எமது தாயகம் ஈழத்தில் 1970 களில் எழுத்துத்துறையில் சிறகு முளைத்து இலக்கிய வானில் இற்றைவரையில் உயர உயர பறந்து கொண்டிருக்கும்இலக்கியப் பறவை முருகபூபதி கங்காரு நாட்டின் சரணாலயத்திற்கு 1987 இல் புலம்பெயர்ந்தவர். கலை இலக்கியவாதிகள் நிரம்பிய பாரிஸ் மாநகரம் நோக்கி இந்தப்பறவை சிறகு விரித்தது. தனது கல்வி கண்ணை திறந்த வட்டுக்கோட்டை சித்தங்கேணிபண்டிதர் மயில்வாகனனாரின் நூற்றாண்டு நிகழ்வுக்காக பாரிஸ் வந்த முருகபூபதியை மூன்று தருணங்கள்சந்தித்தேன் . பல தடவைகள் தொலைபேசியில் பேசினேன். அவருடனான சந்திப்புகளும்,உரையாடல்களும் சிந்திக்க வைத்தன.அவரது வாயிலிருந்து சிந்திய
வார்த்தைகள் அனைத்தும் எனது மனக்கணினியில் பதிந்துள்ளன.
1972 ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழ் அவரது எழுத்து பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது. முதலில் அவரது ஊர் நீர்கொழும்பின் பிரதேச நிருபராக தனது பணியை ஆரம்பித்தார். இன்று நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவரது எழுத்துப் பயணம் அகன்று விரிந்து தொடர்கிறது.இந்தப் பாதை நீளமானது,அகலமானது என்பதை புரிந்து கொண்டு, முன்வைத்த காலை பின் வைக்காது தொடர்ந்து முன்னேறி வருகிறார்.
எங்கே சென்றாலும் எதனைப்பார்த்தாலும் எவரைச் சந்தித்தாலும் அவருக்கு தீனிதான் !! தான் கற்றதையும் பெற்றதையும் யதார்த்தம் குறையாமல், அற்புதமாக சுவையான ரசனையுடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வார். “பேப்பரையும் பேனாவையும் தவிர தனக்கு வேறு எதுவும் தெரியாது “என்றுதான்அவர் 1987 இல் அவுஸ்திரேலியா வந்தபோது தெரிவித்தார். அவர் இன்றும் எழுதிக்கொண்டே இருக்கிறார்.
வீரகேசரி வாரவெளியீட்டில் “இலக்கியப்பலகணி “ என்ற மகுடத்தில் ரஸஞானி என்ற பெயரில்தான்அவரது எழுத்துக்களை முதலில் வாசித்தேன். சமீபத்தில் அவரது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி என்ற ஆவணப்படத்தை பாரிஸில் பார்த்து ரசித்தேன். அதனை, அவரது அவுஸ்திரேலியா நண்பர்கள் எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒளிப்பதிவாளர் மூர்த்தி ஆகியோர் தயாரித்துள்ளனர். முருகபூபதி வீரகேசரி வாரவெளியீட்டில் இலக்கியப்பலகணி எழுதிய காலத்தில், தினகரன் வாரமஞ்சரியில் இலக்கிய விவகாரம் மற்றும்நாட்டு நடப்புகளை எஸ்தி என்னும் பெயரில் மூத்த ஊடகவியலாளர் எஸ். திருச்செல்வம் எழுதினார். யாழ்ப்பாணம் ஈழநாடுவில் அதன் செய்தி ஆசிரியர் கே.ஜீ.மகாதேவா இப்படியும் நடக்கிறதுஎன்ற பத்தி எழுத்தைஎழுதினார். அதுபின்னர் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. சிந்தாமணியில் அதன் ஆசிரியர் எஸ். டீ. சிவநாயகம் இலக்கியபீடம் என்ற வாராந்த பத்தி எழுத்துக்களை எழுதிவந்தார். பின்னளில் உதயன்-சஞ்சீவி யில் அதிரடி அரங்குஎன்ற பத்தியைமின்னல் என்ற பெயரில் மற்றும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் எழுதினார்.தற்பொழுது அவர் யாழ்ப்பாணம் காலைக்கதிர் பத்திரிகையில் இனி இது இரகசியம் அல்ல என்னும் தலைப்பில் அதே மின்னலாக ஒளிர்கிறார். இத்தகைய பத்திகளை வாசிப்பதற்கென்றே ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருந்தது. இன்றும் அந்த எண்ணிக்கை குறையவில்லை. இந்த எழுத்துகளை வாசிப்பதால் பல செய்திகளையும் சுவாரசியமான தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.