சிறுகதை: கப்பவூட்டுத் தம்பிகள்

* சமர்ப்பணம் : மறைந்த உயிர் நண்பர் தாஜுக்கு

எழுத்தாளர் ஆபிதீன்பறப்பதற்குத் தயாராக இருக்கும் ஒற்றை இறக்கையுள்ள விமானத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊரில் சில வீடுகளில் இருக்கிறது – மொட்டை மாடி மேல். ‘கப்பக்கார வூடு’ என்றால் முறைப்படி கப்பல்தானே இருக்க வேண்டும். இல்லை, அந்தக் காலத்தில் சைக்கூன் சிங்கப்பூர் என்று போய் பெரும்பணம் சம்பாதித்த சில சபராளிகள் அப்படித்தான் சும்மா விமானங்களை பெருமைக்காக வீட்டின் மேல் நிறுத்தினார்கள். முழுக்க முழுக்க சிமெண்ட்டால் கட்டப்பட்ட சிறு விமானங்கள்! எந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் முஸ்லீம்கள் நிகழ்த்தவில்லையென்று யார் சொன்னது? இப்போது உள்ள பரம்பரைக்கு அதற்கு பெயிண்ட் அடிக்கக்கூட முடியாததில் விமானங்களுக்கு ரோஷம் வந்து ஒரு பக்க இறக்கைகளை ஒடித்துக் கொண்டு விட்டன. புதிதாக அரபுநாடு போய் திரும்ப வரும் கப்பவூட்டுத் தம்பிகள், கஞ்சத்தனமாக தங்கள் வீட்டு நிலைப்படியிலோ புதிதாக வாங்கிய பைக்கிலோ அல்லது வேனிலோ ‘இது அல்லாஹ்வின் அருட்கொடை’ என்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதைப் பார்த்துத் திகைத்துப்போய் முடமாகிவிட்டன என்றும் சொல்லலாம்.

கப்பக்கார வீடு… கட்ட வெளக்கமாறானாலும் கப்ப வெளக்கமாறு…

எல்லாமே கப்பல் சம்பந்தப்பட்டது. இந்த மாலிமார், மரைக்காயர் எல்லாம் என்ன? கப்பல் சம்பந்தப்பட்ட பெயர்கள்தான். அதற்காக ரஜூலா கப்பலில் கக்கூஸ் கழுவிக் கொண்டிருந்த என் பெரிய மாமாவும், கப்பலே பார்க்காமல் விமானத்தில் கத்தாருக்குப் போன என் சின்ன மச்சானும் தன் பெயரை ‘நகுதா’ (கப்பல் கேப்டன்) என்று இன்னும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது! போதாதற்கு ஊர் அவுலியா வேறு மூழ்கவிருந்த ஒரு கப்பலைக் காப்பாற்றித் தொலைத்தார்கள். அவர்களின் கந்தூரியில் , பல வகை டிசைன் கப்பல்கள் – சோகப்பட்டினத்திலிருந்து நாங்கூர் வரை – 7 கி.மீ தூரம் ரோட்டிலேயே வந்து ,  ஊரெல்லாம் சுற்றும். சில ரயில்கள் , விமானங்கள் கூட ரோட்டில் ஓடுவதுண்டு. எல்லாம் அவுலியாவின் மகிமை !

கப்பக்கார வூட்டு ஆண்பிள்ளைகளை ‘கப்பவூட்டுத் தம்பி’ என்று செல்லமாக அழைக்கும் ஊர் அது . கப்பவூட்டு பெரியதம்பி; நடுத்தம்பி ; சின்னதம்பி ; தம்பி… அவரின் ‘தம்பி’…

சிராஜுதீனும் என்னைப் போல ஒரு கப்ப வூட்டுத் தம்பிதான். ஆனால் பக்கத்து ஊர். உட்டச்சேரி என்ற உண்மையான பெயரை எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள் என்பதால் வேண்டாம்.

