– “கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ,சர்வதேச அளவிலான சிறுகதைப் போட்டி – 2019 ல் இந்தச் சிறுகதை, மூன்றாவது பரிசு பெற்று, உலக அரங்கில் எழுத்தாளன் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இதற்காக மாண்புடை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்துக்கு என் மனம் நிறை நன்றி! நன்றி!” – ஸ்ரீராம் விக்னேஷ்
பத்திரிகைத்துறையில் எனது பதினெட்டு ஆண்டுகால அனுபவத்தில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு.கங்காதரன் போன்ற ஒரு விமர்சகரைப் பார்த்ததேயில்லை. சொல்லப்போனால், எனது பள்ளிக் காலத்திலிருந்து, பல்கலைக்கழக நாட்களிலும், பின் பத்திரிகை நிருபராகப் பணிபுரிந்த வேளையிலும், தொடர்ந்து அவரது விமர்சனங்களை அவ்வப்போ, பல பத்திரிகைகளில் படித்திருக்கின்றேன். ஆனால், தற்போது…. மூன்று ஆண்டுகளாகப், பொறுப்பாசிரியராய் நான் சென்னையிலே பணியாற்றும் “சிறகுப்பேனா” வாரப்பத்திரிகைக்கு அவரிடமிருந்து விமர்சனங்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்தான், அவரைப்பற்றிய விபரங்களை என்னால் அறியமுடிந்தது.
கங்காதரனுக்கு வயது எழுபது. மனைவியை இழந்தவர். திருநெல்வேலி மாவட்டம் – வீரவ நல்லூரில் ; மகன், மருமகள், பேத்தி என்ற உறவுகளுடன் வாழும் அவர், தனது மாதாந்த ஓய்வூதியப் பணத்திலே பாதிக்குமேல், தன்னுடைய இலக்கியப் பசிக்குத் தீனிபோடுவதில் செலவு செய்கின்றார். உள்ளூர் நூலகத்துப் புரவலர்களில் ஒருவராக இருக்கின்றார். அஞ்சல் அட்டை, அஞ்சல் உறை, மற்றும் தபால் தலை, ஆகியன வாங்கி வைத்துவிட்டு, பத்திரிகைகளுக்கும், அதிலே எழுதும் படைப்பாளிகளுக்கும் என, மாறிமாறித் தனது மனப்பூர்வமான பாராட்டுக்கள், கண்டனங்கள், சுயகருத்துக்கள் ஆகியவற்றை எழுதி அனுப்புகிறார்.
தமிழ் சம்பந்தமான மாநாடுகள், விழாக்கள் எங்காயினும் அங்கிருப்பார். நாலாவது தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தபோது, அங்குசென்றவர் சிங்களப் போலீசின் தாக்குதலுக்குள்ளாகிப், பட்ட காயங்களைக் காட்டி, “வீரமண்ணில் கிடைத்த விழுப்புண்” என்று இப்போதும் பெருமை பேசுகின்றார்.
“சிறகுப்பேனா”வில், “மெய்க்கீர்த்தி” என்னும் புனைபெயரில், நான் எழுதிவரும், “அவள் ஒரு காவல்தெய்வம்” என்னும் தொடரில், இதுவரை வெளிவந்த நாற்பத்தி ஆறு தொடருக்கும், தவறாது விமர்சனக் கடிதங்கள் எழுதியிருந்தார். பேச்சளவிலேதான் அவை கடிதங்கள். ஒவ்வொன்றும் திறனாய்வுத் தீபங்கள். “யார் சார் அந்த மெய்க்கீர்த்தி? அவரை நேரிலே பார்க்கவேண்டும்போல இருக்கின்றது….” அடிக்கடி கேட்டு எழுதுவார்.
கதையின் நாயகி சுமித்ரா. வயது இருபத்தெட்டு. உறவினர் யாருமில்லை. எட்டு வயதில் பெற்றோரை இழந்து, “அநாதை” ஆகியவள். குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு, பம்பாயில் விற்கப்படுகின்றாள். ஆனால், அங்கிருந்து தப்பி, குழந்தையற்ற பணக்காரத் தம்பதிகள் ஒன்றால், தத்தெடுக்கப்படுகின்றாள். காலப்போக்கில், சுமித்ராவின் சுவீகாரப் பெற்றோரும் காலமாக, அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசான அவள், அவற்றையெல்லாம் விற்றுவிட்டு ஊருக்கே வந்து, “அநாதை ஆசிரமம்” ஒன்றை நிறுவுகின்றாள். கணிசமான அளவு குழந்தைகள் – முதியோர்கள் சேருகின்றனர்.
Continue Reading →