உமா மகேஸ்வரன் இலங்கையின் இனமோதலின் திசையை மாற்றிய மனிதன்!

உமாமகேஸ்வரன்- ஷேர்லி கந்தப்பா -( தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி  கந்தப்பா (Shirley Candappa)  அவர்கள் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையான Uma Maheswaran A MAN WHO CHANGED THE COURSE OF SRILANKA’S ETHNIC CONFLICT  என்னும் கட்டுரையினை முடிந்த வரையில் குறுகிய நேரத்தில் மொழிபெயர்த்திருக்கின்றேன். 18.02.2019 அன்று Daily Mirror  பத்திரிகையில் வெளியான கட்டுரை இது. ஈழத்தமிழர்களின் உரிமைக்கான ஆயுதபோராட்டத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி  கந்தப்பா அவர்கள் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரை உமாமகேஸ்வரன் அவர்களைப்பல்வேறு கோணங்களில் எடை போடுவதாலும், பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை உள்ளடக்கியுள்ளதாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான உமாமகேஸ்வரனின் ஆரம்பகால உறவு, தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் புரட்சிகர அமைப்பான ஜே.வி.பியுடனான தொடர்புகள் என பல விடயங்களை உள்ளடக்கியுள்ள கட்டுரையிது. )


பெப்ருவரி 18 உமா மகேஸ்வரனின் வருடாந்த நினைவுதினமாகும்.  உமா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகத்தலைவர், 18.2.1945 அன்று பிறந்தார்.  கோழைத்தனம்மிக்க கொலையாளி ஒருவனின் குண்டினால் 16.7.1989 அன்று அவர் பம்பலப்பிட்டியாவிலுள்ள ஃப்ராங்பேர்ட் பிளேஸில் கொல்லப்பட்டார்.

நான் முதன் முறையாக உமாவை அறிந்தது 1977 பொதுத்தேர்தலையடுத்து, வடக்கில் அகதி முகாம்களை அமைத்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளில் ஒருவராகவே.  அன்றைய பிரதமரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பொருளாதாரத்தைத் தனியுடமை  ஆக்குவதற்கான தனது திட்டங்களைச் சீர்குலைக்கக்கூடிய தனது எதிரிகளை அடக்குவதற்காகவும், அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களுக்கெதிராகவும், மலையகத்தமிழர்களுக்கு எதிராகவும் கூடக் குண்டர்களை ஏவி விட்டார். 

அப்பொழுது நான் தேசிய கிறிஸ்தவ சபையின் அபிவிருத்தி ஆணைக்குழுவின் செயலாளராகவிருந்தேன்.  அரசாங்க ஒத்துழைப்பால் உருவான இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு , இடம் பெயர்ந்த  தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான திட்ட உருவாக்கத்துக்கு உதவுவது என்னுடைய பணி. சுமார் 30,000 மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்; அவர்களில் பலர் மலையகத்தமிழர்கள்.  மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். அத்துடன் நூற்றாண்டுக்கும் அதிகமாகக் கடுமையாக உழைத்த தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

தமிழிழ மக்கள் விடுதலைக்கழகத்துக்காக கருத்துகளை வெளியிடும் பேச்சாளரான ஸ்கந்தா அவர்களின் கூற்றின்படி உமாவைக் கொன்ற சூத்திரதாரி கழகத்துக்குத் தெரிந்தவராக இருந்தபோதும், கொலையின் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருந்தபோதும், உமாவின் கொலைக்குத் திட்டமிட்ட, பின்னாலிருந்த சூத்திரதாரிகள் யாரென்பது தெளிவாகத்தெரியவில்லை.  கொலைக்கு உரிமை கோரிய , கழகத்திலிருந்து பிரிந்த குழுவான பரந்தன் ராஜனின் குழுவினரின் கோரிக்கையினை அவர் நிராகரித்திருந்தார். ராஜனும் அவரது குழுவினரும் இந்திய உளவுத்துறையினால் பராமரிக்கப்பட்டு வந்தனர்.  அவர்கள் உமாவின் கொலைக்கு உரிமை கோரியதற்குக் காரணம் அவ்விதம் கூறும்படி இந்திய உளவுத்துறை அவர்களை வேண்டியதனாலிருக்கக்கூடும்.

Continue Reading →