ஜனவரி 10, 1974 – இலங்கைத்தமிழர்கள் மத்தியில் மறக்க முடியாத நாள்களிலொன்று. அன்றுதான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி தினம். யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன் இறுதி நாள் கூட்டத்தின்போது அமர்ந்திருந்த கூட்டத்தைப் பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை ஏவிக் கலைத்த தினம். அவர்கள் மின்சாரக் கம்பிகளைச் சுட்டு, அக்கம்பிகள் பட்டு, தப்பியோடிக்கொண்டிருந்தவர்களில் ஒன்பதுபேர் மரணமான தினம். அன்றைய நிகழ்வில் நானும் மாணவனாகக் கலந்துகொண்டிருந்தேன்.
இன்னும் அக்கலவரச்சூழல் என் கண்கள் முன்னால் காட்சி தருகின்றது. நான் மாநாட்டுக் கொடி கட்டப்பட்டிருந்த என் ரலி சைக்கிளுடன் முற்றவெளியில், யாழ் கோட்டையின் அகழிச்சுவருக்கருகில் நின்று கூட்ட உரைகளைக்கேட்டுக்கொண்டிருந்தேன். மேடையில் திருச்சி நைனார் முகம்மது என்று நினைக்கின்றேன் உரையாடிக்கொண்டிருந்தார். என் அருகில் என் எட்டாம் வகுப்பு யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியரான மகேந்திரன் (முன்னாள் மேயர் ராஜா விசுவநாதனின் தம்பி) சைக்கிளுடன் உரை கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது. கூட்டம் நடந்தபோது வீதியையும் மறைத்துக்கொண்டு மக்கள் அமர்ந்திருந்தார்கள். பொலிசார் வந்து வீதியை மறைத்து அமர்ந்திருந்த மக்களைத் தடியடி கொண்டு கலைத்தார்கள். பதிலுக்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் மக்கள் தம் காலணிகளை அவர்கள் மேல் எறிந்து தாக்கினார்கள். பொலிசார் பின் வாங்கினார்கள். விரைவில் மீண்டு வந்தார்கள். மக்கள் மேல் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கினார்கள். மக்கள் யாரும் கதறி அழுததாகத் தெரியவில்லை. எல்லோரும் ஓடித்தப்பவே முயன்றார்கள். எல்லோரும் ஆத்திரத்துடன் கூடிய பயத்துடனேயே காணப்பட்டார்கள்.
என் வாழ்நாளில் கண்ணீர்ப்புகைக்குண்டுகளைப்பற்றி அறிந்திராத நான் பொலிசார் துப்பாக்கிக் குண்டுகளால் சுடுவதாகவே அச்சமயத்தில் நினைத்தேன். என் அருகிலும் குண்டொன்று வந்து விழுந்து புகையைக் கக்கியது. கண்கள் எரிய சைக்கிளையும் விட்டுவிட்டு ஓட முயன்றேன். கூட்டத்திலொருவர் அருகிலிருந்தவர் ‘ குப்புறப்படுங்கள். குப்புறப்படுங்கள். சுடுகிறான்கள் ‘ என்று கத்தியதும் நினைவிலுள்ளது. சிலர் நிலத்துடன் நிலம் படுத்தார்கள். நானும் அவ்விதம் படுத்தேன். கண்களின் எரிவு சிறிது நீங்கியதும் எழுந்தேன்.