எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மறைவினையொட்டி , பதிவுகள் இணைய இதழில் வெளியாகிய அவரது சிறுகதையான ‘பால்ய விவாஹம்’ மீள்பிரசுரமாகின்றது –
– எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துகள் பலவற்றை உங்களில் பலர் இணையத்தில் வலைப்பூக்களில், இணைய இதழ்களில் (பதிவுகள் உட்பட), முகநூலில் படித்திருக்கலாம். எனக்கு அவரது எழுத்தில் பிடித்த விடயங்களிலொன்று அவரது நடை. ஒருவித நகைச்சுவை ததும்பும் எள்ளல் நடை. அடுத்தது அவரது சிந்தனைப்போக்கு. ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு திக்குகளில் படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிந்திப்பது. இன்னுமொரு முக்கியமான விடயத்திலும் அவரை எனக்குப் பிடிக்கும். பாசாங்குத்தனமற்ற, வெளிப்படையான , தற்பெருமையற்ற ஆளுமை. அவரது எழுத்தில் காணப்படும் இன்னுமொரு விடயம்: கூர்ந்து அவதானித்தல். தன்னைச் சுற்றிவரும் உலகில் நடைபெறும் செயல்களை, உறவுகளை. நிலவும் வாழ்வியற் போக்குகளை இவற்றையெல்லாம் மிகவும் கூர்ந்து அவதானிப்பது அவரது இன்னுமொரு திறமையான பண்பு. ‘பால்ய விவாஹம்’ என்ற அவரது இந்தச் சிறுகதையின் தலைப்பினைப் பார்ததும் ‘பால்ய விவாகம்’ பற்றிய விமர்சனமாக இருக்குமோ என்று எண்ணி வாசித்தால் இந்தச் சிறுகதையில் விரிந்த உலகு என்னைப் பிரமிக்க வைத்தது.
ஒரு சிறுவனுக்கு காய்க்காத வீட்டு வளவு மா மரத்துடன் நடைபெறும் பால்ய விவாஹம் பற்றியதே கதையின் மையக்கருத்து. அந்தச் சிறுவனே கதை சொல்லியும்; அவனது பெயரும் தாஜ் என்றிருப்பது கதையின் நடையில் ஒருவித சுயசரிதத் தன்மையினைப் படர விடுகிறது. ஆனால் அவர், தாஜ், தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் பின்னிய சிறுகதையாகத்தான் இதனைக் கொள்ளவேண்டும். அவ்விதம் மரத்துடனான திருமணம் அந்த மரத்தைக் காய்க்க வைக்குமென்ற கருத்தொன்றும் அந்தச் சிறுவன் வாழும் சீர்காழி இஸ்லாமிய சமூகத்தில் நிலவுகின்ற விடயத்தை இச்சிறுகதை வெளிப்படுத்துகின்றது. இதனைக் குழந்தைப் பேறில்லாது வாடும் பெண்களுக்கும் குறியீடாகக் கருத முடியும். இந்த கருத்தினூடு விரியும் கதையில் வரும் பாட்டி பாத்திரம் மிகவும் இயல்பான அனைவர் வாழ்வில் வந்துபோகும் பாத்திரம். உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றது. இது தவிர இந்தச் சிறுகதையில் சீர்காழியில் வாழும் இஸ்லாமிய மக்களிடையே நிலவும் பேச்சுத்தமிழை வாசிப்பில் நாம் அறிந்துகொள்கின்றோம். அத்துடன் அச்சமுதாயத்தின் வாழ்வில கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றியெல்லாம் இச்சிறுகதையினூடு அறிந்துகொள்கின்றோம். இது தவிர சுற்றியுள்ள இயற்கை பற்றிய அழகான வர்ணனையும் கதையில் விரவிக் கிடக்கின்றது. தாஜ் அவர்களின் இச்சிறுகதையான ‘பால்ய விவாஹம்’ சிறுகதை இதுவரை நான் வாசித்த அவரது சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை. உங்களையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும். வாசித்துப் பாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள் –
சிறுகதை: பால்ய விவாஹம் – சீர்காழி தாஜ்
இன்று வியாழக்கிழமை. நாளை வெள்ளி! ‘பள்ளி’ கிடையாது. கண்விழித்தவுடன் தோன்றிய முதல்நினைவே சந்தோஷம் தந்தது. நாளைக்கு காலை ஏழு, ஏழரை வரை துங்கலாம். எட்டும் தூங்கலாம். என்னை எழுப்ப என் அம்மா நிலையாய் நிற்கும்தான். ‘இத்தனை நேரம் தூங்குறானேன்னு…!’ பாட்டி விடாது. “பிள்ளை நல்லா தூங்கட்டும்டீ….” என சொல்வார்களே தவிர, எழுப்ப சம்மதிக்க மாட்டார்கள். ஆனால், பள்ளி இருக்கும் நாள்தோறும், என் பாட்டிதான் என்னை எழுப்பி விடும். அஞ்சேகால் விட்டா… அஞ்சரை! கொல்லை நடைக்கு போய் கிணற்றடியில் ‘கைகால்’ அலம்பிவிட்டு, பல்விளக்கச் சொல்லும். தூக்கம் கலையாது எழுந்து போய், கொல்லைக் கதவை திறப்பேன். திறந்த நாழிக்கு, கோழிகளின் அதன் குஞ்சுகளின் கெக்கரிப்பு, தூக்கக் கலக்கத்தை விரட்டும். இந்தக் கெக்கரிப்புதான் தினம்தினம் நான் கேட்கும் முதல் இசை! கொல்லைத் தாழ்வாரத்தின் கிழக்குப்பக்க மூலையில், கள்ளிப்பலகையிலான, கம்பி வலையிட்ட கோழிப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளையும் குஞ்சுகளையும் பார்க்க ஆவலெழும்! இன்னும் தீரவிடியாத, அந்த இருட்டில், அதுகள் எதுவும் சரியா தெரியாது. சப்தம் மட்டும்தான் ஆறுதல். தாழ்வாரத்திலிருந்து படியிறங்கி, இடதுபுறம் திரும்பி, பத்து தப்படி வைத்தால், சின்ன கிணறு. அதைச்சுற்றி சிமெண்ட்தளம்! கிணற்றை குனிஞ்சுப் பார்க்க மாட்டேன். பயம். பார்த்தாலும், தண்ணீர் தெரியாது. இருட்டுத்தான் கிடக்கும்! கொஞ்சத்துக்கு விடியல் கண்டுவிட்டதென்றாலும், எங்க வீட்டுக்கொல்லை இன்னும் இருட்டுதான்!