இளையராஜா லண்டன் சென்று சிம்பொனி இசை அமைத்தது பற்றி மட்டும் நமக்குத் தெரியும். ஆனால் சிம்பொனி இசையின் தோற்றம், பின்னணி அதன் மதச்சார்பற்ற தன்மை ஆகியவை நமக்குத் தரப்படவில்லை. இவ்விசையைப்பற்றி சில செய்திகளை முன்பு எமது இதழில் வெளியிட்டிருந்தோம். தற்போது இதைப் பற்றி பேராசிரியர் செ.அ. வீரபாண்டியன் அவர்களின் விரிவான ஆய்வுக் கட்டுரையிலிருந்து சுருக்கித் தருகிறோம்.
மனிதன், சமூகம், இயற்கை ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றியதே இசையாகும். மனிதர் தம்மைவெளிப்படுத்திக் கொள்வது (Expression) தொடர்பான சில தேவைகளின் அடிப்படையில் இசை தோன்றியது என்ற கருத்தை மேற்கத்திய இசை அறிஞர் டேவிட்டி பாய்டன் முன்வைக்கிறார். எனவே மனித சமூக வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது இசை வரலாறு என்பது தெளிவாகிறது. இசை வரலாறு என்பது இசை பற்றிய அறிவின் வரலாறு. இசை வடிவங்களின் வரலாறு, இசை உள்ளடக்கங்களின் வரலாறு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். சமூக வரலாற்றில் செல்வாக்குப் பெற்ற இசை வடிவங்களை, அவை தொடர்பான இசை அறிவை, உள்ளடக்கத்தை ஆராய்ச்சி செய்வது சமூக ஆய்வுக்குத் துணை புரிவதாக அமையும்.
இந்தப்பின்னணியில் மேற்கத்திய இசையில் புகழும் செல்வாக்கும் பெற்ற ’சிம்பொனி’ என்ற இசைவடிவம் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. உலக அளவில் இன்றும் போற்றப்படுகிற இந்த இசை வடிவத்தின் சில இசைக்கூறுகள் இன்று தமிழ்நாட்டு இல்லங்களின் கதவு ஒலிகளில் (Door bells) சொகுசுக் கார் ஒலிகளில்(Car horns) வெளிப்படும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றுள்ளது. இத்தகைய புகழ் பெற்ற சிம்பொனியானது மேற்கத்திய செவ்விசையாக, (Western classical music) அடையாளம் பெற்றுள்ளது.கி.பி 18 ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய சமூக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத் தக்கவையாக பிரெஞ்சுப் புரட்சியும், சிம்பொனி இசையும் இடம்பெற்றுள்ளன. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் குறிப்பிடத்தகும் சமூக மாற்றப்போக்குகளாக ஐரோப்பாவில் தேசிய உணர்வுகளின் எழுச்சிக்கு வித்திட்ட போக்குகளாக, கிறித்துவப் பாதிரிகளின் செல்வாக்கிற்கும் ’லத்தீன்’ என்ற மொழியின் ஆதிக்கத்திற்கும் எதிரான போக்குகள் அடையாளம் காணப்படுகின்றன. அரசர்களுக்கும் மேலான அதிகாரத்தை செல்வாக்கை கிறித்துவப் பாதிரிகள் பெற்றிருந்தனர்.
கிறித்துவச் சமயச் செல்வாக்குப் பெற்ற லத்தீன் மொழியின் ஆதிக்கத்திற்கும். அன்று செல்வாக்குடன் இருந்த தேவாலய இசை (Church music) ஆதிக்கத்திற்கும் எதிரான போக்குகள், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய இசைகளில் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் வெளிப்பட்டன. பிரான்ஸ் நாட்டில் குயிலாம் துமாசாத் (Guillame de Machaut) எனும் இசை அறிஞர் தமது தாய் மொழியான பிரெஞ்சு மொழியில் மதச்சார்பற்ற (Secular கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டு பல்லிசைக் கருவியிசையில் (Polyphonic) ‘சான்சன்’ (Chanson) என்ற இசை வடிவத்தில் புதுமையான தாள இசைக் கூறுகளை வளர்த்தெடுத்து மேற்கத்திய இசை வரலாற்றில் இடம் பெற்றார். மதச்சார்பற்ற இசை வடிவமாக சான்சன் அடையாளம் காணப்பட்டது.