முன்னுரை
தமிழின் செவ்வியல் தன்மைக்கு எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் முதன்மை ஆதாரங்களாக உள்ளன. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகப் போற்றப்பெறும் நூல், நற்றிணை. எட்டுத்தொகை அகநூல்களுள் குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றிலுள்ள பாடல்களுக்கு, திணை, துறை கூற்று முதலான குறிப்புகள் முன்திட்டமிட்டு வரையறுக்கப்படவில்லை.
தனித்தனியாகக் கிடந்த தன்னுணர்ச்சிப் பாடல்களை ஒரு நூலில் தொகுத்தளிக்கும்போது தொகுப்பாசிரியர் அல்லது பதிப்பாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளன. அக்குறிப்புகள் பாடல்களைப் புரிந்து கொள்வதற்கு வாயிற்கதவுகளாக அமைந்துள்ளன. அவை புரிந்து கொள்வதற்கு உதவுவதைப் போன்றே பாடலின் பொருண்மையாக்கத்திற்கு முரண்பட்டு சிக்கலையும் எழுப்புகின்றன. இக்கருத்தைத் “திணை, துறை, கூற்று, பா, அடி, என்பன சங்க இலக்கியப் பாடல்களின் பொருள் விளக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவதே மரபாக இருந்து வருகிறது. சங்கப் பாடல்களைப் பொருள்கொள்வதற்கான இத்தகைய இலக்கிய மரபு அல்லது வழிகாட்டுதல் உதவியாக இருப்பது போலவே இடர்ப்பாடாகவும் உள்ளது. அதனால் தான் உரையாசிரியர்கள் பலரும் ஒரு பாடலுக்கு வெவ்வேறு திணை, துறை, கூற்றுப் பிரிப்பையும் அவற்றின் அடிப்படையில் வேறுபட்ட பொருளையும் கொண்டு வருகின்றனர்”1 என்று விளக்குகின்றார். இக்கருத்து முற்றிலும் ஏற்புடையதாக இருக்கின்றது.
ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள், மூன்று துறைக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து பார்க்கின்றபோது பிரதியை ஒற்றைப் பொருண்மையிலிருந்து பல்வேறு பொருண்மை உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்ற தன்மையினை உணரமுடிகின்றது. எனவே துறை சூழல் அடிப்படையில் வேறுபட்ட பொருளை உருவாக்குவதற்கு ஏதுவாக இருப்பதை அறியமுடிகிறது. மேலும் இக்கருத்தை “துறை என்ற சூழலால் கட்டுப்படுத்தப்பட்டு அதன் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே துறை என்ற சட்டகம் நீங்கிய பின்னர் இருக்கும் பனுவல் வாசகனுக்கான பல்வேறு வகையான வாசிப்புகளையும், பல்வேறு சட்டகங்களுக்குள் பொருந்துவதையும் விளக்கலாம்”2என்ற மேற்கோள் இடம்பெறுகிறது.
நற்றிணையில் முழுவதுமாகக் கிடைக்கப்பெற்றுள்ள 398 பாடல்களுக்கும் தொகுப்பாசிரியரால் கூற்று, துறை வகுக்கப்பட்டுள்ளன. அவை ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை முதலானவற்றின் தொகுப்பு நெறிமுறைகளுடன் பொருந்திவரவில்லை. நற்றிணைப் பாடல்களுக்கு திணை, துறை, கூற்று வகுக்கப்பட்டிருப்பினும் அவை நூலில் ஒரு சீராகப் பின்பற்றப்படவில்லை. ஐந்திணைப் பாகுபாடும், துறைக்குறிப்புகளும் ஒரு பொது வகைமைக்குள் விரவிவராமல் ஆங்காங்கே வரிசை (வகைமை) முறையற்று இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள் மூன்று துறைக்குறிப்புகள் வகுக்கப்பட்டிருப்பினும் அவ்வாறு வகுக்கப்பட்டதற்கான காரணம் சுட்டப்பெறவில்லை.