சிராஜின் உற்சாகம் எனக்கும் ஒரு நாள் தொற்றியது. துபாய் வந்ததிலிருந்து ‘ஒரு நல்ல செய்தி’ என்று அன்றுதான் சொல்கிறார்.

‘எழுதுறதை வுட்டுப்புட்டீங்களோ ?’ – வெடைத்தேன். சந்தோஷமாக இருக்கும்போது நாம் உண்மையை சொன்னாலும் அது வேடிக்கையாகவே எடுத்துக் கொள்வார்கள். நான் சொன்னது பொய். சிராஜ் நன்றாகவே எழுதுவார்.

‘இல்லே.. அதைவிட சந்தோஷம். ரூமுக்கு ராத்திரி வர்றீங்க. கொண்டாடுறோம்!’. போனை வைத்து விட்டார். அர்த்தம் என்ன என்ன என்று படித்தவரைக் கேட்க வைக்கும் அவரது கவிதைகளின் சஸ்பென்ஸ் மாதிரி இருந்தது. அது எனக்கும் பிடித்திருந்தது. சொட்டுச் சொட்டாக வடித்தாலும் அல்லது ‘சர்’ரென்று ஊற்றினாலும் நீரா, உருகும் பனிக்கட்டியா என்று புரியாத வெண் மயக்கம்தான். இருந்தாலும் என்ன, அவரை எனக்குப் பிடிக்கும். அதிகாரம் செய்யும் அன்பு அவருடையது. எங்கே பார்த்தாலும் ‘எப்படி இருக்கிறீங்க?’ என்று மணிக்கட்டை அவர் அழுத்தும் அழுத்தில் என் நரம்புகள் முழுக்கப் பாயும் அன்பெனும் இரத்தம்…

Continue Reading →

கவிதையும் வாசிப்பும் : கவிஞர் தமிழ் உதயாவின் ஒரு கவிதையை முன்வைத்து….

எழுத்தாளர்  தமிழ் உதயாஇது கவிஞர் தமிழ் உதயாவின் கவிதை:

வீடு மயானமான தினம்
தெருவோ ஊரோ அன்றி நாடோ
தேவையாய் இருக்கக்கூடும்
வெளியேறும் அறையின்
ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும்
நிசப்தத்தின்
சப்த அடையாளம் கதவு
தாவிப்பறக்கும் மின்மினிகள் அக்கதவு நீக்கில் நசிபட்டு
மாசற்று ஒளிர்கிறது
அது மனிதத் துயரை முகவரியிட்டு மூடி மூடித் திறக்கிறது
கண்ணீர் ததும்பாத மனித சஞ்சாரம் ஓர் அமரகானத்தை இசைத்து விடலாம்
வீணையின் அடிநாதம் அறுந்திராத கணமொன்று
துடித்துக் கொண்டிருக்கையில்
தந்தியில் இளையோடும் உயிருக்கு துருவேறுவதில்லை தோழா

ஒரு கவிதையில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதுதான் ஒரு கவிதை நமக்குப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் முதற்காரணம் என்று தோன்றுகிறது. முழுமுதற் காரணம் என்று சொல்லலாமா, தெரியவில்லை. ஒரு கவிதையின் அனைத்துவரிகளும் நமக்குப் புரிவதால் மட்டுமே அந்தக் கவிதை நமக்குப் பிடித்ததாகிவிடும் என்று சொல்லவியலாது. அதேபோல், சிலவரிகள் புரியாமலிருந்தாலும் ஒரு கவிதை நமக்குப் பிடித்ததாகிவிடுவதும் உண்டு.

நாம் தினசரி பார்க்கும் ஒன்றை – ஒரு பொருளையோ, இடத்தையோ, மனிதரையோ, நிகழ்வையோ வேறொரு கோணத்தில் பார்க்கும் கவிதை – வாழ்க்கை குறித்த ஒரு புதுப்பார்வையையே நமக்கு ஏற்படுத்திவிடக்கூடிய வாய்ப்பு உண்டு. கவிதையின் வரிகளில் காட்சிப்படுத்தப்படும் சில நமக்குப் பிடிபடாமல் இருக்கலாம். இதனாலேயே சிலருக்கு ஒரு கவிதை பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம்.

