– பூர்ணிமா கருணாகரனின் பெப்ருவரி 23, 2019 , ஸ்கார்பரோவில் (கனடா) நடைபெறுவுள்ளதாக அறிகின்றோம். நிகழ்வு வெற்றியடைந்திட வாழ்த்துகள். –
எழுத்தாளர் பூர்ணிமா கருணாகரனின் கவிதைத்தொகுதியான ‘பெட்டைக் காகங்களிடு குயில் குஞ்சுகள்!?’ என்னும் கவிதைத்தொகுப்பினை முகநூல் நண்பர் யோக வளவன் தியா மூலம் கிடைத்தது. அதற்காகக் கவிஞருக்கு என் நன்றி. பொதுவாக நூல் மதிப்புரைக்காக நூல்களைத் தருபவர்கள் மதிப்புரைக்காகத் தம் நூல்களை அனுப்புவார்கள். ஆனால் கனடாவிலோ வசதியாக வாழ்பவர்கள் தம் நூல்களையும் வாங்கி அவற்றுக்கான மதிப்புரையினையும் எழுத வேண்டுமென்று நினைப்பார்கள். இந்நிலையில் எங்கோ தொலைவிலிருக்கும் கவிஞர் பூர்ணிமா கருணாகரன் தன் நூலினை எனக்குக் கிடைக்கச் செய்திருக்கின்றார். அதற்காக அவருக்கு மனப்பூர்வமான நன்றி. நூலினை வெளியிட்டுள்ள பதிப்பகத்தின் பெயரினை நூலில் காணவில்லை. அதனால் நூலை நூலாசிரியரே எடிசன் அச்சகம் உதவியுடன் நூலினை வெளியிட்டுள்ளார் என்று கருதுகின்றேன். எடிசன் ‘பிரிண்டர்ஸ்’ மூலம் வடிவமைப்புச் செய்யப்பட்டு நூல் வெளிவந்துள்ளதை நூலிலுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. பளபளப்புத் தாள்களில் நூல் சிறப்பாக வெளிவந்துள்ளது. வாழ்த்தப்பட வேண்டியதொன்று.
நூலினை மேலோட்டமாக வாசித்தபோது அவதானித்த சில விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்: ஆசிரியர் மீதான அவரது தந்தையாரின் ஆளுமை ஏற்படுத்திய பாதிப்புகளையும், அவற்றின் விளைவாக ஆசிரியரின் எண்ணங்களிலுதித்த கருத்துகளை வெளிப்படுத்தும் கவிதைகளையும் நூலின் வாசிப்பின்போது அவதானித்தேன். இவை தவிர நூல் ஆசிரியரின் பார்வையிலான பெண்கள் பற்றிய் நோக்கு பெண் உரிமை பற்றி விரிவாக அறியப்பட்டு, புரியப்பட்டுள்ள நிலையில் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிவிடலாம். கவிதைகளின் ஏனைய கூறு பொருட்களாக மனிதத்துவம், பெண் கல்வி, தாய்மை, தந்தைமை, பெண்ணுரிமை, விதவைகளின் நிலை, மானுட வாழ்க்கை, சமூகச்சீரழிவுகள் காரணமாக முதிர்கன்னிகளாக வாடும் பெண்களின் நிலை, புகலிடத்தமிழர்தம் வாழ்க்கை ஏற்படுத்தும் பாதிப்புகள், முன்னாட் போராளிகளின் நிகழ்கால நிலை, முதியவர்களின் நிலை, மானுட சமுதாயத்தில் தொடரும் வன்முறை என்று பல்வேறு விடயங்களைப்பற்றிய கவிஞரின் எண்ணங்கள், அறச்சீற்றங்கள் கவிதைகளாகியுள்ளன.
தொகுப்பின் முதற் கவிதை அவரது தந்தையாரின் ஆளுமையினை, அவ்வாளுமை கவிஞரின் மீது ஏற்படுத்திய பாதிப்பினை வெளிப்படுத்துகின்றது. கூடவே தந்தையாருக்கு நடந்த கொடுமையினையும் எடுத்துக்கூறுகின்றது. முதலாவது கவிதையான ‘அப்பாவின் கை பிடித்து..’ தந்தையின் ஆளுமையினைப் பற்றி விபரிக்கையில் அவரது தலைமைத்துவப்பண்பினை விபரிக்கின்றது. அவ்விதம் விபரிக்கையில் அவ்வாளுமை கவிஞருக்குக் கற்றுத்தந்த அப்பண்புகளையும் எடுத்துரைக்கின்றது:
” தலைவன் என்பவன் எப்படி
தலைமைத்துவம் என்பது
எப்படி என்பதைக்
கற்பித்து வந்தவன் நீ”
“மிருக வதை
வேள்வித் தடை
அன்றே
அதை
உரத்துச் சொன்னவன் நீ” என்று கூறும் கவிஞரின் வரிகள் தந்தையாரின் மிருக வதைக்கெதிரான குரலினையும் எடுத்துக்காட்டுகின்றன. கீழுள்ள வரிகள் தந்தையாரின் மேலுமொரு முக்கிய பண்பொன்றினை எடுத்துரைக்கின்றது.
“வீரத்தை உன் பேச்சில் காட்டி
விவேகம் செயலில் காட்டி
வணங்காய் முடியாய்
வாழ்ந்து மடிந்தவன் நீ”
இவ்விதமாக வணங்காமுடியாய் வாழ்ந்தவர் கவிஞரின் தந்தை. இவ்விதமாகத் தந்தையாரின் ஆளுமை. அது ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றிக் குறிப்பிடும் கவிதை இன்னுமொரு விடயத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது போர்ச்சூழலில் அவர் தந்தையை இழந்தது எப்படி, இழப்பதற்குரிய காரணம் அல்லது காரணங்கள் எவை என்பவை பற்றியெல்லாம் கவிதை ஆராய்கின்றது. பின்வரும் வரிகள் கவிஞரின் தந்தைக்கு ஏற்பட்ட நிலையினை விபரிக்கின்றது.