கவிதை: லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) கவிதைகள்

1. அவரவர் – அடுத்தவர்

லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) (* சமர்ப்பணம்: கவிதைப் பிதாமகர்களுக்கும் ‘க்ரிட்டிஸிஸ’ப் பீடாதிபதிகளுக்கும்)

‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று
அதிநவீனமா யொரு வரி எழுதியவர்
‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று
ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின்
தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால்
கவிதையாகிடுமாவென
அடுத்த கவியை இடித்துக்காட்டி
‘நிலம் விட்டு நிலம் சென்றாலும்
நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று
தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு.
பின்குறிப்பாய்,
‘கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால்
ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்’
எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து
“வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் என்று
சொத்தை ‘க்ளீஷே’க்களைக் கவிதையாக்கி
தத்துப்பித்தென்று உளறி வதைக்கிறாரெ”ன
சக கவியைக் கிழிகிழித்து
சத்தான திறனாய்வைப் பகிர்ந்த கையோடு
“முத்தான முத்தல்லவோ, என் முதுகுவலி
உலகின் குத்தமல்லவோ” என
கத்துங்கடலாய்க் கண்கலங்கிப்
பித்தாய் பிறைசூடிப் பிரபஞ்சக் கவிதையாக்கி
மொத்தமாய் மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்
வெத்துக்காகிதத்தை!

(*சமீபத்தில் வெளியாகியுள்ள ‘தனிமொழியின் உரையாடல்’ – கவிதைத் தொகுப்பிலிருந்து)

2. சதுர நிலவின் மும்முனைகள்

தன் சதுர நிலவை
உள்ளங்கைக்குள் பொதிந்துவைத்திருந்தது குழந்தை.
வட்டமாயில்லாதது எப்படிச் சந்திரனாகும் என்று
கெக்கலித்துக் குற்றஞ்சாட்டி
கத்தித்தீர்த்த திறனாய்வாளரைப் பார்த்து
கன்னங்குழியச் சிரித்து
தன் ஒரு நிலவைப் பல வடிவங்களில்
பிய்த்துப்போட்டதில்
பெருகிய ஒளிவெள்ளத்தைக்
கைகுவித்து மொண்டு குடித்து மகிழ்ந்த குழந்தை
நாவறள நின்றிருந்தவரை அன்பொழுகப் பார்த்து
அவர் கையிலிருந்த தரவரிசைப்பட்டியல் தாளைத்
தன் சின்னக்கைகளால் விளையாட்டாய்ப் பறித்து
அதில் சிறிது ஒளிநீரை அள்ளி ஊற்றி
அவரிடம் குடிக்கச் சொல்லித் தந்த பின்
தன்போக்கில் துள்ளி முன்னேறிச் சென்றது.

Continue Reading →

இலக்கியத் திறனாய்வும் இருக்கவேண்டிய தகுதியும்

லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) வணக்கம்.  இலங்கையில் விமர்சன மரபு இல்லை என்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருப்பது தொடர்பாய் பதிவுகள் இணையதள ஆசிரியர் வ.ந.கிரிதரன் தனது இதழில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்த உரையின் சுட்டியையும் தந்துள்ளார். விமர்சனம் என்ற இந்த ஒன்று தொடர்பாய் சில கருத்துகளை இங்கே பகிரத் தோன்றுகிறது. 

இலக்கியத்திற்கு விமர்சனம் தேவை, விமர்சன மரபு தேவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.  அதேசமயம், விமர்சகர் என்பவருக்கும் அதற்கான அடிப்படைத் தகுதிகள் சில உள்ளன என்பதையும் யாரும் மறுக்கவியலாது. அதேபோல், இலக்கிய விமர்சகராகத் தன்னை பாவித்துக்கொள்பவர் பொதுவெளியில் இலக்கிய விமர்சனம் குறித்துப் பேசும்போது ஒரு குறைந்தபட்ச கண்ணியத்தைத் தன் வார்த்தைகளில் கையாளவேண்டியது அவசியம் என்பதையும் எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இலக்கிய விமர்சனம் தொடர்பான எழுத்தாளர் ஜெயமோகனின் உரையைக் கேட்டேன். :[https://www.youtube.com/watch…] இலக்கியம் சார்ந்த ஒரு கருத்தை முன்வைக்க இத்தனை எகத்தாளமும் தடித்தனமும் அவசியமா? இலங்கைக் கவிஞர்கள் என 300 பெயர்கள் அடங்கிய் ஒரு பட்டியலை திரு பொன்னம்பலம் என்பவர் தந்ததாகக் குறிப்பிட்டு அதற்கு ஒரு பதில் எழுதியதாகவும் அதில் ” ஒரு நாட்டில் 200 நல்ல கவிஞர்கள் இருந்தால் அதுக்கு பூச்சிமருந்து கண்டுபிடித்து அழிக்கத்தான் வேண்டும். நாட்டுல சட்டம் ஒழுங்கு என்னாவது? மகளிருடைய கற்பு என்னாவது?” என்று பேசுகிறார். கேட்கவே அருவருப்பாக இருந்தது. அளப்பரிய வருத்தத்தைத் தந்தது. 

