ஆய்வு: நற்றிணை – கூற்று வைப்புமுறையும் சிக்கல்களும் (தலைவன் கூற்று பாடல்களை முன்வைத்து )

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
தமிழின் செவ்வியல் தன்மைக்கு எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் முதன்மை ஆதாரங்களாக உள்ளன. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகப் போற்றப்பெறும் நூல், நற்றிணை. எட்டுத்தொகை அகநூல்களுள் குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றிலுள்ள பாடல்களுக்கு, திணை, துறை கூற்று முதலான குறிப்புகள் முன்திட்டமிட்டு வரையறுக்கப்படவில்லை.

தனித்தனியாகக் கிடந்த தன்னுணர்ச்சிப்  பாடல்களை ஒரு நூலில் தொகுத்தளிக்கும்போது தொகுப்பாசிரியர் அல்லது பதிப்பாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளன. அக்குறிப்புகள் பாடல்களைப் புரிந்து கொள்வதற்கு வாயிற்கதவுகளாக அமைந்துள்ளன. அவை புரிந்து கொள்வதற்கு உதவுவதைப் போன்றே பாடலின் பொருண்மையாக்கத்திற்கு முரண்பட்டு சிக்கலையும் எழுப்புகின்றன. இக்கருத்தைத்  “திணை, துறை, கூற்று, பா, அடி, என்பன சங்க இலக்கியப் பாடல்களின் பொருள் விளக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவதே மரபாக இருந்து வருகிறது. சங்கப் பாடல்களைப் பொருள்கொள்வதற்கான இத்தகைய இலக்கிய மரபு அல்லது வழிகாட்டுதல் உதவியாக இருப்பது போலவே இடர்ப்பாடாகவும் உள்ளது. அதனால் தான் உரையாசிரியர்கள் பலரும் ஒரு பாடலுக்கு வெவ்வேறு திணை, துறை, கூற்றுப் பிரிப்பையும் அவற்றின் அடிப்படையில் வேறுபட்ட பொருளையும் கொண்டு வருகின்றனர்”1 என்று விளக்குகின்றார். இக்கருத்து முற்றிலும் ஏற்புடையதாக இருக்கின்றது.

ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள், மூன்று துறைக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து பார்க்கின்றபோது பிரதியை ஒற்றைப் பொருண்மையிலிருந்து பல்வேறு பொருண்மை உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்ற தன்மையினை உணரமுடிகின்றது. எனவே துறை சூழல் அடிப்படையில் வேறுபட்ட பொருளை உருவாக்குவதற்கு ஏதுவாக இருப்பதை அறியமுடிகிறது. மேலும் இக்கருத்தை “துறை என்ற சூழலால் கட்டுப்படுத்தப்பட்டு அதன் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே துறை என்ற சட்டகம் நீங்கிய பின்னர் இருக்கும் பனுவல் வாசகனுக்கான பல்வேறு வகையான வாசிப்புகளையும், பல்வேறு சட்டகங்களுக்குள் பொருந்துவதையும் விளக்கலாம்”2என்ற மேற்கோள் இடம்பெறுகிறது.

நற்றிணையில் முழுவதுமாகக் கிடைக்கப்பெற்றுள்ள 398 பாடல்களுக்கும் தொகுப்பாசிரியரால் கூற்று, துறை வகுக்கப்பட்டுள்ளன. அவை ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை முதலானவற்றின் தொகுப்பு நெறிமுறைகளுடன் பொருந்திவரவில்லை. நற்றிணைப் பாடல்களுக்கு திணை, துறை, கூற்று வகுக்கப்பட்டிருப்பினும் அவை நூலில் ஒரு சீராகப் பின்பற்றப்படவில்லை. ஐந்திணைப் பாகுபாடும், துறைக்குறிப்புகளும் ஒரு பொது வகைமைக்குள் விரவிவராமல் ஆங்காங்கே வரிசை (வகைமை) முறையற்று இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள் மூன்று துறைக்குறிப்புகள் வகுக்கப்பட்டிருப்பினும் அவ்வாறு வகுக்கப்பட்டதற்கான காரணம் சுட்டப்பெறவில்லை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 347: நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் இன்னுமொரு கருத்துப்பகிர்வு!

