33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள்!
[லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்த கவிதைகள். இவற்றில் சில ‘FLEETING INFINITY [கணநேர எல்லையின்மை] ; A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY ; Vol – I’ தொகுப்பில் இடம் பெற்றிருப்பவை. இங்கே லதா ரமாகிருஷ்ணனின் தெரிவிலான 33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இங்குள்ள 33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கையில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் தேர்வின் சிறப்பு தெரிகின்றது. இவற்றையெல்லாம் அவர் முகநூலிலிருந்து பெற்றார் என்பது முகநூலின் ஆக்கபூர்வமான பங்களிப்பை வெளிப்படுத்துவதுடன், முகநூலில் வெளியாகும் படைப்புகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றது. – பதிவுகள்.காம் ]
இத்தொகுப்பில் சமகாலத்தில் ஆர்வமாகக் கவிதை எழுதிவரும் 139 கவிஞர்களின் படைப்புகள் ஆளுக்கொரு கவிதை என்ற அளவில், மூலக்கவிதையும் அதன் மொழிபெயர்ப்புமாக இடம்பெறுகிறது. பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு உலகத்தரமான படைப்புகள் மொழிபெயர்க்கப்படுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தமிழின் தரமான படைப்புகள் ஆங்கிலத்திலும் ஆங்கிலம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப் படுதலும் என்பதை கவனப்படுத்தவும் இந்த முயற்சி உதவினால் மகிழ்வேன்.
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் நிறைய வருடங்களாக எழுதிவருபவர்கள், தொகுப்புகள் வெளியிட்டிருப்பவர்கள், கவிதை தவிர இலக்கியத்தின் பிற பிரிவுகளிலும் முனைப்பாக இயங்கி வருபவர்கள், சிறுபத்திரிகைகள் நடத்தி வருபவர்கள், இலக்கியப் பங்களிப்புக்காக விருதுகள் பெற்றிருப்பவர்கள். எத்தனையோ நெருக்கடிகளுக்கிடையில், எதிர்மறையான சூழல்களில் இலக்கிய ஆர்வத்தோடு இயங்கிவந்தவர்கள்; வருபவர்கள். அவர்களுடைய கவிதைகளை இங்கே தந்திருக்கிறேன். இவற்றில் பெரும்பாலானவை மொழிபெயர்க்கவென நான் தேர்ந்தெடுத்து வைத்திருப்பவை. இவற்றில்இந்தத் தொகுப்பில் இடம்பெற்றவை மூன்று நான்கு மட்டுமே.
இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள்!
1. அப்துல் ஜமீல்: சடலமாக கிடந்த இரவு
மின்கம்பியில் சிக்கி அடிபட்டுப்போன
இராட்சதவெளவால்போன்று
சடலமாகக் கிடந்தது
தனக்குள்அனேகரகசியங்களை
பதுக்கிவைத்திருந்தஇரவு
விண்மீன்கள் பூக்க மறந்து
நிலா கருமுகிலினுள் செமித்த கணத்தினிடை
கோடையில் அலைந்தது வானம்
இரவினை வாசிக்க
மின்மினிப்பூச்சிகள் சிலவற்றை
பறக்கவிட்டேன்
செத்துப்போன இரவினுள்
தொலைந்துபோன தங்களது கனவுகளை
சிலர் தேடிக்கொண்டிருந்தார்கள்
இரவினையார் கொலை செய்திருப்பார்களென்று
துப்புத்துலக்க அவகாசமில்லை
கவனிப்பாரற்றுக்கிடந்த
இரவின் வெற்றுடலை
பகலினுள் அடக்கம் செய்கிறேன்
உடன் விடிந்து விடுகிறது