம்….!
பதித்தே தடத்தைப் பரவும் அதனைப்
பார்ப்போர் கொள்வார்  முழு நாட்டம்….!

தென்றல்  தவழச்   சாரல் உதிரத்,
திங்கள் ஒளியில் திரள் காட்சி…..!
வந்திடும் உளத்தினில், வாழ்ந்திடும்  நினைப்பினில்,
வந்தனம் இயற்கை  வளம் சாட்சி…!

உங்கள்  நண்பன்  உற்றேன் உவகை….
உண்மை சொன்னால் பேருவகை….!
கண்ணில் கண்ட காட்சியை உரைத்தேன்,
கண்டீர் இதன்மேல்  ஏது(உ)வகை…?

Continue Reading →

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘விடியல்’ ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்பன்னூலாசிரியராகத் திகழும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் தனது கலையுலகப் பயணத்தின் அடுத்த கட்டமாக ‘விடியல்’ எனும் தலைப்பிடப்பட்ட நூலை வெளியிட்டுள்ளார். அழகானதொரு முன்னட்டைப் படத்தைக் கொண்ட ‘விடியல்’ ஓர் ஆய்வு நூலாகத் திகழ்கின்றது.

கவிஞர் மூதூர் முகைதீனின் பிட்டும் தேங்காய்ப் பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது ஆகிய மூன்று கவிதை நூல்களை அழகாக ஆய்வு செய்யும் இந்த விடியல் ஆய்வு நூல் இலக்கிய அபிமானிகளுக்கு மட்டுமன்றி மாணவர் உலகிற்கும் பயனளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. ஐந்து அத்தியாயங்களை அடுக்கடுக்காகக் கொண்ட ‘விடியல்’, ஆய்வு நூலின் ஒழுங்கு முறைகளுக்கு இசைவாக அமைந்திருப்பதுடன் கட்டுக்கோப்பான ஒரு நூலுருவில் நூலாசிரியரால் யாத்தமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன ஒற்றுமைக்குப் பாலமிடும் கவிதைகளை தனது ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்திருப்பது இக்கால கட்டத்திற்கு உசிதமான ஓர் அம்சமாகும்.

வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன் சிறப்பானதொரு முன்னுரையை இந்நூலிற்காக வழங்கியுள்ளார். அதில் அவர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். ‘இளம் – வளர்ந்து வரும் எழுத்தாளர் அதேநேரம் கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் கதை என்ற இலக்கிய உலகிற்கு அப்பால் கணக்கியல் துறையிலும் படைப்பாற்றல் பெற்ற பெண் எழுத்தாளரின் இப்புதிய நூலுக்கு முன்னுரை எழுதக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது’ என தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியவராக, தொடர்ந்து பல கருத்துக்களைக் கூறிக்கொண்டு செல்லும் அவர் இன்னுமோர் இடத்தில், ‘ஆய்வுக்காக கடமை நிமித்தம் படித்து எழுதியது போலன்றி ஒவ்வொரு கவிதையிலும் மூழ்கி முத்தெடுத்து சிலாகித்து எம்மையும் அக்கவிஞரின் உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்.’ என ரசனையுடன் படித்ததை சுவாரஸ்யமாகக் குறிப்பிடுகின்றார்.

மேலும் வைத்தியக் கலாநிதி முருகானந்தன் தன் முன்னுரையில், ‘இன ஒற்றுமைக்குப் பின்பு தவறான முடிவுகளால் சந்தேகமும் பிரிவும் ஏற்பட்டமை, இதனைத் தாண்டி மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை கவிதைகள் ஊடாக மூதூர் முகைதீன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை வெலிகம ரிம்ஸா முஹம்மத் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.’ எனத் தொடர்ந்து செல்லும் அவர், ‘ஆய்வு நூல் என்பதற்கப்பால் சகல தரப்பு வாசகர்களும் சுவாரஷ்யமாக வாசிக்கக்கூடிய முறையில் இந்த நூலை ஆக்கிய நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்| என்றவாறு தனதுரையை முடிக்கின்கிறார்.

