எனது ‘அஞ்சலி: மறக்க முடியாத ‘ராஜு அங்கிள்’ (1946 -2019)’ பதிவினைப்பார்த்துவிட்டு நண்பர் ஆனந்தன் கிருஷ்ணப்பிள்ளை (Ananthan Krishnapillai) என்னைத்தொலைபேசி மூலம் அழைத்து தனது ராஜு அங்கிள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். ஆனந்தன் பகிர்ந்து கொண்ட எண்ணப்பதிவுகள் முக்கியமாவையாகப் படுவதால் அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
ஆனந்தன் அவர்கள் நாமெல்லாரும் இங்கு வருவதற்கு முன்பே வந்தவர். ஐரோப்பாவிலிருந்து வந்தவர் சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைந்த குற்றத்துக்காக, நாடு கடத்தப்படுவதற்காக, நாடு கடத்தும் பத்திரங்களிலும் அவரது கையெழுத்தைப்பெற்ற பின்னர் அவரைத் தடுப்பு முகாமில் தடுதது வைத்திருந்தார்கள். ராஜு அங்கிளின் மூத்த அண்ணர் ராமநாதன் முத்துச்சாமிப்பிள்ளையின் மனைவியார் அக்காலகட்டத்தில் யாழ் பொது வைத்தியசாலையில் ‘மேற்ரன்’ ஆகப்பணியாற்றிக்கொண்டிருந்தார். அங்குதான் ஆனந்தன் அவர்களின் அன்னையாரும் நீண்ட காலமாகப்பணியாற்றிக்கொண்டிருந்தார். தனது தாயாரிடம் தனது இக்கட்டான நிலையினைக் கூறியிருக்கின்றார் ஆனந்தன். பதிலுக்கு அவரது தாயார் ‘மேற்ரனா’கப் பணிபுரிந்து கொண்டிருந்த ராஜு அங்கிளின் அண்ணியாரிடம் விடயத்தைக் கூறியிருக்கின்றார். மூத்த அண்ணர் உடனடியாகவே கனடாவிலுள்ள ராஜு அங்கிளுடன் தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார்.