வேந்தனார் இளஞ்சேய்“நண்பர் வேந்தனார் இளஞ்சேய் புலனத்தில் யாழ் இந்து நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட இன்னுமொரு கருத்துப் பகிர்வு; பகிர்ந்துகொள்கின்றேன். இளஞ்சேய் என் பால்ய காலத்திலிருந்து நண்பராகவிருக்குமொருவர். அக்காலகட்டத்தில் நாமிருவரும் எம்மிடமுள்ள புனைகதைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி வாசித்து மகிழ்வோம். அவர் சிறந்த பேச்சாளர்; கவிஞர்; எழுத்தாற்றல் மிக்கவர். பயனுள்ள அவரது கருத்துகளுக்காக மீண்டுமொருமுறை நன்றி.” – வ.ந.கிரிதரன் –


இளஞ்சேய்:

“அன்பிற்குரிய பள்ளிக்கால நண்பர்களே, எம் பள்ளித்தோழன் கிரிதரனின் “அமெரிக்கா” என்ற குறுநாவல், மற்றும் “குடிவரவாளன்” என்ற நாவல், இவ்விரண்டு நூல்களையும் கடந்த சனி- ஞாயிறு முழுமையாக வாசித்தேன். நான் நூல்களை வாசிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவன். அந்த வகையில் கிரிதரன் என்னை கனடாவில் சந்தித்தபோது, அவரின் பல ஆக்கங்களில்- மேற்கண்ட இரண்டை எனக்குத் தந்திருந்தார். இந்த இரு நாவல்களையும் , இவ்வாறு நாட்டைவிட்டு, செய்த நல்ல வேலைகளை விட்டு , வெளிநாடுகளுக்கு , பெரும் செலவு செய்து , பலவித இன்னல்களுக்குட்பட்டு வந்து, வாழ்க்கையை மிகவும் அடித்தளத்தில் இருந்து தொடங்கி, இன்று தம் கடுமையான முயற்சியினால் உயர்வடைந்துள்ள நம்மவர்கள், எல்லோரும் வாசிக்கவேண்டும் . இந் நாவல்கள் ஆங்கிலத்திலும் வந்துள்ளன. இதனை எமது பிள்ளைகளுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும்.

இலங்கையில் இனக்கவரம் ஏற்படுத்திய அழிவுகள், படித்து முடித்து நல்ல உத்தியோகங்களில் இருந்தவர்களும், எல்லாவற்றையும் துறந்து , உயிரைக் காப்பாற்ற , புலம் பெயர் நாடுகளிற்கு சென்று, புலத்தில் இனக்கலவரத்தால் அலையுண்டு திரிந்த தம் உறவுகளுக்கு பணம் அனுப்ப அவர்கள் பட்ட பாடு, அவர்கள் வாழ்ந்த வாழ்வு, இவை எல்லாம் ஆவணப்படுத்தப் படல் வேண்டும். ஒவ்வொரு ஈழத் தமிழனின் இன்றைய புலம்பெயர் வாழ்வும், அவன் காலத்திய பிரச்சனைகளை, உறவுகளை விட்டு, ஊரை, உத்தியோகத்தைத் துறந்து , பனியிலும்- குளிரிலும்- கடும் வெய்யிலிலும் , அவன் உழைத்த உழைப்பை, தனிமையில் அவன் தவித்த தவிப்பை எல்லாம், நம் வருங்கால சமுதாயம் உணர்தல் வேண்டும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 346: இந்தியத் தொல்லியல் துறை விட்ட தவறும், நம்பிய கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனும்!

அண்மையில் பிரபல கலை, இலக்கியத்திறனாய்வாளர் தனது முகநூற் பதிவொன்றாகக் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் பற்றியொரு குறிப்பினையிட்டிருந்தார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:


“காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சினங்கொண்ட சிவனின் காலடியில் மிதிபடும் அரக்கனின் வலியில் கதறும் முகபாவம் தமிழர்களின் சிற்ப சாதனை.சிவனின் உடல் மொழியைக் கவனியுங்கள்.வலது கையில் ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறார்.துரதிருஷ்டவசமாக மணல் கல்லால் கட்டப்பட்ட இக்கலைக்கோயில் முதலாம் நரசிம்மவர்மனால் ( இராஜசிம்மன்) கி.பி.700- 728 கட்டப்பட்டது.அதிட்டானம் பகுதி மட்டும் கருங்கல்லில். இது சமணக் கோயிலாக இருந்து பின் சிவன் கோயிலாக மாற்றப்பட்டதாக மயிலை சீனி குறிப்பிடுகிறார்.மழையில் கரைந்து வரும் இக்கோயிலை எப்படி காப்பாற்றுவது?”