கிண்ணியா எஸ். பாயிஸா அலி தனது வாழ்த்துரையில், ‘சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மத் நம் நாட்டு முஸ்லிம் பெண் படைப்பாளிகள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வரிசையில் முன்னிலையில் தனித்துவப் போக்கோடு மிளிர்பவர். கவிதை, மெல்லிசைப்பாடல், சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் என சமூகத் தளத்தில் தனக்கெனப் பல அடையாளங்களை வெளிப்படுத்தி வருபவர். பூங்காவனம் எனும் கலை இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு பல்வேறு படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பவர்.’ எனக்கூறிச் சென்று இறுதியில் ‘இன ஒற்றுமையையும் சமூக நல்லுறவையும் வலியுறுத்தும் மூதூர் முகைதீனின் கவிதைகள் பல்வேறு இலக்கியத் திறனாய்வாளர்களினாலும் ஆராயப்பட்டிருப்பினும் சகோதரி ரிம்ஸாவின் திறனாய்வுப் பார்வையும் அவரது அழகிய மொழி நடையும் கவிஞர் மூதூர் முகைதீனின் கவிதைகளுக்கு மென்மேலும் அழகையும் பொலிவையும் புதுப்புது ஆற்றல்களையும் காட்டி நிற்பதனைக் காண முடிகின்றது.’ என்று முடிக்கிறார்.

Continue Reading →

பாரிஸ் மாநகரில் பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா! நினைவில் நிறைந்திருக்கும் பண்டிதர் அய்யா!

பாரிஸ் மாநகரில் பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா! நினைவில் நிறைந்திருக்கும் பண்டிதர் அய்யா!இலங்கையின் வடமேற்குக் கரையில் இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் திகழும் நீர்கொழும்பூருக்கு ஐதீகத்திலும் வரலாற்றிலும் அழியாத அடையாளம் இருக்கிறது. இலங்கேஸ்வரன் இராவணனின் புதல்வன் இந்திரஜித்தன் நிகும்பலை என்னும் யாகம் வளர்த்த ஊர் என்பதனால் அதற்கு நிகும்பலை என்றும் ஒரு காரணப்பெயர் இருக்கிறது. அந்த யாகத்திற்காக இந்திரஜித்தன் இவ்வூரில் ஐந்து இடங்களில் உருவாக்கிய குளங்கள் காலப்போக்கில் அடையாளம் தெரியாதவகையில் உருமாறிக் கட்டிடக்காடுகளாகிவிட்டன. எனினும், இன்றும் மழைக்காலத்தில் அந்த இடங்களில் தண்ணீர் தங்கித்  தேங்கிவிடுவதை அவதானிக்கமுடிகிறது. 

இலங்கை வரலாற்றில், இடம்பெற்ற துட்டகைமுனுவின் மனைவிக்கு வந்த உடல் உபாதையைப் போக்குவதற்கு இந்த ஊரில் தேன் கிடைத்தமையால் தேன் ஊர் என்ற அர்த்தத்தில் மீகமுவ என்றும் சிங்கள மொழியில் அழைக்கப்பட்டதுதான் இவ்வூர். அவ்வாறே Negombo என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதற்கும் காரணங்கள் இருக்கின்றன. மன்னர் காலத்தில் தேனும் சுரந்து, ஒல்லாந்தர் காலத்தில் ஏலம், கறுவா, கராம்பு முதலான வாசனைத்திரவியங்கள் விளைந்த பிரதேசமாகவும் திகழ்ந்தமையாலும் இனிமையும் வாசனையும் நிரம்பிய நகரமாகியது. ஒல்லாந்தர்கள் நீர்கொழும்புக்  கடற்கரைக்குச்சமீபமாக ஒரு கற்கோட்டையை அமைத்து முகாமிட்டபோது, அதற்கு வடமேற்கிலிருந்து வருவதற்கு மகா ஓயா நதியிலிருந்து கிளை வெட்டி, புத்தள வெட்டுவாய்க்காலையும் அமைத்தனர். அதற்கு அணித்தாக எழுந்தருளிய ஶ்ரீசித்திவிநாயகர் கோயிலின் முன்புறம் நீண்ட காலமாக விருட்சமாக வளர்ந்திருந்த அரச மரத்தின் நிழலில் அக்காலப்பகுதியில் அங்கு வாழ்ந்த சைவத் தமிழ்ப்பெருங்குடி மக்களினால் உருவாக்கப்பட்டது இந்து வாலிபர் சங்கம். வந்தோரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்ற பெயரையும் இவ்வூர் பெற்றிருந்தது. கத்தோலிக்க மக்கள் செறிந்துவாழ்ந்த இந்த ஊருக்கு சின்னரோமாபுரி என்றும் ஒரு பெயர் வழக்கிலிருந்தது. நூற்றுக்கணக்கான கத்தோலிக்க வழிபாட்டிடங்கள் அமைந்திருந்தமையினால், இந்தக்காரணப்பெயரும் தோன்றியிருக்கிறது.

