கவிஞனின் ஆழ்மனக்கடலில் நிகழ்ந்த அதிர்வில் மேலெழுந்த அலை வீச்சே கவிதைமொழி. ஆழிப்பேரலையாய் கவிஞனிடமிருந்து வெளிப்பட்டு வாசகனை தம்வசப்படுத்தும் ஆற்றல் கவிதைக்கு உண்டு. கவிதை மானுடத்தின் ஈரத்தை மெல்ல தம் மௌன மொழிகளால் கசியச்செய்யும். தேவைப்படின் இரத்தத்தையும் கசியச் செய்யும். இரத்தக் கசிவினுள் மானுடத்தின் அடிமைச் சங்கிலிகளின் கண்ணிகள் நெகிழ்ந்து அவிழ்படும் ஓசையை கேட்கமுடியும். கவியின் மனதில் கன்னல்பட்டு கருக்கொண்ட நிகழ்வு / அனுபவங்களின் மொழியே கவிதையாகிறது. கவியின் மனச்சட்டகத்தைப் பொறுத்து வார்க்கப்படும் கவிதைகள் கவிக்கு கவி வேறுபடுமெனின் அது மிகையல்ல. தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண்ணோ முழுமையும் மானுட ஈரம் கசிந்து பெரும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
“எஞ்சோட்டுப் பெண்” தமிழச்சியின் முதல் கவிதைத் தொகுப்பாக அமைகிறது. முற்றிலும் தன்னைச் சுற்றியே நகரும் இக் கவிதைகள் அப்பா, அம்மா, அப்பத்தா, தோழி, அக்கா, காமாச்சிப்பாட்டி, சிலம்பாயி, சேத்தூர் சித்தப்பா, சித்தி, முடியனூர்க்கிழவி, கொத்தனார் பாக்கியம், கச்சம்மா, கருப்பையா, குழந்தை வேல் ஆசாரி எனும் மனிதச்சித்திரங்களோடு தமக்கிருந்த அன்பை, அவர்கள் தம்மீது கொண்டிருந்த அன்பை கவிதையில் பரிமாறுகிறது.
கவிதையில் ஒவ்வொரு மனிதனும் மானுட ஈரத்தை நேசமாய் கசிவிப்பது என்னமோ அருவி நீரின் குளிர்ச்சியாய் உள்ளுணரச் செய்கின்றது. கவிதையில் உலாவும் மனிதர்கள் கல்வியின் மூலம் சூட்சுமங்களை கற்றுக் கொள்ளாத, மனதில் கபடமற்ற, உண்மையான அன்பை ஒளிரச் செய்பவர்களாக காட்சிப்படுகின்றனர். நெஞ்சில் ஈரம் கசியும் அந்த மனிதர்கள் குறித்த காட்சிப் படிமங்களின் வழியாக தமிழச்சியின் மானுட ஈரமும் நம்மை கவர்கின்றன. இது ஒருநிலை.
இன்னொருபுறம் தீப்பெட்டி பொன்வண்டு, கம்பங்கூழ், பனைநுங்கு, பதனீர், பெயர் எழுதிப்பார்த்த நெட்டிலிங்கம் மரம், சினை வயிற்றோடு மேய்ந்த சிவப்பி, ஆலமரம், கனகாம்பரம், கலர்ப்பூந்தி, அணில், வெண்கலச் செம்பு, பாம்படம், மார்கழி காலையின் பூசணிப்பூ, மருதாணி விரல்கள், காத்து கருப்பு, மயிற்பீலி, பரண், பொங்கல், திண்ணை, கைக்கடிகாரம், வளையல், கிளி, சாமியாகிப்போன தங்கச்சிப்பாப்பா, சைக்கிள் என கவிஞரின் வாழ்வைக் கொண்டு செலுத்திய பலவும் கவிதையை சுவீகரித்து நிற்கின்றன.