புன்னகை தவழும் முகம். தமிழில் பேசினால் குழந்தையின் மழலை உதிரும். ஆழ்ந்த அமைதி. இலக்கிய நண்பர்களை அரவணைக்கும் வார்த்தைகள். இந்த அடையாளங்களுடன் வாழ்ந்த நண்பர் உபாலி லீலாரத்ன அவர்களை இனிமேல் ஒளிப்படங்களில்தான் பார்க்கமுடியும்! இனிமேல் நிகழும் மொழிபெயர்ப்பு சார்ந்த உரைகளில் பேசுபொருளாவார். தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை முன்னர் ஒருவழிப்பாதையாகத்தான் இருந்தது. அந்தப்பாதையை இருவழிப்பாதையாகவும் இருகை ஓசையாகவும் மாற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் உபாலி லீலாரத்ன. அவரது மறைவுச்செய்தி எமக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் மலையகம், உயிர்த்தியாகங்களினால் பசுமையானது மட்டுமல்லாமல், இலங்கைப் பொருளாதாரத்திற்கு அறுபது சதவீதமான அந்நிய செலவாணியையும் ஈட்டித்தந்தது. ஆனால், அதற்குக் காரணமாக இருந்த மக்கள் அவலமான வாழ்க்கைதான் வாழ்ந்தனர். இன்றும்கூட ஒரு ஐம்பது ரூபாவுக்காகவும் போராடவேண்டி நிலையில் வாழ்கின்றனர்.
1977 இல் பதவியிலிருந்த அம்மையாரின் ஏகபுதல்வனுக்காகவே நுவரேலியா – மஸ்கெலிய என்ற புதிய தேர்தல் தொகுதி சிங்களப்பேரின ரீதியாக உருவாக்கப்பட்டது. அதன் பின்னணியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தமிழ்மக்கள் வாழ்ந்த மலையகக் காணிகளை அபகரித்து, பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்கும் சதியை அன்றைய அரசு மேற்கொண்டதால் வெடித்த போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவர்தான் சிவனு லெட்சுமணன் என்ற தொழிலாளி. அந்த டெவன் தோட்டப்போராட்டம் குறித்து கதைகள் எழுதப்பட்டுள்ளன. தி. ஞானசேகரன் எழுதிய குருதிமலை அந்தப்பின்னணியில் எழுதப்பட்ட குறிப்பிடத்தகுந்த நாவல்.
இனநெருக்கடி உச்சம் பெற்ற அந்தப்பிரதேசத்தில் பிறந்து இலக்கியப்பிரவேசம் செய்தவர்தான் அண்மையில் மறைந்துவிட்ட உபாலி லீலாரத்ன. ஆனால், அவரிடம் இனக்குரோதம் இருக்கவில்லை. அப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் – சிங்கள மக்களிடத்தில் தோன்றிய இனமுறுகளினால் அவருக்குக்கிடைத்த புத்திக்கொள்முதல் இன ஐக்கியம்தான். அங்கு நீண்டகாலம் வாழ்ந்தமையால், தமிழை பேசுவதற்கும் வாசிப்பதற்கும் கற்றுக்கொண்டார். ஆனால், தனது தனிப்பட்ட தேவைக்காக அவர் கற்கவில்லை. அவரிடத்தில் சமூகம் சார்ந்த ஆழமான பார்வை இயல்பிலேயே இருந்திருக்கிறது. மலையக தமிழ்மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டமையால்தான் அவரால் தே கஹட்ட – தேயிலைச்சாயம் என்ற நூலையும் எழுதமுடிந்தது. தனது தொடக்ககால வேலையை தலவாக்கலையில் ஒரு அச்சகத்தில் ஆரம்பித்திருக்கிறார். இங்கு மலையகத்தமிழ் மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். இங்கிருந்து நாடாளுமன்றத்திற்கும் பிரதிநிதிகள் தெரிவாகின்றனர். சி.வி. வேலுப்பிள்ளையிலிருந்து சந்திரசேகரனிலிருந்து இன்றைய மல்லியப்பூ திலகர் வரையில் அதனை நாம் அவதானிக்கலாம். உபாலி லீலாரத்ன பணியாற்றிய அச்சகத்தில் தமிழ்ப்பிரசுரங்களும் அச்சடிக்கப்பட்டமையால் அவரால், தமிழை எளிதாக புரிந்துகொள்ளவும் முடிந்திருக்கிறது. அதிர்ந்து பேசத்தெரியாதவர். அதனால் எளிமை அவரது இருப்பிடமாகியது. பின்னாளில் அவரது வாழ்க்கை தலைநகரில் மருதானையில் அமைந்துள்ள கொடகே புத்தகசாலையிலும் அதன்பதிப்பகம் சார்ந்தும் தொடங்கியதும் தென்னிலங்கையில் வசித்த தமிழ் – முஸ்லிம் எழுத்தாளர்களதும் நண்பரானார்.