சாதனைப் பெண்கள் வரிசையில், முன்னிலையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர் முனைவர் நா.நளினிதேவி ஆவார். இவர் மிகச் சிறந்த ஆய்வறிஞர். படைப்பிலக்கிய வித்தகர். பெண்ணியத்தையும் பெரியாரியத்தையும் தன்னிரு விழிகளாகப் போற்றி வருகிற பேரறிஞர். எழுபதைக் கடந்த நிலையிலும் இருபதிற்கே உரிய இளமை வேகத்தோடு இவர் இலக்கிய வெளியில் இடையறாது இயங்கி வருவது பாராட்டுக்குரியது.
‘தமிழே நீ ஓர் பூக்காடு நான் அதிலோர் தும்பி’ எனும் தமிழ்ப்பற்று மிக்க பாரதிதாசனைப் போன்று தமிழுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கி வருகிறார் முனைவர் நா.நளினிதேவி அவர்கள்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 1945ஆம் ஆண்டு சூன் திங்கள் 26ஆம் நாள் நாகரத்தினம்-சுப்புலெட்சுமி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். உடன் பிறந்தோர் இருவர். தங்கையும் தம்பியும். இவரது துணைவர் வiலாற்றுப் பேராசிரியர்.வே.மாணிக்கம் அவர்கள். வரலாறு தொடர்பான ஆய்வு நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியிருக்கிறார்
1962 முதல் 1968 வரை மதுரை பாத்திமா கல்லூரியில் புகுமுக வகுப்பு தொடங்கி முதுகலை வரை பயின்றுள்ளார். மதுரை பல்கலைக்கழகத்தின் முதல் முதுகலை பட்டதாரிகளுள் ஒருவரான இவருக்கு வாய்த்த பேராசிரியர்கள் அ.சிதம்பரநாத செட்டியார், அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மொ.துரையரங்கனார், விசயவேணுகோபால் முதலான தமிழ் ஆளுமைகளிடம் தமிழ் கற்றதால் இவருக்குள் இருந்த தமிழ்ப்பற்று ஆழமாக வேரூன்றிச் செழுமைப் பெற்றது.
கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு எழுச்சியில் கலந்து கொண்டு சிறை சென்றார். ஈழத்தமிழர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட இவர் 1980இல் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1969இல் அருள்மிகு மீனாட்சி அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியேற்ற இவர் சேலம், திருப்பூர், நாமக்கல், புதுக்கோட்டை எனப் பல அரசு கல்லூரிகளில் பணியாற்றி 2004இல் பணி நிறைவு பெற்றார்.
தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கெனத் தனி பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதை உணர்த்தும் முறையில் செயல்பட்டதால் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டார்.