முன்னுரை
தங்கள் உள்ளத்தில் எழும் உணர்வுகளைக் கவிதைகளாக வடித்தெடுப்பதில் சங்ககாலக் கவிஞர்கள் தனித்துவம் மிக்கவர்கள் என்பதற்குச் சங்கப்பாக்களே சான்று. ஏதேனும் ஒரு பாவகையில் அக்கருத்துகள் பாடல் வடிவில் வெளிப்படும் பொழுது தாங்கள் கூறவந்த கருத்துக்களுக்கேற்ற சொற்களைப் பயன்படுத்துவது புலவரின் மாண்பு. அப்பாடல்களுள் பெரும்பான்மை பலநூறு ஆண்டுகளைத் தாண்டி இன்றும் கிடைக்கின்றன என்றாலும் காலப்போக்கில் சிற்சில மாற்றங்களையும் அவை பெற்றுள்ளன என்பது இயற்கைத்தன்மைத்து. இயற்கையான நிகழ்வு சிற்சமயம் செயற்கையாய் அமைவதும் உண்டு. அவற்றைப் பற்றி விரிவாக ஆராயும் ஆய்வே மூலபாட ஆய்வு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதற்கு அடித்தளமிட்டவர்கள் உரையாசிரியர்கள். உரையாசிரியர்களுக்குப் பின் ஏடுகளில் இருந்த இலக்கண, இலக்கியங்கள் அச்சேறத் தொடங்கிய பொழுது இத்திறனாய்வுப் பார்வை இன்னும் வலுப்பெற்றது. குறிப்பாக ஒரே நூல் பலரால் உரை மற்றும் பதிப்புக்கு உட்படுத்தப்பட்ட பொழுது பல்வேறுவகையான கருத்துக்கள் தோன்றின. பதிப்பாசிரியர் அல்லது உரையாசிரியர் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பெனப்பட்ட சொற்களை மூலபாடம், பாடம் என்றும், ஏற்பில்லாதவற்றைப் பாடபேதம், பிரதிபேதம் என்றும் கூறத்தொடங்கினர். ஆயினும் பதிப்பாசிரியர், உரையாசிரியர் ஆகியோரைத் தாண்டி அப்பிரதியை வாசிக்கும் வாசகர்களுக்கு அது ஏற்புடையதாக இருக்கின்றதா என்பதை ஆராய்வது இன்றைய தேவையாக இருக்கின்றது. இந்நோக்கில் சங்கஇலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகையின் 167 ஆம் பாடல் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந்த அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே” – குறுந்.167
கூடலூர் கிழாரால் இயற்றப்பட்ட இப்பாடல் “கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது” எனும் துறையில் அமைந்துள்ளது. கற்புக் காலத்தில் தலைவி தலைவனுடன் இல்லறம் நடத்தி வந்த பொழுது அதைப் பார்த்துவிட்டு வந்த செவிலித்தாய், நற்றாயிடம் தலைவி குடும்பம் நடத்தும் பாங்கினை எடுத்துக்கூறும் சூழலில் இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது . இப்பாடலின் மூன்றாம் அடியாக அமைந்துள்ள “குவளை உண்கண் குய்ப்புகை கமழ” எனும்அடி மட்டும் இங்கு ஆய்வுப் பொருளாகின்றது. இவ்வடியின் இறுதிச் சொல்லாக அமைந்த ‘கமழ’ எனும் சொல் ஆய்வின் மையப்பொருளாக அமைகின்றது.