ஆனால், 130 கவிஞர்களில் பாதிப்பேர்கூட தங்கள் விவரக்குறிப்பு அனுப்பித்தரவில்லை. இப்பொழுது அதற்காக இன்னும் காத்துக்கொண்டிருந் தால் இந்த நூலை பொங்கல் சமயத்திலாவது புத்தகக் கண்காட்சியில் கொண்டுவரவேண்டும் என்பது இயலாமல் போய்விடும். எனவே, இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கவிஞர்கள் (ஏற்கெனவே தங்கள் புகைப்படங்களையும் விவரக்குறிப்பையும் அனுப்பித்தந்திருப்பவர்களைத் தவிர்த்து) தங்கள் புகைப்படங்களையாவது உடனடியாக அனுப்பித்தரும்படி கேட்டுக்கொள்கிறேன். கூடவே அவர்கள் விலாசங்களையும் அனுப்பி வைத்தால் ஆளுக்கொரு தொகுதியை அடுத்தவாரம் அனுப்பிவைக்க இயலும். இடம்பெறும் கவிஞர்களின் புகைப்படங்களையும் பெயர்களையும் பின் அட்டையில் வெளியிடலாம், அல்லது, அவர்கலுடைய கவிதைகள் இடம்பெறும் பக்கத்தில் வெளியிடலாம். சிலரின் விவரக்குறிப்புகளை மட்டும் வெளியிட்டு சிலருடையதை வெளியிடாமல் இருந்தால் சரியாக இருக்காது. எனவே, வெறும் புகைப்படங்களை மட்டும் இந்தத் தொகுப்பில் வெளியிட எண்ணம். விலாசங்களையும் புகைப்படங்களையும் அனுப்பிவைக்கவேண்டிய மின்னஞ்சல் முகவரி lathaa.r2010@gmail.com. இதைப் பார்ப்பவர்கள் பட்டியலில் இடம்பெர்றிருக்கும் தங்கள் சக கவிஞர்களிடம் விவரம் தெரிவிக்குமாறும் அவர்களுடைய புகைப்படங்களை அனுப்பித்தருமாறும் வேண்டிக்கொள்கிறேன். தொகுப்பில் இடம்பெற விருப்பமில்லாதவர்கள் அதைத் தெரிவித்துவிட்டால் நல்லது.
ஒரே கவிஞரின் இரு கவிதைகள் தவறுதலாகப் பட்டியலில் இடம்பெற்றிருந் தால் அதைச் சுட்டிக்காட்டும்படி வேண்டிக்கொள்கிறேன். உங்கள் ஒத்துழைப்பிருந்தால் பொங்கல் சமயம் புதுப்புனல் பதிப்பக அரங்கில் புத்தகக் கண்காட்சியில் நம்முடைய இந்த முயற்சியால் உருவாகும் தொகுப்பு விற்பனைக்குக் கிடைக்க வழியுண்டு. நான் மொழிபெயர்த்து இந்தத் தொகுப்பில் இடம்பெறாமல் யாரேனும் விடுபட்டுப் போயிருந்தால் அந்தக் குறை அடுத்த தொகுப்பில் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்படும். இந்தத் தொகுப்பின் உருவாக்கத்தில் தன் எளிய உதவி என்று சக கவிஞர் தர்மிணி ரூ.4000 அனுப்பித்தந்திருக்கும் செய்தியை இங்கே நன்றியோடு பகிர்ந்துகொள்கிறேன். ஒரு தொகுப்பு ரூ.400 அளவில் வரும். தோழி தர்மிணிக்கு 5 பிரதிகளாவது அனுப்பிவைக்க எண்ணம் – அவர் இரண்டு போதும் என்று கூறியுள்ளபோதும். தொகுப்பிற்கு ஒரு சுருக்கமான அறிமுக உரையை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். தங்கள் கவிதை மொழிபெயர்க்கப்பட்டதோ இல்லையோ சக கவிஞர்களின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு என் டைம்-லைனில் பதிவேற்றப்பட்டபோதெல்லாம் ஆர்வமாக வாசித்து மனமாரப் பாராட்டும் உங்கள் நட்புக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘மகுடம்’ பதிப்பக வெளியீடாக ‘அமெரிக்கா’
83 இனக்கலவரத்தைத்தொடர்ந்து நாட்டை விட்டுக் கனடா நோக்கிப்புறப்பட்டபோது வழியில் அமெரிக்காவில் தடுத்து நிறுத்தப்பட்டுத் தஞ்சம் கேட்டு , நியூயார்க் பெரும்பாகத்திலுள்ள புரூக்லீன் நகரத்துத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும் பொருட்டு எழுதிய நாவலான ‘அமெரிக்கா’ ‘தாயகம்’ (கனடா) பத்திரிகையில் வெளியானது. ஏற்கனவே தொகுப்பு நூலாகத் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது.
அளவில் சிறிய நாவலானாலும் ‘அமெரிக்கா’ தனி நூலாக வெளிவரவேண்டுமென்று நீண்ட நாள்களாக விரும்பியிருந்தேன். தற்போது அதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. திருத்தப்பட்ட பதிப்பாக இந்நாவல் விரைவில் இலங்கையில் ‘மகுடம்’ பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஏற்கனவே எனது ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு நூல் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவினால் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘அஹஸ மீடியா வேர்க்ஸ்’ பதிப்பக வெளியீடாக வெளிவந்தது தெரிந்ததே. தற்போது ‘அமெரிக்கா’ நாவலும் இலங்கையில் வெளிவரவுள்ளது மகிழ்ச்சியினைத் தருகின்றது.
எஸ்.பொ.வின் ‘நனவிடை தோய்தலும்’ மகாகவி பாரதியும்!
நீண்ட நாட்களாக நனவிடை தோய்தல் எஸ்.பொ. அவர்கள் உருவாக்கிய சொல்லென்று எண்ணியிருந்தேன். ஆனால் பின்னர்தான் தெரிந்தது அது மகாகவி பாரதியார் தன் சுயசரிதையில் பாவித்த சொல்லென்று. தனது சுயசரிதையில் தனது பிள்ளைக்காதல் பற்றிக் கூறுகையில் ‘அன்ன போழ்தினி லுற்ற கனவினை அந்த மிழ்ச்சொலி லெவ்வணஞ் சொல்லுகேன்? சொன்ன தீங்கன வங்கு துயிலிடைத் தோய்ந்த தன்று, நனவிடை தோய்ந்ததால்..’ என்று மகாகவி பாரதியார் அச்சொல்லை ஏற்கனவே பாவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை வைத்து எத்தனை எழுத்தாளர்கள் புனைகதைகளை, அபுனைவுகளை எழுதியிருக்கின்றார்கள். ‘தீக்குள் விரலை வைத்தால்’ (கே.எஸ்.ஆனந்தன்), ‘பேசும் பொற் சித்திரமே’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ (சேவற்கொடியோன்), ‘தீராத விளையாட்டு’ (கு.அழகிரிசாமி), ‘வெந்து தணிந்தது காடு’ (இந்திரா பார்த்தசாரதி), ‘மண்ணில் தெரியுது வானம்’ (ந.சிதம்பர சுப்பிரமணியன்) .. இவ்விதம் பலர் தம் நாவல்களுக்கு பாரதியாரின் கவிதை வரிகளைத் தலைப்புகளாக்கியுள்ளார்கள். அவ்வகையில் எஸ்.பொ. அவர்கள் தன் அபுனைவு நூலுக்கு ‘நனவிடை தோய்தல்’ என்னும் பெயரை வைத்துள்ளார்.