இவ்வாறு பல காரணப்பெயர்களுடன் விளங்கிய எமது ஊருக்கு காரணம் இல்லாமல் காரியம் இல்லை எனச்சொல்லத்தக்வகையில் 1954 ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி காலத்தில் தோன்றியதுதான் விவேகானந்தா வித்தியாலயம். முகாமைத்துவப் பாடசாலைகள் இலங்கை எங்கும் வியாபித்திருந்த காலத்தில், நீர்கொழும்பில் நீண்டகாலமாக வாழ்ந்த சைவத்தமிழ் மக்களுக்கும் வடக்கிலிருந்து தொழில், வர்த்தகம், திருமண உறவு முறைகளினால் இடம்பெயர்ந்து வருகைதந்த சைவத்தமிழ் மக்களுக்கும் ஒரு குறைபாடு நீடித்தது. அக்குடும்பங்களுக்கு கடற்கரை வீதியில் வழிபாட்டிற்கு மூன்று ஆலயங்கள் இருந்தபோதிலும், அக்குடும்பங்களின் குழந்தைகளுக்கென ஒரு சைவத் தமிழ்ப்பாடசாலை இல்லாத குறை நீடித்திருந்தது. எனினும் சைவ சமயத்தை போதிக்கின்ற – கூட்டுப்பிரார்த்தனை வகுப்புகளை நடத்துகின்ற தேவையை உணர்ந்த இந்து வாலிபர் சங்கம் சமூக அமைப்பாகவும் இயங்கியமையால் அதற்காக சாமி சாஸ்திரியார் என்ற ஆசான் மூலம் சமயபாட வகுப்பினைச் சங்க மண்டபத்தில் நடத்துவதற்கு தொடங்கியது. எனினும் அதற்கு வந்த குழந்தைகள், இதர பாடங்களை ( கணிதம், ஆங்கிலம், புவியியல், குடியியல்) படிப்பதற்கு அருகிலிருந்த புனித செபஸ்தியார் பாடசாலை, புனித மரியாள் பாடசாலை, நியூஸ்ரட் ஆங்கில மகளிர் பாடசாலை, ஆவேமரியா மகளிர் பாடசாலை ஆகியனவற்றுக்குத்தான் சென்றனர். 1954 ஆம் ஆண்டு வரையில் இந்த நிலைமைதான் நீடித்தது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஏதுவாக அச்சமயத்தில் இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்த பெரியார் எஸ்.கே. விஜயரத்தினம் அவர்கள் ஒரு வழக்கறிஞராகவும் உத்தியோகப்பற்றில்லாத நீதிவானாகவும் விளங்கினார். அதேசமயம் நீர்கொழும்பு நகர பிதாவாகவும் (மேயர்) தெரிவாகியிருந்தார். தனது காலத்திலாவது இங்கு வாழும் சைவத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு பாடசாலையை தங்கள் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தொடக்கிவைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சங்கத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்வைத்தார். இவ்வாறு அந்தப்பாடசாலை தொடங்கப்பட்ட அக்காலப்பகுதி, இன்று இந்தப் பதிவை எழுதும் எனக்கு நினைவாக ஆழ் மனதில் பதிந்திருக்கிறது.

Continue Reading →