அவர் வேடிக்கையாகப் பேசியதாக சிலாகிக்கவும், இலக்கியத்தில் பகடிக்கு இடமிருக்கிறது என்று நியாயம் பேசவும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் மீது குறிப்பாக இத்தகைய வார்த்தைப்பிரயோகங்கள் வீசப்படும்போது அவர்கள் இதே பெருந்தன்மையோடு அவற்றை எதிர்கொள்வார்களா என்று தெரியவில்லை.

இலக்கியம் என்பது அடிப்படையாக மொழி சார்ந்தது. ஒரு மொழியில் எழுதும் எழுத்தாளர்கள் தங்களுக்குள் ஒத்துறவு உணர்வதும், சகோதரத்துவம் பேணுவதும் இயல்பு. ஆனால், எழுத்தாளர் ஜெயமோகன் இலங்கை எழுத்தாளர்களுக்கென்று அங்கே விமர்சன மரபு இல்லை என்றும், இலக்கிய தரப்படுத்தல் இல்லையென்றும் அங்குள்ள எழுத்தாளர்கள் தமிழ்நாட்டிலுள்ள கோட்பாடுகளையும் அளவுகோல்களையும் விமர்சனங்களையும்தான் நாடவேண்டியிருக்கிறது எனவும், தமிழ்ப்படைப்பாளிகளை நாடுவாரியாகப் பிரிக்கிறார். இலக்கியத்தில் உலகத்தரம் என்று ஒன்று இருக்கிறது. இதில் உலகெங்குமுள்ள தமிழ் எழுத்தாளர்களை இப்படி நாடுவாரியாகப் பிரித்துப்பேசுவது எப்படி சரியாகும்? பிரமிள் எந்த நாட்டுக்குச் சொந்தம்?

தமிழின் கவிஞர்கள், குறிப்பாக இலங்கைக் கவிஞர்கள் நடப்புச் சமூகச் சூழலில் எத்தனையோ புறக்கணிப்பினூடாகவும் , வாழ்வியல் நெருக்கடி ளினூடாகவும் கவிதை பால் கொண்ட ஆர்வம் காரணமாக அதில் தொடர்ந்து இயங்கிக்கொண் டிருக்கிறார்கள். அவர்களைத் தன் வார்த்தைகளால் இத்தனை கேவலப்படுத்தியிருப்பது மகா கொடுமை. இத்தகைய வார்த்தைப்பிரயோகங்கள் அவற்றைப் பிரயோகிப்பவர்களின் calibreஐத் தான் அடிக்கோடிட் டுக் காட்டுவதாக அமையும்.

அரைமணி நேர உரையில் அந்த நான்கு வரிகள் தான் உங்களுக்குக் கேட்டதா என்று கேட்பதில் எந்தப் பொருளுமில்லை; எந்தப் பயனுமில்லை. அவர் உரை ஒரு குடம் பாலோ, வேறு எதுவோ – அந்த நான்கைந்து வரிகள் வெகு அநாகரீகமானவை. எழுத்தாளர்கள் எத்தனை நுட்பமாக மொழியைக் கையாள்பவர்கள். ஒரு பொதுவெளியில் ஒரு கருத்தை நயமாக, நாகரீகமாக முன்வைக்க முடியாதா என்ன? தெரியாதா என்ன? எல்லாம் முடியும். எல்லாம் தெரியும் – ஆனாலும் இப்படித்தான் பேசுவது என்றால்…..?

Continue Reading →