ஒரு முழுக்கவிதையும் திட்டவட்டமாக ஒரு அர்த்தத்தை நமக்குத் தரவில்லை யாயினும் கூட (நமக்கு என்ற வார்த்தை அடிக்கோடிடப்பட வேண்டியது) அதில் சில வரிகள், சில படிமங்கள், காட்சியுருவாக்கங்கள் நம்மை ஈர்க்கலாம்; நெகிழ வைக்கலாம்.

Continue Reading →

நேர்காணல்: “ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை “ எனச்சொல்பவர்கள் யார் ..? – முருகபூபதி –

– எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ‘நடு’ இணைய இதழில் வெளியான நேர்காணலிது.-

- எழுத்தாளர் முருகபூபதி -எழுத்தாளர் கோமகன்உலக மகாயுத்த காலங்களில் வெடிக்காத, மண்ணில் ஆழப்புதையுண்ட குண்டுகளை வெடிக்கச்செய்வதும் அல்லது வலுவிழக்கசெய்வதும் அவ்வப்பொழுது நாம் பத்திரிகைகளில் படிக்கின்ற விடயங்கள். அது போலவே  ஒரு நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லிய கருத்தொன்று சரியாக மாதம் ஆறைக்  கடந்த நிலையில், ஈழத்துக்கவிஞர் கோ நாதன் அந்த உரையினை சமூக வலைத்தளங்களில் பகிர, ஜெயமோகனது கருத்துக்கு எதிராக சமூகவலைத்தளங்கள் அனல் கக்கின. ஆனால் அவரது உரையினைக் கூட்டிக்கழித்து விட்டு உரையின் மையச்சரடைப் பார்த்தால் அவர் சொல்ல வந்த கருத்தில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. 

முப்பதாண்டுகளுக்கு மேலாக போர் தின்ற எமது நிலத்தில் சரியான வகையில் திறனாய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தம். போருக்கு முன்னரான காலங்களில் பல்கலைக்கழகங்களில் இருந்த தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சீரிய விமர்சனப்போக்கையும் தமது காலத்துக்குப் பின்னர் ஒரு பரம்பரையையும் விட்டுச்சென்றனர். பின்னர் யுத்தம் இவையெல்லாவற்றையும் தின்றது போக, பல்கலைக்கழக மட்டங்களில் விமர்சன மரபை தமிழ்துறைப் பேராசிரியர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதும் யதார்த்தமாகும். இதனை தமிழகத்து எழுத்தாளர்கள் தமதாக்கி அண்டைய நாடுகளில் உள்ள எழுத்தாளர்களை வகைப்படுத்தியதுடன் நில்லாது எகத்தாளமாகப் பொதுவெளியில் கருத்துக்களையும் சொல்ல ஆரம்பித்தனர். 

ஆக எங்களிலே அடிப்படைத்தவறுகளை வைத்துக்கொண்டு  உணர்ச்சிவசப்பட்டு பொதுவெளியில் கூச்சலிடுவது நேரவிரையமாகும். ஒருவர் ஒரு தவறான கருத்தை முன்வைப்பாரானால் அதனை மறுதலித்து ஆதாரத்துடன் எதிர்வினையாற்றுவதே விமர்சன மரபு. அந்த வகையில் அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லெ முருகபூபதியை இது தொடர்பாக ஒரு சிறிய நேர்காணலை நடு வாசகர்களுக்காகச் செய்திருந்தேன். இனி ……….

1.தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் ஈழத்து இலக்கிய வெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை என்றும் தங்களால் அடையாளப்படுத்தப்படுகின்ற ஈழத்து எழுத்தாளர்களையே எல்லோரும் கொண்டாடுகின்றார்கள் என்றும் ஒரு காட்டமான விமர்சனத்தை வைத்திருக்கின்றார்.  ஈழத்து இலக்கிய வெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்துள்ளதா ? இருந்திருந்தால் அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா?

Continue Reading →