இதில் கோயிலைக்கட்டிய மன்னனான இராஜசிம்மனைத் தவறுதலாக முதலாம் நரசிம்மவர்மன் என்று குறிப்பிட்டிருந்தார். இதுவோர் தற்செயலான தவறு. அவருக்கு நிச்சயம் கட்டியவர் யாரென்று தெரிந்திருக்கும். எழுதும்போது தவறுதலாக இது போன்ற பிழைகளை நாம் அனைவரும் செயவதுண்டு.


அவரது பதிவை வாசித்தபோது இதனைக் கண்ட நான் அவரது பதிவிலேயே எதிர்வினையொன்றினை


“Giritharan Navaratnam //இக்கலைக்கோயில் முதலாம் நரசிம்மவர்மனால் ( இராஜசிம்மன்) கி.பி.700- 728 கட்டப்பட்டது// இரண்டாம் நரசிம்மவர்மன் என்று அழைக்கப்பட்ட ராஜசிம்மனால் கட்டப்பட்டது. முதலாம் நரசிம்மவர்மனே மாமல்லர்.” என்று இட்டிருந்தேன்.


தற்செயலாக மீண்டும் அப்பதிவு என் கண்களில் பட்டது. வியப்பாகவிருந்தது. அப்பதிவு இன்னும் அத்தவறுடனேயே காணப்பட்டது. அப்பதிவுக்கு எதிர்வினையாற்றிய ஏனைய எவருமே இத்தவறினைச் சுட்டிக்காட்டவுமில்லை.


மீண்டும் அவருக்கு உட்பெட்டியில் இதனைச் சுட்டிக்காட்டித் தகவல் அனுப்பியிருந்தேன். அதற்குப் பதிலாக இந்திரன் அவர்கள் “தொல்லியல்துறையின் அறிவிப்பைப் பாருங்கள் நண்பரே”  என்று பதிலிட்டிருந்ததுடன் , இந்தியத் தொல்லியல் துறையினரின் அறிவிப்புப் பலகையொன்றின் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.


நிச்சயமாக நான் இவ்விதமான பதிலொன்றினைக் கலை,இலக்கியத் திறனாய்வாளர் ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவர் கூறிய இந்தியத் தொல்லியல்துறையினரின் அறிவிப்புப் பலகையில் காஞ்சி கைலாசகோயிலைக் கட்டியவர் முதலாம் நரசிம்மவர்மன் என்றுதான் தமிழில் எழுதப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினரின் அறிவிப்புப் பலகையில் அவ்விதம் தமிழில் எழுதப்பட்டிருந்தால் பொய் உண்மையாகி விடுமா? கல்கியின் சிவகாமியின் சபதம் வாசித்த சாதாரண வாசகர் ஒருவருக்கே தெரியும் மாமல்லரும் முதலாம் நரசிம்மவர்மரும் ஒருவரே என்பது. காஞ்சி கைலாசதர் ஆலயத்தைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் முதலாம் நரசிம்மவர்மன் அல்லர் என்பது சாண்டில்யனின் ராஜதிலகம், ஜெகசிற்பியனின் மகரயாழ் மங்கை போன்ற சரித்திர நாவல்களைப்படித்த சாதாரண வாசகர் ஒருவருக்குத் தெரியும். இந்நிலையில் இந்தியத் தொல்லியல் துறையினரிட்ட தவறினை இதுவரை யாருமே கண்டுகொள்ளாதது வியப்பினைத் தருகின்றது. தவறினைச் சுட்டிக்காட்டியும் அதனை எழுதிய கலை, இலக்கிய விமர்சகர் இந்திரன் அதனை மறுத்தது இன்னும் வியப்பினைத்தருகின்றது. இந்திரன் அவர்கள் இந்தியத்தொல்லியல் துறையின் அறிவிப்புப்பலகையின் ஆங்கில விளக்கத்தைப் படித்திருப்பாரானால் அதில் தொல்லியல்துறை சரியாக இரண்டாம் நரசிம்மவர்மனான ராஜசிம்மன் என்று எழுதியிருப்பதை அறிந்திருப்பார். தொல்லியல்துறையின் தவறினையும் அறிந்திருப்பார். தமிழுக்கு இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் நிலை ஒன்றுதான்.

Continue Reading →