[ ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவந்து நூலுருப்பெற்ற நாவல்களிலொன்று எழுத்தாளர் நடேசனின் ‘அசோகனின் வைத்தியசாலை’. அது பற்றிய எழுத்தாளர் டாக்டர்.எம்.கே.முருகானந்தனின் கட்டுரையிது. – பதிவுகள்.காம்]
இந்தப் பயணம் என்னைச் சலிப்படைய வைக்கவில்லை. மாறாக மகிழ வைத்தது. வெளிநோயாளர் பிரிவு, வெளிநோயாளரைப் பார்வையிடும்; மருத்துவரின் அறை, சத்திரசிகிச்சைப் பிரிவு, மருந்தகம், பிரேத அறை என அந்த வைத்தியசாலை முழுவதும் சுற்றி வந்தபோதும். சோர்வு, களைப்பு எதுவும் ஏற்படவில்லை. சுமார் 40 வருடங்கள் மருத்துவனாக பணியாற்றிய, தொடர்ந்தும் பணியாற்றும் எனக்கு மருத்துவமனையை முழுமையாகச் சுற்றுவதில் சலிப்பும் களைப்பும் ஏற்படாதது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை. முதன் முறையாக ஒன்றைப் பார்ப்பது போன்ற வற்றாத ஆர்வத்திலும், தேடுதலிலும் என்னை முற்றாக மூழ்கடித்திருந்தேன். பல புதுமைகளும் ஆச்சரியங்களும் தங்கள் ரகசிய வாயில்களைத் திறந்து எனக்காகக் காத்திருந்தன. ஆம் அசோகனின் வைத்தியசாலை விஜயத்தைத்தான் கூறுகிறேன்.
மருத்துவமனைதான் ஆனால் மனிதர்களுக்கானது அல்ல. மிருகங்களுக்கானது. சுமார் 400 பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல். வண்ணாத்திக்குளம் புகழ் நடேசன் அவர்களது நாவல் இது. 2013ல் வெளியாகி இருக்கிறது. இப்பொழுதுதான் படிக்கக் கிடைத்தது. இது ஒரு புலம்பெயர் எழுத்தாளரின் படைப்பு. இப்பொழுது புலன்பெயர் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளை படிக்க முடிகிறது. அவர்களில் சிலர் நன்றாகவும் எழுதுகிறார்கள். இருந்தபோதும் பெரும்பாலனாவர்கள் தமது தாயக நினைவுகளையே படைப்புகளாகத் தந்து எம்மை அலுப்படைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக ஒரு சிலர் தமது புலம் பெயர்ந்த வாழ்வைச் சொல்கிறார்கள். ஆனாலும் அங்கும் தமிழரது வாழ்வு அதுவும் ஈழத்தை தாயகமாகக் கொண்டவர்களின் வாழ்வே படைப்பாகிறது. இருந்தபோதும் தமது புதிய சூழலின் வித்தியாசமான் அனுபவங்களையும், அங்கு அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் படைப்பிலக்கியமாக்கி தரும்போது எங்களுக்கு சில புதிய தரிசனங்களைத் தருகிறார்கள். அவை எமது ஈழத்து தமிழரது வாழ்வின் மற்றொரு அத்தியாத்தை படைப்புலகில் அலங்கரிக்கின்றன. ஆனால் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை ஒரு முன்னோடியான புதுமை வரவு. முற்று முழுதாக வேறுபட்ட களத்தில் வேற்று மனிதர்களின் கதையாக அமைகிறது. அவுஸ்திரேலியர்களுடன் ஐரோப்பியா, சீனா, மத்திய கிழக்கு போன்ற பல பகுதியினர்;; கதைமாந்தர்களாக உலாவருகிறார்கள். அவர்களின் மாறுபட்ட வாழ்வையும் மனோஉணர்வுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. இங்கு ஈழத் தமிழர் சுந்தரம்பிள்ளை என்ற மிருக வைத்தியர் மட்டும்தான். அவரது மனைவி சாருலதாவும் பிள்ளையும் ஓரிரு இடங்களில் தலையைக் காட்டினாலும் முக்கிய பாத்திரங்கள் அல்ல. அந்த மருத்துவமனை புகழ் பெற்றதாக இருந்தாலும் அதற்குள் மறைந்து கிடக்கும் உள் அரசியல், குத்துவெட்டுகள், பழிவாங்கல்கள், சிலரின் பொறுப்பற்ற தன்மை, பொறாமை, காமம், யாவும் நாவலில் பேசப்படுகிறது. அதேபோல நல்ல பக்கங்களும் கதையாகிறது. இவை எமக்கு மருந்தாகவில்லை. விருந்தாகிறது.
இலங்கை அரசியல், ஈழத்தமிழர் பிரச்சனை எதுவும் அழுத்தமாகப் பேசப்படவில்லை. இன்றைய ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புலுகப் போக்கில் இது மிகவும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும். தனது படைப்பு பேசும் விடயத்திற்கு தேவையற்றதை வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்து இணைத்து வாசகனைக் கவர வேண்டிய அவசியம் நாவலாசிரியருக்கு வேண்டியிருக்கவில்லை. மாற்றாக ஒரு பரந்த உலகை எங்கள் முன் விரித்து வைக்கிறார் நடேசன். தமிழர்கள் என்ற கூட்டிற்குள் முடங்கிக் கிடந்த எங்களை இறக்கை கட்டிப் பறக்கவிட்டு உலகளாவிய மாந்தர்களிடையே சுற்றுலா செல்ல வைத்துள்ளார். புதிய அனுபவங்களைப் பெற முடிந்தது.