வட இலங்கை வீடமைப்பு முறை அன்றிலிருந்து இன்றுவரை – ஒரு கண்ணோட்டம்!

குணசிங்கம் சிவசாமி - கட்டடக்கலைஞர்கட்டடக்கலைஞர்கள் ஆர்.மயூரநாதன், காலஞ் சென்ற சிவபாலன் மற்றும் என்.தனபாலசிங்கம் ஆகியவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை அடிப்படையாகவும், இலங்கை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைக் கல்வியின் இரண்டாவது பகுதியைக் (MSc in Architecture) கற்றுக்கொண்டபோது சமர்ப்பிக்கப்பட்ட எனது சொந்த ஆய்வுக்கட்டுரையையும் அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரையின் மூலம் என் கண்ணோட்டத்தை உங்கள் முன் வைக்கின்றேன்.

வீடமைப்புமுறை பொதுவாக ஓரினத்துடைய கலை, கலாச்சார, சமூக பொருளாதார நிலைகளின் வெளிப்பாடு எனலாம். வட இலங்கைத் தமிழர்களுடைய வீடமைப்புமுறையை இதே அடிப்படையில், எனது பார்வையில் இக்கட்டுரையை ஒரு கண்ணோட்டமாகத் தருகின்றேன்.

வட இலங்கைத் தமிழர்களின் கலை, கலாச்சார, சமூக, பொருளாதாரம் எல்லாமே அதிகளவில்  தென் இந்தியர்களின் – குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் – வாழ்க்கை முறையோடு பெருமளவில் தொடர்புபடுத்தப்பட்டதாகவும், அதனூடான தாக்கங்களையும் , பாதிப்புகளையும் கொண்டதாகவே இருந்தன. இதற்கு வட இலங்கை, தென் இலங்கையை விட தென் இந்தியாவுக்கு  அண்மையாக இருந்ததுவும், வியாபார -அடிப்படைத் தொடர்புகளைக் கொண்டிருந்ததுவும்  காரணமாக இருக்கலாம்.

வட இலங்கையின் சனத்தொகை அதிகளவில் தமிழ் பேசுபவர்களையும், இந்து சமய வழிபாட்டைப் பின்பற்றியவர்களையும் கொண்டிருந்தது. தமிழ்நாடு, கேரளா போன்றே அவற்றின் தாக்கத்தினூடாக சமய, சமூக நம்பிக்கைகளும் வட இலங்கைத் தமிழர்களிடையே அன்றிலிருந்து இன்றுவரை பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. குறிப்பாகச் சாதி அமைப்பு முறை, பெண்கள் தனிமைப்படுத்தப்படல், சாத்திரம் போன்றவை தமிழ் இந்துக்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றின்பாதிப்புகள் வீடமைப்பு முறையிலும் அன்றிலிருந்து இன்றுவரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

Continue Reading →